.

Pages

Sunday, September 1, 2013

கருத்துரிமையை காப்போம் !

இவ்வுலகில் எண்ணங்கள் பல புரட்சிகளை செய்துள்ளது கண்கூடு. ஒவ்வொருவரின் உள்ளத்தில் உதிப்புகள் உண்டாகும். மனிதரின் நல்லொழுக்க வாழ்வைப் பொருத்து தானாக வரும் உதிப்புகள் நல்ல செய்தியாக இருக்கும்.

உதிப்புகள் தனிப்பட்டவரின் வாழ்வு சம்பந்தப்பட்டதும் உண்டு; பொதுவானதும் உண்டு. பொதுவானது எனில், பலருக்கும் நன்மை பயக்கும். அவ்வாறானால், அதனை பலர் அறியச்செய்வது தர்மம்.

சில அறிவுகள் மனமுயர்சியில் வருவதுண்டு. அவைகளில் அம்மனிதனின் நோக்கிற்கேற்ப வரும். அது அம்மனிதனின் சுயநலம் கலந்தே இருக்குமென்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. அவன் சம்பந்தப்பட்டதால் அவன் சார்பாகத்தான் வரும். சில சமயம் மனிதர்களைப் பொறுத்து அதில் நன்மையையும் உண்டு; தீமையும் உண்டு.

சொல்பவர் புரிந்த விபரங்களை கேட்பவர் சில சமயம் புரிந்துகொள்ள சிரம்மப்படுவார். அது விபர உண்மையின் ஆழநீளத்தைப் பொருத்ததாகும். இவ்வுலகிற்கு நன்மையைத் தவிர அதில் வேறொன்றும் இல்லை எனில் (பிரபஞ்ச விசால உள்ளம் கொண்டு, பிரபஞ்ச நலம் நாடுபவர்) சொல்பவர், கேட்பவர்கள் நீண்டகாலத்திற்குப் பின் அவ்வுண்மையை புரிந்துகொள்ளும் நிலையை அடைவார் என்பதினால், 'நம்பிக்கை' என்ற முடிச்சிட்டு ஒரு எல்லையை வைத்துவிடுவதும் உண்டு.

செய்திகளை உள்வாங்கும் நிலைகள் ஒவ்வொரு மனதனின் மனம், அறிவு இவைகளின் விசாலம் அதனைப் பொருத்து அமையும்.  உலகில் சொல்பவரின் சில செய்திகளை, சொல்பவர் அவரின் புரிந்தவன்னமே கேட்பவர்கள் புரிவார்கள் என்பது மிகக்குறைவு என்பதைக்காட்டிலும் இல்லை என்றும்கூட கூறலாம். ஒவ்வொருவரும் தன் அறிவு வளர்ச்சிக்கேர்ப்பத்தான் ஒவ்வொரு விதமாக; ஒவ்வொரு படி நிலையாக  புரிந்து கொள்கிறார்கள்.

சொல்பவர் கருத்தை ஒரு நூறு சதவிகிதாமாக அளவீடுகொண்டால், ஒரே வகுப்பில், ஒரே ஆசிரியரின் மாணவர்கள் பலரும் பாடத்தை புரிந்த நிலைக்கேற்ப பரிட்சையில் மதிப்பெண்கள் ஒரேமாதரியல்லாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவித மதிப்பெண்கள் பெறுவதைப்போல், 50, 60, 70, 80, 90, 95 சதவீதம் கருத்துக்களை புரிந்துகொண்ட கூட்டங்களாகத்தான் ஒரு குத்துமதிப்பாக மனிதர்களைப் பிரிக்கலாம்.

செய்திகள் நல்லது கெட்டது என்பது பலனைப் பொறுத்து. ஒரு குழுமத்தில் ஒருவருக்கு நன்மை பலருக்கு தீமை எனில் அது கெட்ட செய்தி. ஒருவருக்கு தீமை பலருக்கு நன்மை எனில் அது முழுமையடையா/குறைவுடைய நல்ல செய்திதான். எல்லோருக்கும் நன்மையே எனில் அது முழுமையான நல்ல செய்தி.

சில நேரங்களில் சொன்ன செய்திகள் சொன்னவரின் நோக்கத்திற்கு நேர் மாற்றமாகவும் புரிந்துக்கொள்ளப்படும். அத கேட்பவரின் வாழ்வு வழக்கத்தையும்; அறிவு சேகரிப்பு முறையையும் பொருத்ததாகும். சில சமயம் சொல்பவர் தவறாகச் சொன்னாலும் கேட்பவர் அதில் நல்ல உண்மைகளையும் பெறுவார். அது மனித குனமனத்தைப் பொருத்ததாகும்.
அனைவரின் மனநிலையையும் தன்மணமாகக் கொண்டு சொல்லப்படும் செய்தி அவர்கள் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

சுயநலம், பொறாமை, காழ்புணர்ச்சி, அறியாமை இந்நிலையில் ஒரு செய்தி அல்லது பின் கருத்திடல் வருமானால் அதில் சம்பந்தப்பட்ட பாதிப்புக்குள்ளானோர் தன் திறமை/அறிவால் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டுமேயொழிய மனம் தளருதல் கூடாது. அவ்வாறில்லாமல் போனால் அதை ஏற்றதாகவோ அல்லது இயலாமையோ என்றாகிவிடும். அல்லாமல் அதைக்கண்டு ஒதுங்குதல் அறிவுடமையாகாது.

சிலர் சில புதுமைகளை புகுத்துவார். அதில் நன்மையையும் உண்டு; தீமையும் உண்டு. அது அவரின் பொது நன்மை விருப்ப நிலையின் விகிதத்தைப் பொருத்தது. சிலர் பழமையென சில வழிகாட்டப்பட்ட வழக்கங்களை(செய்திகளை) தன் திறமையினால் நீக்கப்பார்ப்பார். மனவிசால எல்லையைப் பொறுத்து சில வழக்கில் உள்ள அறிவுகள்/செய்திகள் தவறாகவும் மதிப்பிடப்படுகிறது.

சில அறிவுகள் வயது/புரிதல் பலவாக இருப்பதனால் உடன் புரிதல் இயலாமையாகிவிடும். காலப்போக்கில் புரிந்துகொள்ள முடியும் என்பதால் சில செயல்பாட்டில் (அனுஷ்டானம்/கலாச்சாரம் இவைகளில் அவ்வறிவுகள்) கட்டப்பட்டிருக்கும். அது காலப்போக்கில், புதுமை பழக்க வழக்கத்தில், மூட நம்பிக்கையாகவும் தெரியும். இது, ஒன்றுபோல் அனைவரும்/அனைத்தும் இல்லாததால், உண்மைகள் உலகை விட்டு அழிந்துவிடாது இருக்க; மனிதகுலம் காக்க விசால மனமுடையோர் செய்த நல் தந்திரம்.

சில தீமைகள் உள்ளுடும் என்பதற்காக  கருத்துரிமை கட்டிப்போடக் கூடாது. கருத்துரிமை என்றும் இருக்கவேண்டும். கவனமுடன் தவறுகளை களைய வேண்டும். இல்லையேல் உண்மைகளும் வெளிவர தடங்கள் ஏற்படும். ஒரு பொது உண்மை/நன்மை வெளிவர தடங்கள் ஏற்பட்டால் அது மனிதகுலத்திற்கு செய்யும் துரோகம் என்று சொல்வதில் தவறிருக்காது.

செய்திகள் கருத்துக்கோர்வை தடம் பிறலுதல் கூடாது. அழங்கார வார்தைகள் நிறைந்து அதில் உண்மைகள்/நல்ல செய்திகள் இல்லாது இருக்கக்கூடாது. சமூகநல செய்திகள்; நன்மை பயக்கும் புதுமை செய்திகள் இருக்கவேண்டும்.
செய்திகள் பின் கருத்திடலில் சாதகமாக இருக்க எதிர்பார்க்கக்கூடாது. சில சமயம் சாதகமான கருத்திடல் நமக்கு உதவுவதைக்காட்டிலும், எதிர் கருத்திடல், அதிக நன்மை தரும், அறிவு விருத்தியடைதலுக்கு உதவும். எதிர் கருத்துக்கள் செய்திகள் உள்வாங்குதலுக்கு/ தெளிவாக விளங்குதலுக்கு இருவருக்குமே உதவிடும்.

எதிர் கருத்தில் உண்மை இருந்தால் மனதார ஏற்பவனே அறிஞன். பிடிவாதம்; பழிவாங்குதல்; தக்க தருணம் பார்த்து கருத்தை மடக்கும் முயர்ச்சியிலே இருத்தல்; இவைகள் அறிவுடமையாக என்று சொல்லுதலில் தவறுண்டோ ! எழுதுபவன் அறிஞன் என்றோ, வாசிப்பவன் விபரமற்றவன் என்றோ எண்ணிவிடல்லாகாது. தரம் தாழ்ந்து பின்கருத்திடுவோர் கருத்தினை நீக்கிடுதல் அவர் திருந்த வழியாகுமன்றோ ! (செய்தித்தளம்) வலைத்தளமும் தகுதியானோர்களை கவர்ந்திடுமன்றோ !

கருத்தின் உண்மைதான் முக்கியம்; புரியவேண்டும்; அறியவேண்டும் அல்லாது எழுதியவர் கருத்துதான் சரியென வாதிடுதல் உண்மைக் கருத்தை ஏற்கும் மனதில் குறைவையே கட்டிடும். எல்லோர் மனதிலும் உண்மைகள் வரத்தான் செய்யும்.

கருத்துரிமை என்றதனால் மனதில் வந்தவைகள் கண்டவைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்துதல் சமூக கட்டமைப்பை சலசலக்க வைத்துவிடும். நன்மைதரும் புதுமைகள் கூறவந்தால் பலரிடம் செய்திகள் போகுமுன்பே சிலரிடம் சொல்லி, கருத்து அலசிடல் நன்மைக்கு உதவிடும். சமூக அமைதி நிலைப்பது மனித வாழ்வியலுக்கு சுகமே; அவசியமே; தர்மமே. பொது சமூக அமைதி; ஒற்றுமை இது முக்கியம். அதற்காக உண்மைகள் மறைத்திடல் ஆகாது. இதனை அறிவுடையோர் ஏற்கவேண்டும். நோக்கமதை புத்தியுள்ளோர் புரிந்திடுவார்.

மனிதனை மதிப்போம் - மனிதனை காப்போம் - மனிதனாக மாற்றுவோம். களைகளை நீக்குவோம் - கவனமுடன் வாழ்வோம் - கருத்துரிமை காப்போம்.

நபிதாஸ்

17 comments:

  1. சிறந்த படைப்பு !

    கருத்துரிமை கண்டிப்பாக காக்கப்பட வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. அன்பர்களே !

      எதற்குமே ஒரு ஒழுங்குமுறைகள் வகுத்திடவேண்டும். விதிகளுக்கு உள்பட்டு செய்யும் செயல் புனித குர்பானி. சட்டதிட்ட விதிகளை மீறினால் அது கொலை.
      நிதான முடிவுகளில் தவறுகள் கலைந்திடும்.
      அவசர முடிவுகள் அறிஞனுக்கும் அறியாமையே.
      தவறென தானே அகலுதல் தகுதியுடையோர் செயல். தவறை உணரவைப்பதும் தகுதியுடையோர் செயல். கருத்தைச் சொல்ல யாவருக்கும் உரிமை உண்டு.
      ஆனாலும் மனிதர்கள் மன அமைதி காப்பது கலைஞனுக்கும் விதியில்லையா ?

      வழக்கங்கள், பழக்கங்கள் தலைமுறையாக வந்தது. தலைமுறைகளில் யாவருமே தகுதியுடையோர் இல்லையா ?
      முப்பத்தைந்து தலைமுறையிலும் முக்தி பெற்றோர் எத்தனையோ, அவ்வழியில் அவ்வேற்றம் இல்லாததை உலகம்தான் கண்டதிலையே. தப்புகளை காண்போர் கவனத்தில் ஏற்றிடல் வேண்டாமோ ?

      புதுமைகள் தனிமையில் தான் தெரிந்திடல், தெளிந்திடல், பொதுமையில் விட்டிடல் புயல் தோன்றாமல் இருப்பதும் சாத்தியமில்லையே. தெளிந்தவைகள் வெளியிடலே தித்திக்கும்.

      நிதானங்கள் பறந்திட்டால் நேர்த்திகளும் பறந்துவிடும். அறிஞர்கள் செயலில் அறிவுகள் அவர்களுக்கும் உண்டு. படிப்பினை தவறுகளை கலைந்திட படிப்பினையே. தகுந்தோர் உணர்வுகள் கண்டிடல் அமைதிக்கு வழிதந்திடும்.
      அனைவர் அமைதியிலந்தாலும் பிரபஞ்சம் அமைதியில்லை. ஒருவர் அமைதியிலந்தாலும் பிரபஞ்சம் அமைதியில்லை.
      அமைதி குலைத்தொரை பிரபஞ்சமும் விட்டிடலை. புரிதலுக்கும் மதியிருந்தால் புரியாமல் போவதெங்கே ?

      நீதியின் கண்கள் கட்டப்பட்டது, நீதிகளை உள்ளத்தால் உணர்ந்திடதானோ !
      மனம் நீதியென புரிந்தும் வாய் திறக்க அனுமதிக்காததும் அதன்வழி சரித்திரங்கள் மாறிடக் கூடாது என்பதினாலோ !

      உண்மைகள் உணரவேண்டும் என்பதினாலும், கருத்துரிமை காக்க வேண்டுமேன்பதினாலும் வலைதளமும் 'கருத்துரிமையை காப்போம்' பதிந்து ஜனநாயகம் காத்திட்டது.

      எம்முடிவுகளும் ஏகனின் முடிவேயென ஏற்றிடல் ஏற்றம் பெற்றோர் நிலைதானே.

      ஒரே பதிலில் பதிந்திடவே முதல் பின்னூட்டம் தேர்ந்தெடுத்தேன்.

      நன்றி, அனைத்து வாசகர்களுக்கும்.

      Delete
  2. கருத்துரிமை ..

    பிறர் மனம் கோணாமல் ..எடுத்துரைப்பதே நாகரீகம் ...

    அறிஞர் நபி தாசின் ஆக்கம் சூல்நிளைகேற்ற ஆக்கம் ...

    ReplyDelete
    Replies
    1. அமைதியில் தான் மனம் புரிந்துகொள்ளும்.

      நன்றி ! அதிரை சித்திக் அவர்களே !

      Delete
  3. நச்சென்று சொல்லப்பட்ட விளக்கம். அருமை.

    கருத்துரிமை காக்கப் படவேண்டியவையே.! கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சிலர் கண்மூடித்தனமாக கண்ட விமரிசனங்களையும் கருத்துக்களையும் பதிந்து மன வேதனை அடைந்து கொள்கின்றனர். ஒரு சிலர் வலைதள நாகரீகம் அறியாது புனைபெயரில் வந்து வசைபாடி பிறர் மனதை நோகச் செய்து ஆனந்த மடைகின்றனர். இன்னும் சிலரோ இதையே சாதகமாக பயன்படுத்தி சுய ஆதாயம் தேடிக் கொள்கின்றனர். இப்படி மனிதனின் பன்முகத்தையும் வலைதளங்களின் மூலம் காண முடிகிறது.

    இத்தகைய குறைகளை தோண்டத் தோண்ட பெரும் புதையலாய் வந்து கொண்டே இருக்கும்.

    நல்ல கருத்துக்களை கண்ணியமாக பரிமாறிக் கொண்டு சகோதரத்துவத்தை பேணி நடப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அன்பரே !

      புனைப்பெயர் அனுமதிக்கப்பட்ட ஒன்று. புனிப்பெயரில் எழுதுவோர் கருத்தை வைத்துதான் அவர் நல்லவர் கேட்டவர் அறிந்து ஒதிங்கிகொள்ளவேண்டும், ஒதுக்கியும் விடவேண்டும். பயிர்களில் கலைகளை நீக்கிடவில்லையா ?

      நன்றி !

      Delete
  4. சகோ புகாரி எழுதிய சிந்தனைகுரிய கட்டுரையை தூக்கி விட்டு கருத்துரிமையை காக்க போகிறீர்களா?உங்க காமடிக்கு அளவே இல்லையா? சர்வாதிகார அரசுகள் எல்லாம் உங்களிடம் படம் எடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி...

      சரியாகக்கூறினீர்

      வழக்கு கூண்டில் வாய்பொத்தி நிற்கிறது கருத்துரிமை

      Delete
    2. உங்கள் கருத்துரிமை பதியப்பட்டது. அவர்கள் கொள்கையுரிமை ஆளப்பட்டது.

      விவசாயிதான் பயிர் செய்ய வேண்டும். அச்சகத்தான்தான் அச்சடிக்க வேண்டும்.
      பொருத்தமுடையோர் கருத்துக்கள் கண்ணியம் காக்கப்படும்.
      இது உலக வழக்கு.

      வேகத்திற்கு வந்த பதில்.

      நன்றி !

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நல்லதோ கெட்டதோ கருத்தை ஒருவர் சொல்லவும், கேட்கவும் முழு உரிமை வேண்டும். அது தான் பகுத்தறிவுவாதம், மனிதத்துவம்,.. கருத்துகளை கூறவோ, கேட்கவோ தடுக்கவும், முடக்கவும் அரசனுக்கும் உரிமை இல்லை. ஒருவர் கருத்து மற்றொருவருக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். பிடித்தால் ஏற்பதும், பிடிக்கவில்லை எனில் ஏற்காது போவதுமே நாகரிகம். கருத்து முரண் ஏற்பட்டால் பொது மேடையில், பொது தளத்தில் பகிரங்கமாகவோ, தனிபட்ட ரீதியில் அந்தரங்கமாகவோ விவாதித்து நியாயத்தை ஏற்றோ, அல்லது பொது உடன்பாட்டுக்கு வருவதோ தான் பண்பட்ட மானிட சிந்தை. கருத்து பிடிக்கவில்லை என்பதாலோ, புனிதம் என்ற பெயரிலோ, நம்பிக்கைகள் என்ற எண்ணத்திலோ கருத்துப் படைப்பை அழிப்பதும், கருத்தாளனை வாழவிடாமல் கொடுமை செய்வதும், அழுத்தம் கொடுப்பதும், மிரட்டுவதும், உருட்டுவதும் காட்டுமிராண்டித்தனமே ஆகும். உணர்வார் உணர்க, உணரார் உணர சிரமிக்க.

    ReplyDelete
    Replies
    1. எல்லாவற்றுக்கும் எல்லாம் பொருந்தாது.

      விதிகளும் நிலையற்றது.

      அமைதியைத் தரும் உண்மை நிலையானது.

      Delete
  7. பதிவுக்கு நன்றி.

    அருமையான கட்டுரை, மனிதன் உணருவானா?

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  8. // நல்லதோ கெட்டதோ கருத்தை ஒருவர் சொல்லவும், கேட்கவும் முழு உரிமை வேண்டும். அது தான் பகுத்தறிவுவாதம், மனிதத்துவம்,.. கருத்துகளை கூறவோ, கேட்கவோ தடுக்கவும், முடக்கவும் அரசனுக்கும் உரிமை இல்லை. ஒருவர் கருத்து மற்றொருவருக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். பிடித்தால் ஏற்பதும், பிடிக்கவில்லை எனில் ஏற்காது போவதுமே நாகரிகம். கருத்து முரண் ஏற்பட்டால் பொது மேடையில், பொது தளத்தில் பகிரங்கமாகவோ, தனிபட்ட ரீதியில் அந்தரங்கமாகவோ விவாதித்து நியாயத்தை ஏற்றோ, அல்லது பொது உடன்பாட்டுக்கு வருவதோ தான் பண்பட்ட மானிட சிந்தை. கருத்து பிடிக்கவில்லை என்பதாலோ, புனிதம் என்ற பெயரிலோ, நம்பிக்கைகள் என்ற எண்ணத்திலோ கருத்துப் படைப்பை அழிப்பதும், கருத்தாளனை வாழவிடாமல் கொடுமை செய்வதும், அழுத்தம் கொடுப்பதும், மிரட்டுவதும், உருட்டுவதும் காட்டுமிராண்டித்தனமே ஆகும். உணர்வார் உணர்க, உணரார் உணர சிரமிக்க.//

    சகோ. இக்பால் செல்வன் கருத்தை வழிமொழிகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தமிழனுக்கு தமிழ் இனிக்கலாம்.

      சகோ. இக்பாலுக்கு கருத்திடல் இனிக்கலாம்.

      கொள்கையாலனுக்கு கொள்கைதான் இனிக்கும்.

      அதுதான் சம்பவங்களின் பாடம்.

      Delete
  9. நல்ல கருத்துக்களை யாவரும் உரைக்கலாம் ஆனால் இடம் பொருள் ஏவல் பார்ப்பது நன்று கோவணத்தைப்ப்றி அமெரிக்கரிடம் பேசுவதில் பயனில்லை ஒயின் பற்றி சவுதியில் பேசினால் தண்டனை நிச்சயம்

    நம் வலைதளம் மார்க்க அறிஞர்களால் நடத்தப்படவில்லை ஆதலால் மத,மார்க்க விஷயங்களை இங்கே தவிர்ப்பதே நல்லது

    கருத்து சுதந்திரம் என்ற பெயரால் தர்க்கம் புரிவதை இஸ்லாம் வன்மையாக கண்டித்துள்ளது. கவனம் கொள்ளவேண்டும்

    ஓர் மருத்துவம் சொல்வேன் கேட்பவர் கேளுங்கள்
    வாதம்,பிரதிவாதம்,பிடிவாதம்,, போன்ற நோய்களுக்கு நண்டு ரத்தம் 1/2 படியும், எறும்பு ரத்தம் 1/2 படியும் சேர்த்து சாப்பிட்டால் [குறிப்பு;ஒரு மண்டலம்]குணமாகும் வாய்ப்பு 90% ஆகும்

    ReplyDelete
  10. எல்லாம் அறிந்தவர் தான் வலைத்தளம் நடத்துவதென்ற கட்டுப்பாடு செயல்பாட்டில் இல்லை. அவ்வாறும் இயலாது.

    நன்றி ! மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்களே !

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers