.

Pages

Friday, June 7, 2013

வரம்பு

வாழ்வியல் வயலின்  வரப்பு
.....வகுத்திடும் கொள்கை வரம்பு
தாழ்விலா வாழ்வை நிரப்பும்
.....தகுதியின் வரம்பே நிலைக்கும்
ஏழ்மையை வறுமைக் கோட்டின்
... எல்லையாய்ச்  சொல்லும் நாட்டில்
ஏழ்மையின் வரம்பும் நீங்கா
....இழிநிலை என்றும் காண்பாய் !

அளவினை மீறும் வரம்பே
...அசைத்திடும் நாக்கின் நரம்பால்
பிளந்திடும் பகையும் திறக்கும்
....பிறர்மனப் புண்ணில் சிரிக்கும்
அளவிலா வரம்பு கடந்தால்
..அக்கறைக் கூட இடர்தான்
களவிலாக் கற்பைப் பேண
...காதலில் வரம்பைக் காண்பாய் !

நாடுமுன் ஆசை நரம்பை
.....நாணெனக் கட்டு வரம்பால்
கேடுள குரோதம் மிகுந்தால்
...கோடென வரம்பைப் போடு
பாடுமுன் பாட்டை யாப்பின்
.....பாதையில் வகுத்தல் வரம்பு
கூடுமே ஓசை அதனால்
....குவலயம் போற்றும் மரபே !
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 06-06-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

21 comments:

  1. 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது போல வரம்பு மீறினாலும் நஞ்சே !

    நல்லதொரு கவி

    ரசித்து வாசித்தேன்

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நடுநிசி வரைக்கும் என் கவிதையின் தேடலில் இருந்து என் கவிதையைப் பதிவுக்குள் கொணர நீங்கள் மடலில் வேண்டிய நேரம் தான் எனக்கும் இணைய இணைப்புக் கிட்டியது. அபுதபியிலிருந்து அதிரைக்கு இறையருளால் வந்ததும் உங்களைத் தான் முதலில் தொடர்பு கொண்டேன். இக்கவிதையின் இலண்டன் வானோலி ஒலிபரப்பின் ஒலிப்பேழை அல்லது விழியம் கிடைக்க தாமதமானாதாலாற்றான், நேற்றிரவு வரை எனக்கும் இணையம் கிட்டியதால் உடன் உங்கள் பதிவுக்காக இவ்வரி வடிவம் மட்டும் அனுப்பினேன். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
    2. இலண்டன் வானொலியில் இக்கவிதை இடம்பெற்றுள்ள விழியத்தின் இணைப்பு:

      http://youtu.be/shcp3G2czGA

      Delete
  2. எதற்கும் ஒரு வரம்பு வேண்டும் என்பதை எடுத்து வந்த விதம் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். அன்புக் கவிஞரே! சென்ற முறை ஊரில் சந்தித்த ஞாபகங்கள் இன்று எனக்கு இப்பொழுது ஊரில் இருக்கும் தருணம் வருகின்றன. வாழ்த்துகளை வழங்கிய உங்கட்கு என் மனம்நிறைவான வாழ்த்துகளை உங்கள் பக்கமாக இணைத்துக் கொண்டு நன்றி கூறுகிறேன்.

      Delete
  3. வரம்பு ...

    கவிதை ..

    வீணை நரம்பை மீட்டிய உணர்வு .

    கவியன்பரின் கவி நயத்தில் என்றும் நிறைவே

    ReplyDelete
    Replies
    1. இசையை வெறுக்கும் நீங்கள் “வீணை நரம்பினை” விரும்பினாலும், யான் கூற வந்த “ஓசை”தரும் யாப்பின் நயத்தால் அவ்வண்ணம் மயக்கத்தை ஏற்படுத்தி விட்டதென நினைக்கிறேன்; எங்கட்கு யாப்பிலக்கணம் கற்பித்த ஆசான்கள், எதுகையைப் பற்றிச் சொல்லும் பொழுதெலாம், “எதுகை என்பது எளிதாய் எவரையும் மயக்கும்” என்பதையே அடிப்படையாகச் சொல்லிக் கொடுத்தார்கள். அஃது உண்மையே! அதனாற்றான், யாப்பின் வரம்புக்குள் வராத உரைவீச்சு என்னும் புதுக்கவிதையிலும் எதுகை, மோனை என்பது கட்டாயாமானதாகி விட்டது.இல்லையெனில், அஃது ஒரு கவிதை என்பதை விட மடக்கி மடக்கி எழுதப் பெற்ற ஒரு கட்டுரை தான் என்றாகி விடுமன்றோ? உங்களின் உளம்நயக்கும் வாழ்த்துக்கு என் உளம்நிறையும் நன்றிகள்!

      Delete
  4. வரம்போடு வாழ்வதே வாழ்வின் வரப்போடு வாழ்வதாகும். வரம்போடு வாழ முடிந்தால் அது வரமும் ஆகும். வரம்போடு வாழ்ந்த வாழ்வு வைர வாழ்வாகும் .

    சிறந்த சிந்தனைக் கவிதைகளைத் தருவதில் நீங்கள் வரம்பு வைக்காதீர்கள் கவியன்பன் அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. வரம்பு வாழ்வுக்குத் தான்; ஆனால் என் கவிதைகளின் எண்ணிக்கை வரம்பைக் குறைக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்ட முனைவர் அவர்களே!

      காலம் என்னும் ஆயுள் வரம்புக்குள்,இன்ஷா அல்லாஹ், கலாம் என்னும் கவியன்பன் தருவான் தொடர்ந்து கவிதைகளை என்று உறுதியளித்தவனாய் தங்களின் நெஞ்சம் நிறைவான வாழ்த்துக்கு நன்றி கூறுகிறேன்.

      Delete
  5. /// அளவினை மீறும் வரம்பே
    ...அசைத்திடும் நாக்கின் நரம்பால்
    பிளந்திடும் பகையும் திறக்கும்
    ....பிறர்மனப் புண்ணில் சிரிக்கும் ///

    அருமையான வரிகள் பல... வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    தாயின் கருவறையில் ஒரு குழந்தை முழுமையாக தங்கும் நாட்கள் 285, அதாவது 9 மாதங்கலும் 15 நாட்களும் ஆகும், இதுதான் வரம்புக்கு உட்பட்ட நாட்களாகும், இதில் குறைந்த நாட்களில் பிறந்தால் குழந்தைக்கு ஆபத்து, அதிக நாட்களில் பிறந்தால் தாயிக்கு ஆபத்து.

    இறைவன் எப்படி வகுத்து வைத்துள்ளான், மனிதனாகிய நாமும் ஆறாவது அறிவை பயன்படுத்தி வரம்பை தெரிந்து கொண்டு அதுக்குள் வாழ்ந்தால் உலகத்தில் பிரச்சனை ஏதும் இல்லையே.

    மனிதன் அந்த முறையில் வாழ்வானா?

    மச்சான் உங்கள் கவிதையை ஒரு கட்டமைப்புக்குள் வடித்து விட்டீர்கள், நல்ல அறிவுபூர்வமான கவிதை, உங்கள் கவிதை ஒரு கட்டமைப்புக்குள் இருந்தாலும் அதன் விளக்கங்கள் கட்டமைப்பை உடைத்துக் கொண்டு அல்லவா வெளி வருகின்றது.

    வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மச்சான்!
      ஆம், வயது வரம்பு பணிமூப்புக்கு; வரி வரம்பு செய்யுள் என்னும் யாப்புக்கு என்பதும் உலகியல் நியதி மச்சான், உங்களை அன்பொழுக உண்மையான உறவுநிலையில் ‘மச்சான்” என்றழைப்பதில் கூட எள்ளி நகையாடும் கூட்டம் இருப்பதைப் பற்றிக் கிஞ்சிற்றும் பொருட்படுத்த வேண்டா.

      இன்ஷா அல்லாஹ் இன்றோ நாளையோ சந்திக்கலாம்

      என் தொடர்பு எண் 7200332169

      வாழ்த்துக்கு நன்றி, மச்சான்!

      Delete
    2. தொடர்பு கொள்ள எண்கள் கிடைத்து விட்டது, நிச்சயம் தொடரும் நம் சந்திப்பு இன்ஷா அல்லாஹ்.

      Delete
  7. வாழ்க தமிழ்.
    வளர்க அய்யாவின் எழுத்துப்பணி.

    // குவலயம் //

    அய்யா

    மேற்கண்ட வார்த்தையின் விளக்கத்தைத் தாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி

      “குவலயம்” என்றால் உலகம்.

      Delete
  8. Replies
    1. சபீராக்கா ஊரிலேயா அல்லது திருப்பூரிலா ?

      அநேக எழுத்தாளர்கள் ஊரில் இருப்பதால் ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம்

      Delete
    2. அடியேன் இறையருளால், ஊர் வந்து முதல் ஜூம் ஆ வில் முதலில் உங்களைத்தான் காண்பேன் என்று நினைத்து, ஜும் ஆ முடிந்துச் சுற்றிச்சுற்றிப் பார்த்தேன்;இப்பொழுதுதான் புரிந்தது நீங்கள் ஊரில் இல்லை; திருப்பூரில் இருக்கின்றீர்கள் என்று. உங்களின் வரவேற்புக்கு நன்றி.

      Delete
  9. வரபின் எத்தனை வரிகள் வாழ்வின் எத்தனை பாதைகள் வாழ்கையில் எத்தனை தடைகள் அத்தனையும் உங்கள் கவிப்பணிகே சமர்ப்பணம் வாழ்க உங்கள் கவிப்பணி வளர்க உங்கள் எழுத்து பணி வாழ்த்துக்கள் அன்புக் கவிஞரே அபுல் கலாம் காக்கா அவர்களே.

    ReplyDelete
  10. 05/06/13 புதன் இரவு துபை விமானநிலையத்தில் எதிர்பாராமால் நீங்கள் என்னை அடையாளம் கண்டு அகம் மகிழ்ந்து கைகுலுக்கி இன்முகத்துடன் இனிய வழியனுப்பி வைத்தக் காட்சிகளின் நினைவலைகளுடன் உங்களின் இன்றைய வாழ்த்துரைக்கும், அன்றைய வழியனுப்புதலுக்கும் என் உளம்நிறைவான நன்றிகள், என் அன்பு நேசர் ஹபீப் அவர்களே!

    நீங்கள் ஊர் வரும் திகதியைக் குறிப்பிட்டால், விழிப்புணர்வு வித்தகரின் “தேநீர் சந்திப்பு” நிகழும் என்று காத்திருக்கிறேன்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers