.

Pages

Thursday, July 11, 2013

ஞானியும் தேவதையும்

ஒரு தோல்வியைப் போல்
என்னைக் கேள்வி கேட்கும்
ஞானி வேறொன்றில்லை

நல்ல வெற்றியைப் போல்
எனக்குப் பதில் சொல்லும்
தேவதையும் வேறொன்றில்லை

சின்னச்சின்னத் தோல்விகளும்
மனதில் பெரியப்பெரிய கேள்விகள்

விடைதேடி விடைதேடி
இறுகிப்போன இதயம்
வெற்றி வந்து வாழ்த்துச் சொல்ல
வான்நீலம் கிழியக்கிழிய
சிறகடித்துப் பறக்கிறது

எத்தனையோ அறிஞர்கள்
எப்படியெல்லாமோ கேள்வி கேட்க
எதுவும் சரியாய்ச் சென்றதில்லை
செவிகளுக்குள்

ஆனால் தோல்வி வந்து
ஒரு வினாத் தாண்டவமாட
மனதின் அத்தனைக் கண்களும்
மொத்தமாய் விரிந்து கொள்கின்றன
அதிசயமாய்

ஆயிரம் கருணை விரல்கள்
ஆழ்மனப் புண்களில்
அமுதவருடல் கொடுத்தாலும்
ஒரு வெற்றி வந்து
விருந்து படைத்தாலன்றி
ஆறுதல் பூரணமாவதில்லை
அன்புடன் புகாரி

4 comments:

  1. தோல்வியே வெற்றிக்கு அறிகுறி

    ReplyDelete
  2. தோல்வியே ஞானி என்ற தோழர்க்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. விளக்கம் வேண்டுவோர்க்கு தெளிவுவரும்வரை தேவைப்படின் ஞானியும் கேள்விகளும் கேட்பார்கள் , தோல்வியும் கேள்வி கேட்க்கும் ஏன் ? எப்படி ? இனி அந்த தோல்வி வராமல் வெற்றி அடைவதற்கு என்ன வழி ? என்று.

    ஞானியை தன் மனதிற்கு ஒப்பிட்டு கவிதை எழுதப்பட்டுள்ளது. ஆனால் மனம் ஞானியல்ல. மனம் ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் வெளிப்படுத்தும். ஞானம் என்பது அறிவு. பொதுவாக இறை சம்பத்தப்பட்ட அறிவுகளுக்கு பயன் படுத்தப்படுகிறது. ஆனாலும் முழுமைய தரும் அறிவை ஞானம் என்று குறிப்பிடுகின்றனர்.

    ஞானியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காண்கின்றனர். அவரவர் அறிந்த நிலையை பொறுத்து. தெளிவு தெரியதெரிய பார்ப்பவர்களின் அறிவு படித்தரத்தை பொறுத்து அவர்களின் பார்வை மாறிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் ஞானியின் உள்ளம் இறைமையை நாடியே நிற்கும்.

    ***
    ஆனால் தோல்வி வந்து
    ஒரு வினாத் தாண்டவமாட
    மனதின் அத்தனைக் கண்களும்
    மொத்தமாய் விரிந்து கொள்கின்றன
    அதிசயமாய்

    ஆயிரம் கருணை விரல்கள்
    ஆழ்மனப் புண்களில்
    அமுதவருடல் கொடுத்தாலும்
    ஒரு வெற்றி வந்து
    விருந்து படைத்தாலன்றி
    ஆறுதல் பூரணமாவதில்லை
    ***
    வெற்றியை நாடும் மனம் இப்படித்தான் இருக்கும் என்று கவிஞர் எழுதியுள்ளார்.

    நலமுடன் வாழ்க!

    ReplyDelete
  4. ஞானியும் தேவதையும் கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

    RAMADHAN KAREEM

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers