.

Pages

Monday, July 22, 2013

வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா !?

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக வாழும் மக்களான முஸ்லிம்களின் இயல்போடு ஒத்துவராத, அந்த மக்களோடு ஒன்றிப்போக இயலாதவங்கியியல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைமுறையில் இருகின்ற காரணத்தால் வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வங்கிகளோடு பண பரிவர்த்தனை செய்ததின் காரணமாக இந்தியா முழுவதும் ஏறக்குறைய 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிப் பணம் கேட்பாரற்று, முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது. கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக  மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட – RBI Legal News and Views என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆகவே இஸ்லாமிய நெறிமுறை மற்றும் மார்க்க வழிகாட்டலுக்கு உட்பட்ட வங்கி முறை ஒன்று இந்தியாவிலும் அவசியம் என்பதை பொது மக்களும் வங்கி மற்றும் நிதித்துறையும் உணரத்தொடங்கிவிட்டனர். எனவேதான் இந்தியப் பிரதமரின்  வாயாலேயே அந்த முத்து உதிர்ந்து இருக்கிறது.

இஸ்லாமியர்களுக்கென தனி சட்டங்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கப் பட்டிருப்பதையே அவ்வப்போது நோண்டி நொங்கு எடுத்துக் கொண்டிருக்கும் மதவாத சக்திகள் இஸ்லாமிய வங்கி முறை ஏற்படுத்தப் பட்டாலும் இடையூறு செய்யவும் எதிர்ப்புக்குரல் எழுப்பவுமே  செய்வார்கள். ஆனால் இது காலத்தின்  கட்டாயம். ஒட்டுமொத்த நாட்டின் அனைத்து சமூகத்தையும்  வட்டியின் கொடுமையிலிருந்து விடுபடவைக்கும் அருமருந்து என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும்.

இஸ்லாமிய வங்கி முறைமை என்றால் என்ன? என்பதையும் அதன் அடிப்படைகள் யாவை என்பதையும்  அவ்வங்கி முறைமையினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இந்தியா போன்ற  நாடுகளில் அமுல்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தும் இடையூறுகள்  யாவை போன்ற பொதுவான விஷயங்களை இங்கு குறிப்பிடுவது   அவசியமாகும்.

 முதலில் நாம் வட்டியில்லாத வங்கி முறை அதாவது இஸ்லாமிய வங்கி முறை என்றால் என்ன? என்று புரிந்து கொள்ள வேண்டும். இது பற்றி இஸ்லாமிய அறிஞர்களும் கூட பல்வேறு வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர். இஸ்லாமிய வங்கி முறை இந்தியாவுக்கும் வேண்டுமென்றால் நம்மைப் பார்த்து முறைப்பவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் அதன் பயன்பாட்டை அனுபவத்தில் உணர்ந்து கொண்டால் அட! பேஷ் ! பேஷ்! ரெம்ப நன்னா இருக்கு என்று போற்றுவர்.

“இஸ்லாமிய வங்கி முறை என்பது அவசியம், அது ஆன்மீகத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு துறையாகும். இஸ்லாத்தின் உறுதிமிக்க அடிப்படைகளுக்கு ஏற்ப அவை வரையறுக்கப்பட்டதாக காணப்படும்”  என்று Dr. Ziauddin Ahamed  என்கிற பொருளியல் அறிஞர்  கூறுகின்றார்.

“இஸ்லாமியப் பொருளாதார வழியில் செல்வத்தைப் பயன்படுத்துவதற்கும், வளப் பங்கீட்டை சீர்படுத்துவதற்கும், நீதியையும் சமூகப் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கும், சேவைகளை வழங்குவதற்கும், செல்வங்களை ஒன்று திரட்டி தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற நிதி சார் நடவடிக்கைகளை இஸ்லாமிய வரையறைக்குள் மேற்கொள்கின்ற நிறுவனமே இஸ்லாமிய வங்கியாகும்” என முனைவர்  அஹமது நஜ்ஜார் என்ற மற்றொரு  அறிஞர் கூறுகின்றார்.

இஸ்லாமிய வங்கி முறை (Islamic Banking System)  என்பது கொடுக்கல் வாங்கலின் போது அல்லது பணப்பரிமாற்றலின் போது அல்லாஹ்வும் அவனது அருட் தூதரும்  எச்சரித்த  வட்டியிலிருந்து தவிர்த்துக்கொள்ளக் கூடிய நாடு தழுவிய  ஒரு நிதிக் கொள்கையாகும். மற்றும் இஸ்லாமிய பொருளாதாரத்தினுடைய நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு உதவி புரியக் கூடிய வகையில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதுமாகும். இந்த வங்கி முறைகள், பொருளியல் சமத்துவத்தை போதிக்கும் இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின்  அடிப்படைகளிலிருந்து எழுப்பப்பட்டதாகும். (இந்த முறைகள் ஆரம்பிக்கப் பட்ட வரலாறு தொடர்ந்து எழுதப்படும்.  )

இஸ்லாமிய வங்கி முறை  இலாபம் நட்டம் ஆகிய இரண்டையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய அதை கபூல் செய்துகொள்ளக் கூடிய உன்னதத் தன்மையும்  வாய்ந்ததாகும். எனவே இஸ்லாமிய வங்கிகள் PLS ( Profit and Loss Sharing ) என அடையாளப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில் இஸ்லாமிய வங்கியியலின் நோக்கங்களை நாம் பின்வருமாறு நோக்கலாம்.

1. வட்டியிலிருந்து விடுபடல்
2. நிச்சயமற்ற தன்மையிலிருந்து தவிர்த்து கொள்ளல்
3. சூதாட்டத்தை நிராகரித்தல் 
4. ஹராம் – ஹலால் பற்றி கவனத்திற் கொள்ளல் 
5. ஸகாத் – இஸ்லாமிய வரியை பேணி நடைமுறைப்படுத்தல் 

எனவே இஸ்லாமிய வங்கியொன்று தனது செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது மேற்கூறப்பட்ட அடிப்படைத் தத்துவங்களை பின்பற்றியே செயல்பட வேண்டும்.

ஏனெனில் அவை இஸ்லாமிய பொருளியல் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்ட அழகிய மாளிகையாகும். இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகள்  நாம் ஏற்கனவே விவாதித்தபடி படைக்கப் பட்ட மனிதர்களால் உருவாக்கப் பட்ட  பொருளியல் கோட்பாடுகளைப்  போல அல்லாமல் படைத்த இறைவனிடமிருந்து பெறப்பட்டதாகும்.

இக்கோட்பாடானது இஸ்லாமிய அடிப்படை சட்ட மூலாதாரங்களான இறைவேதம் மற்றும் நபி மொழியின்  மூலம் தெளிவுபடுத்தப்பட்டதாகும். எனவேதான் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் வட்டியில்லாத வங்கிமுறையான இஸ்லாமிய வங்கிமுறையினடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆவிற்குட்பட்ட முறையில் தமது கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

இன்றைய உலகில் இஸ்லாமிய வங்கியியல் முறையொன்று முஸ்லிம் அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இது பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

அந்த வகையில் இஸ்லாமிய வங்கியியல் எதிர்நோக்குகின்ற பெரியதொரு பிரச்சினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழுகின்ற இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதாகும்.

முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதில் பின்வரும்  காரணிகள் இடையூறுகளாக  காணப்படுகின்றன.

1. இஸ்லாமிய வங்கிகளுக்கென ஒரு தனியான மத்திய வங்கி ஏற்படுத்தப் படாதது அல்லது இருக்கும் மத்திய வங்கியில் இதற்கென ஒரு தனித்துறை அமையாதது. 

2. இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சியின் போது அரசினது அல்லது மத்திய வங்கியினது பொதுவான தலையீடுகளுக்கும்  கட்டுப்பாடுகளுக்கும் உட்படவேண்டிய கட்டாயம். 

3. தற்போது நடைமுறையிலுள்ள கவர்ச்சிகரமான வட்டியுடன் கூடிய வங்கிகளுடன் போட்டி போட முடியாமை.

4. இஸ்லாமிய வங்கிகள் கிளைகளை நாடெங்கும் பரவலாக அமைத்து தமது சேவைகளையும், நடவடிக்கைகளையும் விஸ்தரிக்க முடியாமை.

5. இஸ்லாமிய பொருளாதார, முதலீட்டு நடவடிக்கைகள் பற்றிய அறிவின்மைகளும், நம்மவர்களே முதலீடுகளில் திருப்தி கொள்ளாமையும்.

ஆயினும் பல அரபு நாடுகளிலும் மலேசியா , இலங்கை , வங்க தேசம், ஆகிய நாடுகளில்  உள்ள  இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய பொருளியல் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் உள்ளடக்கி ஷரீஆவின் அடிப்படையில் அமைந்த பின்வரும் முக்கிய கொடுக்கல் வாங்கல்களையும், வியாபார நடவடிக்கைகளையும், சேவைகளையும் மேற்கொள்கின்றன.

1. முழாரபா: கூட்டுப் பங்காண்மை

2. முஷாரகா: கூட்டுப் பங்குடமை

3. வீட்டு முஷாரகா முறைமை

4. முராபஹா: இலாபத்தை தெரியப்படுத்தி விற்றல்

5. முஸாவமா: சாதாரண வியாபாரம்

6. இஜாரா: வாடகைச் சேவை

7. வைப்புக்களை ஏற்றல்: ஆரம்ப வைப்பு, முதலீட்டு வைப்பு, நிரந்தர  வைப்பு ஆகியன.

8. பைஉல் முஅஜ்ஜல்: தவணை அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை

9. ஸலம்: முற்பணக் கொடுப்பனவு வியாபாரம்.

10. ரஹ்ன்: அடகுச் சேவை

11. கர்ழ்: கடன் கொடுக்கல் வாங்கல்

இவ்விடத்தில் நாம் முக்கியமானதொரு விஷயத்தை நோக்க வேண்டும். மேற் கூறப்பட்ட சேவைகளுக்கான செலவினங்கள், கட்டணங்கள் பாரம்பரிய வங்கிகளுக்கு மட்டுமா காணப்படுகிறது? ஏன் இவை இஸ்லாமிய வங்கிகளுக்கு இல்லையா? அவை அனைத்தும் இஸ்லாமிய வங்கிகளிடமும் காணப்படவே செய்கின்றன.

எனினும் இஸ்லாமிய வங்கிகளில் ஏற்கனவே கூறப்பட்ட செயற்பாடுகளினால் பெறப்படுகின்ற இலாபங்களினாலும், சேவைக் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு  வசூலிக்கப்படும் கட்டணங்களால்  அவை ஈடு செய்யப்படுகின்றன.

இஸ்லாமிய வங்கிகளில் வாடிக்கையாளரினால் வைப்புச் செய்யப்படும் பணம் பற்றியும், அப்பணத்திற்கான முதலீடு, மற்றும் அதனால் கிடைக்கும் இலாபம் யாருக்குரியது? என்பது பற்றியும் அவைகள் பற்றிய மார்க்க தீர்ப்பு என்ன ? என்பது பற்றியும்

ஒரு வாடிக்கையாளர் இஸ்லாமிய வங்கியில் வைப்புகளை அல்லது முதலீடுளை செலுத்த செயல்படும்பொழுது அல்லது நடவடிக்கை மேற்கொள்ளும் போது ஏற்கனவே கூறப்பட்ட ஷரீஆ அனுமதித்த கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையிலே தெளிவான முறையில் மேற்கொள்வர். அத்துடன் அவைகளுக்குரிய மார்க்க ரீதியான ஆலோசனைகள் அவருக்கு வழங்கப் படும்.

அவ்வாறு முதலீடுகளை மேற்கொள்ளும் போது வாடிக்கையாளரும் வங்கியும் ஏற்றுக் கொள்ளும் ஷரத்துக்கள் மற்றும்  வங்கி செயற்பாட்டு நடவடிக்கைகளின் தன்மை, மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப இலாபம் பகிரப்படும். அதேபோன்று சில கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் நட்டமும் பங்கிடப்படும். இதற்கான ஒப்புதலும் வாடிக்கையாளரிடம் பெறப்படும்.  எனினும் இந்நடவடிக்கைகளின் போது ஆன்மீக அடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆ பின்பற்றப்பட வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். .

உதாரணமாக மார்க்கம் தடை செய்துள்ள  மதுபான உற்பத்தி தொழிலுக்கு பணத்தை முதலீடு செய்ய முடியாது. அதேபோன்று விபசார விடுதிக்காக ஒரு கட்டிடத்தை வாடகைக்கு விட முடியாது. திரைப்படம் எடுக்க நிதிக்கடன் அளிக்க இயலாது.

மற்றொரு சந்தேகம் நம்மிடையே உண்டாகலாம்.  அதாவது இஸ்லாமிய வங்கிகள் முஸ்லிம்களுக்கு  மட்டுமே பயன்படும் . அல்லது முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்துவர் என்கிற வாதம்.  முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களுக்குட்பட்ட விதிமுறைகள் உள்ள வங்கிச்சேவைகளை  நாடமாட்டார்கள் என்று ஓர் கருத்தும் எழுவது இயற்கை.

 ஆனால் இஸ்லாமிய வங்கி முறைகள் பின்பற்றப்படும் நாடுகளின் புள்ளி விவரங்கள்  முஸ்லிமல்லாதவர்கள் கூட பெருமளவில் இஸ்லாமிய வங்கிகளில் நம்பிக்கையுடன் கூடிய நன்னடத்தை மிக்க வாடிக்கையாளர்களாக காணப்படுவது மாத்திரமன்றி, இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படையில் சேவைகளையும்  செயற்பாடுகளையும்  வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தலைசிறந்த ஊழியர்களாகவும் விளங்குகின்றனர் என்பதை  பறை சாற்றுகிறது. உதாரணமாக அரபு நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைகளையும் பொதுவான வங்கி முறைகளையும் பின்பற்றும் வங்கிகளில் இஸ்லாமிய வங்கி முறைகளே தங்களுக்கு வேண்டுமென்று கேட்டு அந்த ரீதியிலேயே தங்களின் கணக்குகளைத் தொடங்கி நிர்வகித்து வரும்  மாற்று மத சகோதரர்கள் ஏராளம்.

இவற்றையெல்லாம் நாம் நோக்குகின்ற பொழுது இஸ்லாமிய வங்கியினால் இலாபமடைவது யார்?  என்று நம் மனதில் ஏழும்  வினாவிற்கு சுலபமாக விடை காண முடியும். இங்கு வங்கி, வாடிக்கையாளர் ஆகிய இரு தரப்பினருமே இலாபமடைகின்றனர். பயனடைகின்றனர் என்பது மறுப்பதற்கு இல்லை. அதனால்தான் இன்று உதாரணத்துக்கு சொல்லப் போனால்  இலங்கையில் காணப்படுகின்ற இஸ்லாமிய வங்கிகளின் நிதி நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் அதேவேளை வாடிக்கையாளர்களின் தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இஸ்லாமிய வங்கிகளின் நோக்கங்களையும் செயற்பாடுகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது இலாபமீட்டுதல், பணம் சம்பாதித்தல் என்பதைவிட சேவை வழங்குதல் என்பதே முதன்மை பெற்று விளங்குவதை காணமுடியும். இங்கு இஸ்லாமிய வங்கிகளின் ஸ்திரத்தன்மை முஸ்லிம் சமூகத்தில் தங்கியுள்ள அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் கொடுக்கல் வாங்கல் அடிப்படையிலான இயக்கப்பாடு இஸ்லாமிய வங்கிகளிலும் தங்கியுள்ளது.

எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய ஷரீஆவிற்குட்பட்ட முறையில் வாழ்பவர் களாயின் அவர்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்களையும், பொருளீட்டல் நடவடிக் கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மாறாக இஸ்லாமிய வங்கிகளை குறை கூறி, கூறி பாரம்பரிய வங்கிகளில் வட்டியில் முழுமையாக மூழ்குவதைவிட  இஸ்லாமிய அடிப்படையிலான வங்கிகள், வங்கிப் பிரிவுகள் நிதி நிறுவனங்கள் மேலானதே, என்றாலும் ஏற்கனவே கூறியதைப் போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமைகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் மட்டுமன்றி சவால்களும் காணப்படவே செய்கின்றன.

அந்த வகையில் முஸ்லிம்களையும் தனது மக்கள் தொகையில் கணிசமாகக் கொண்டுள்ள நாடுகளும் இந்தப் பொறுப்புகளை மேற்கொள்வதில் இருந்து விதிவிலக்குப் பெறாமல் அவைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, வட்டி கணக்கு எழுதுவது, அதற்கு சாட்சியாக கையெழுத்திடுவது அனைத்தும் பெரும் பாவம் என்று இஸ்லாமிய மார்க்கம் தெள்ளத் தெளிவாக்குகிறது. இதுபற்றி முன்னரும் சுட்டிக் காட்டி இருக்கிறோம். முழுவதும் வட்டி அடிப்படையிலான வங்கியியல் நடைமுறை காரணமாக முஸ்லிம்கள் வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் கூட பிற எல்லா சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்னுக்கு இருக்கிறார்கள். இதனால் இந்த சமூகம் பொருளாதார ரீதியாகமுன்னேறிய சமூகமாக மாறுவதற்கு, முஸ்லிம் சமூகத்தவர் பெரிய பெரிய தொழிற்சாலை தொடங்குவதற்கு,  பங்குகள் மூலம் பெரிய அளவிலான நிதியைத் திரட்டி பெரும்தொழில் செய்வதற்கு,  ஏழைமாணவர்கள் கல்விக்  கடன் பெறுவதற்கு என்று பிற சமூகங்களைப் போல  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தங்கு தடையின்றி செயல்பட இயலாத நிலையில் உள்ளது.

காரணம்,  ஒரு உண்மை முஸ்லிம்  எந்தநிலையிலும் பேங்கிலிருந்து வட்டியை பெற்று பயன்படுத்தக் கூடாது. அவர்களுடைய கணக்கில் வட்டித் தொகை வருமானால் அதனை  அவர் அனுபவிப்பது ஹராமாகும். மேலும் பிறருக்கு கொடுப்பதினால் அது தர்மமாகவும் ஆகாது. தர்மத்தின் நன்மையும் கிடைக்காது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதை மட்டுமே அவன் ஏற்றுக் கொள்வான். மேலும் எந்தவிதத்திலும் அந்தப் பொருளை தனக்காகப் பயன்படுத்தக் கூடாது. அந்தப் பணத்தில் உண்பது, பருகுவது, அணிவது, வாகனிப்பது, வசிப்பது, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுக்காக செலவு செய்வது, ஜகாத்தாகக் கொடுப்பது, தம்மீதுள்ள கடமையான வரிகளைச் செலுத்துவது, இவைபோன்ற எதற்கும் பயன்படுத்த அனுமதியில்லை. அல்லாஹ்வின் தண்டணைக்கு பயந்து வட்டியை விட்டு முற்றும் தவிர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்ஆகிய கட்டுப்பாடுகளால் மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார பின்னடைவிற்கு இன்றைய வங்கியியல் நடைமுறையும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

முஸ்லிம்களின் சமூக – பொருளாதார – கல்வி நிலையைப் பற்றி ஆய்வு செய்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களின் அறிக்கையில் வங்கி பரிவர்த்தனையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் வெறும் 12 விழுக்காடு தான் முஸ்லிம்கள். மக்கள் தொகையில் 6 விழுக்காடு உள்ள ஏனைய சிறுபான்மை மக்கள் 8 விழுக்காடு அளவிற்கு வங்கி பரிவர்த்தனை செய்கின்றனர். நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் உள்ள வங்கிகளின் கிளைகளை பல முழுமை பெற்ற சேவை வசதிகளற்ற   கிளைகளாக அந்த வங்கிகளின் தலைமையகம் வைத்துள்ளது. முஸ்லிம்கள் இன்றைய வங்கிகளோடு நெருங்கி பரிவர்த்தனை செய்யாதது தான் இதற்குக் காரணம் என்று நீதியரசர் ராஜிந்தர் சச்சர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று போராடும் இயக்கங்கள் இஸ்லாமிய வங்கி முறைகளும் நாட்டில் உருவாக்கப் பட வேண்டுமென்று போராட அரசியல் செயல் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டியது காலத்தின்  அவசியம்.

ஏனென்றால் இஸ்லாமிய வங்கி முறைகளை மேல்நாடுகள் கை நீட்டி வரவேற்க ஆரம்பித்துவிட்ட சரித்திரம் தொடங்கிவிட்டது.   இதோ உலகப் பொருளாதாரத்தை அலசும் ஒரு  பிறமத பொருளாதார ஆசிரியர் கூறுகிறார்.

“அமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் கவர்மெண்ட் செலவில் தேசிய அளவு பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான்.

கான், ஹசன், முஸ்தபா இப்படிப் பெயரை பாஸ்போர்ட்டில் பார்த்தாலே மேற்படி நாடுகளில் ஏர்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளின் பிளட் பிரஷர் எகிறிப்போகிறது. காது மடல் சிவக்க பாஸ்போர்ட்டை விரித்து பெஸ்ட் செல்லர் லிஸ்ட் புத்தகம்போல் ஒரு பக்கம் விடாமல், ஒரு வரி விடாமல் படிக்கிறார்கள்.

பல சந்தர்ப்பங்களில் உள்ளே தனியறையில் மணிக்கணக்காக விசாரணை செய்து பின் லேடனுக்கு ஒண்ணு விட்ட, எட்டு, எண்பது விட்ட தம்பிக்கு மச்சினன் சம்சாரத்துக்கு மாமா பிள்ளை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கடனே என்று கதவைத் திறக்கிறார்கள்.
ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட, ‘இஸ்லாமிய வங்கி’ என்றால் இருகரம் நீட்டி வரவேற்று ‘வாங்க, கோக் சாப்பிடுங்க’ என்று உபசரிக்கின்றன. “ [ நன்றி : இரா. முருகன் ]

வேறென்ன வேண்டும் ?
இறைவன் நாடினால் இஸ்லாமிய வங்கி பற்றிய விளக்கங்கள் தொடரும்...

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

குறிப்பு : அதிரையின் பிரபல எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களால் 'இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் 'அதிரை நிருபர் பதிப்பகம்என்ற பிரதான இணையதளத்திலிருந்து நெடுந்தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நெடுந்தொடர் அனைவரின் வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. வட்டி ஒரு உயிர்க்கொல்லி !

    இந்த உயிர்கொல்லியால் சமூகத்துக்கு தீமையே அதிகளவில் ஏற்படுகின்றன. இவற்றை நாம் அன்றாட தினச்செய்திகளில் வாடிக்கையாக இடம்பெறுவதை நாம் காணலாம்.

    வட்டியை வைத்து பிழைப்பு நடத்தும் கும்பலுக்கு கஷ்டமாக இருந்தாலும் இந்தியாவில் வட்டியில்லா வங்கி முறையை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் !

    அழகிய ஆய்வு! மக்கள் நலன் கருதி இந்திய நிதி அமைச்சகமும், மத்திய ரிசர்வ் வங்கியும் இந்த ஆய்வை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. Assalamu Alaikkum

    Dear Uncle,
    I know that Banking involves the prohibition of interest based loans. But how do cover the expenses of Banks & make profit if they no charged ?

    ReplyDelete
  3. // But how do cover the expenses of Banks & make profit if they no charged ?\\

    wa alaikkum salam, dear niece, after long time we have seen your comments here. Really I appreciate your good question which shows your keen interest of learning more. I assume that you should have been a first rank student in your class as you are raising this type of very good question.

    Actually, the author of this article, Dr. Ebrahin Ansari kaka will reply clearly, But, as far as my self is concerned, in Islamic based Banking system is more or less a venture or business which deals with customers money by investing in more porjects and yielding will be (called profit) calculated as dividends. Among these income, they can manage expenses too.

    Am I correct sir?

    ReplyDelete
  4. Dear Ms. Barfeen Aysha ,
    Alaikkumussalam.

    Thanks for your question. Mr. Kaviyanban has replied suitably. In addition, there will be a service charge for all the services rendered to the public. The public naturally do not protest against the service charges as they know the nature of the business . It is felt that service charges in an Islamic Bank is always on the higher side to compare with other bank services. However accepted and being paid happily.

    Mr. Kalam. you are always correct.

    Wassalam.

    E.A.

    ReplyDelete
  5. Dear Sister Barveen Aysha

    Thanks for your comments,

    I will try give the answer for your questions with permission of Dr. Ibrahim Ansari Kaakkaa

    For Example,
    An Islamic bank also lends money to people. But it is kind of a business agreement between the bank and the borrower. The borrower will run the business while bank will look over. The profit of that business will be shared between the bank and the borrower in a prefixed rate documented earlier in the agreement. Islamic bank also provide services and charge money.

    When people keep money in an Islamic bank, they become kind of share-holder of the bank's overall business. And share profits in a prefixed rate. Sometimes, a person can invest in a specific project and profits will be calculated specifically for that project.

    ReplyDelete
  6. Good article.
    Greetings.

    Less There is no support interest free banking system in our country. because Are due to split politically. My opinion is not support from all sides.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers