.

Pages

Saturday, September 14, 2013

உயிரினங்கள் தண்ணீரின்றி வாழ முடியுமா ?

உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது என்ன என்று யோசித்தால், உடனடியாக நம் மனதில் தோன்றும் முதல் பிரச்சனை தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை. அது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. தேவைக்கு குறைவாக கிடைக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களோடு சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.

இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு.

தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான். ஏனென்றால் தற்பொழுது அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே காண முடிகிறது, போர்களில் தண்ணீர் வரத்தில்லை, தண்ணீர் அடி மட்டம் கீழே இறங்கியுள்ளது ஆதலால் கம்பரசர் ஊதியே ஆக வேண்டுமென பலரும் இச்செயலில் செய்கின்றனர் காரணம் தண்ணீர் இல்லாமல் எந்தறொரு ஜீவனும் வாழ்வது கடினம்.

அன்று, கிணற்றினில் தண்ணீர் சாதரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும் மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம், வந்தோர்  தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை.

வானிலை அறிஞர்கள் இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாது என்று சொல்லி வயிற்றில் புளி கரைத்திருக்கிறார்கள். தண்ணீர் ஒரு நாட்டின் ஜீவாதார பிரச்சனை, அதுதான் தனி மனிதனின் ஜீவாதார உரிமையும் கூட .வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர் கொடுத்து அந்நேரத்தில் தான் தண்ணீரின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது.

முந்தைய காலங்களில் (முன்னே என்றதும் பழங்காலத்துக்கு செல்ல வேண்டாம், 15-20 ஆண்டுகளுக்கு முன்னே ஆற்றங்கரை என்று அழைக்கப்படும் சி.எம்.பி லைன் வாய்க்காலில் தண்ணீர் வழிந்தோடும் ஆற்றில் சரியாக தூர்வாரப்படாமல் தெருக்களில் சிதறி பல நாட்களாக ஓடி பல குளங்கள் நிறையும் ஆனால் தற்போது அவ்வழியே துர்நாற்றம் வீசி தண்ணீர்க்கு பதில் சாக்கடை கால்வாய்களாக ஓடுகிறது என்பது வேதனையான விஷயம்,

இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை.

தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . அரிசி ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யபடுகிறது, விலை உயர்வுக்கு காரணம் அதுதான். தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று அது இப்போது பணம் பண்ணும் தொழில் என்றாகிவிட்டது.

நம் பருவகாலத்தில் பலஞ்சூர், நசுனி, ராஜாமடம் போன்ற ஆறுகளிலும், செக்கடிக் குளம், செடியன் குளம், வெள்ளை குளம் மற்றும் ஆலடிக்  குளம் போன்ற குளங்களிலும் குளித்து அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத  ஆறுகள் / குளங்கலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப் பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன வறண்டும் கிடக்கின்றன.

நதிகள் ஒன்றாக இணந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும் அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும் , சமூக ஆர்வலர்கள் சுற்று சூழல் நிபுனர்கள் சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகிறது , அது அவசர அவசியம் என்கிறார்கள் , ஆனால் எல்லா அரசும் ஆமாம் அவசியம் என்று சொல்லிவிட்டு அதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவாகும் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.

ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை  மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.

பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை, இதனால் பெய்த மழை நீரின் முக்கால் பங்கு கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜம். வீட்டில் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அரசு சொன்னதே பத்து வருடங்களுக்கு முன்புதான். இப்போது கூட கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் சரிவர தூர் வாரபடுவதில்லை, இதனால்தான் தண்ணீர் பிரச்சனை. ஆனால் தூர் வாரியதாக பொய் கணக்கு எழுதமட்டும் தவறுவதில்லை, இதனால் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் அக்கறைபட்டதும் இல்லை. கவலைபட்டதும் இல்லை.

அதிரையில் அதிகளவில் உப்பு விளைகிறது தண்ணீர் தேக்கமில்லாத காரணத்தால் அனைத்து தண்ணீர்களும் கடலோடு கலக்கின்றன, இந்தியாவின் இருபத்தைந்து சதவிகித மாவட்டங்களில் தண்ணீர் உப்பு அதிகமாகிவிட்டது . அது மட்டுமல்ல நமது தண்ணீரில் இரும்புதாது அதிகமாகிவிட்டது என்கிறது நீர்வள அமைச்சகம். அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று தனது அறிக்கையில் நீர்வள அமைச்சகம் மிரட்டுகிறது, உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான் , நிலத்தடி நீர் ஏற்கனவே குறைந்துவிட்டது தற்போது மேற்பரப்பு நீரும் குறைந்துவிட்டது என்கிறார்கள் நீர்வள நிபுனர்கள் .

இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. பொதுவாக, நிலத்தின் அடியில், நீர் அடுக்கு(water table)க்கு சற்று கீழே, சில நூறு அடிகளில் நிலத்தடி நீர் பொதிந்து கிடக்கிறது. இந்த நிலத்தடி நீரை அக்யூபர் (aquifer) என்று நீர்வள நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீழே, ஒரு அடுக்குக்கு பிறகு, ஆழ்நிலை உப்புத் தண்ணீர் களம்(deep salty aquifer) உள்ளது. சில நூறு அடிகளில் இருக்கும் நிலத்தடி நீரை, நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். இதனை நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம்.

மக்களுக்கு பாதுகாக்கபட்ட சுகாதாரமான குடிநீர் வழங்காமல் இந்தியா வல்லரசு என்று சொல்லி கொள்வது பெருமையான விஷயம் அல்ல.

அதிரை தென்றல் (Irfan Cmp)


20 comments:

 1. சகோ. இர்பான் அவர்கள் தளத்தில் பதியும் முதல் படைப்பு.

  தொடர்ந்து பங்களிக்க வாழ்த்தி வரவேற்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. நானோ இத்தளத்திற்கு மட்டும் புதியவன்..பல விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதியவன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

   தாங்களின் வரவேற்பிற்கு நன்றி தொடர்ந்து என்னால்லான ஆக்கங்கள் தருவேன் இன்ஷா அல்லாஹ்

   Delete
 2. தண்ணீருக்காக, எங்கோயோ ஒரு சகோதரன் வறண்ட தொண்டையோடு, உலர்ந்த நாக்கோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை நம்மிடம் வரட்டும்.

  இன்று நாம் நமது பங்களிப்பாக தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அவற்றை சேமித்து நாளை நமது சந்ததியினர் பயன்பெறும் வகையில் வழிவகுத்துக் கொடுப்போம்.

  சிறந்த படைப்பு !

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நம் கிராமத்தில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நினைவில் கொண்டுவாருங்கள். அப்படியே 10, 20 வருடங்கள் நினைவுகளைப் பின்னோக்கிச் சுழலவிடுங்கள். ஊரில் என்னவெல்லாம் இருந்தது? பச்சைப் பசேல் விவசாயம், தாமரைப் பூத்திருக்கும் குளங்கள், நன்னீர் தேங்கி நிற்கும் ஊருணி, சலசலத்தோடும் வாய்க்கால்கள்; ஓடைகள், ஊற்று நீர் பெருக்கெடுக்கும் கிணறுகள்...

   என நீரும், நீர் சார்ந்ததுமான அந்த நாட்கள் நாம் வாழ்ந்தவர்கள்தான்.

   தண்ணீரை வீண் விரயம் செய்வதை தடுத்து தண்ணீர் சேகரிப்பின் அவசியத்தை மக்கட்கு எடுத்து செல்வது இத்தளத்தில் நிறைந்து காணப்படும் விழிப்புணர்வு பதிவாளர்களின் தலையாய கடமை.

   வருங்கால தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையை முந்தைய காலங்களிலையே அல்லாஹ் நம் இறை வேதத்தில் தண்ணீர் மற்றும் உணவு வீண் விரயம் பற்றின எச்சரிக்கையை கூறியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

   “உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” (7:31)

   Delete
 3. அதிரைத் தென்றல் அழகாய் வீசுகின்றது
  அதிரையின் தண்ணீர் நிலை பேசுகின்றது

  குளங்களில் இல்லைத் தண்ணீர்;
  குளங்களாய் ஆனது கண்ணீர்!

  ReplyDelete
  Replies
  1. கவியன்பரின் கவிவரி பாராட்டு மேலும் எனக்கு ஆவலையும் உற்சாகத்தையும் மேலும் ஆக்கங்கள் எழுத தூண்டுகிறது.

   ஜசக்கல்லாஹ் ஹைர் காக்கா

   Delete
 4. சகோதரர் அதிரைத் தென்றல் அவர்களை இத்தளத்தில் தமது கட்டுரையை பதிந்ததற்கு சகபங்களிப்பாளர்களில் ஒருவனாய் வாழ்த்தி வரவேற்கிறேன்.

  சகோதரர் இர்பானுக்கு என்னைப் பற்றி தெரிந்திருந்தாலும் நான் தாங்களுக்கு ஒருவகையில் நெருக்கமானவன் என்பது தாங்களுக்கு தெரியாது.! உங்களை ரொம்ப குழப்பவிரும்பவில்லை. உங்கள் தகப்பனார் புகாரி எனது நெருக்கமான நண்பர். என்னைப் பற்றி கேட்டுப்பாருங்கள் சொல்வார்கள்.

  தண்ணீர் பிரச்னையை பற்றியும்,அதன் தேவையைப் பற்றியும் தெளிந்தநீராய் திறம்பட எழுதியிருந்தீர்கள். அருமை. நல்ல படைப்பு.நீர் வளத்தின் விளக்கங்களும் அருமை.

  தொடர்ந்து தாங்களிடமிருந்து இது போன்ற விழிப்புணர்வு ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் தாங்களை தளத்தின் மூலம் மட்டுமே தெரியும் தாங்கள் எனது தகப்பானருக்கு நெருங்கிய நண்பர் என்பது மகிழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் உங்களை பற்றி கேட்டு தாங்களின் சலாத்தினை என்னுடைய தகப்பனாருக்கு தெரியப்படுத்துகிறேன்

   மேலும் ஆக்கங்களை எழுத ஊக்கமளித்தமைக்கு ஜசக்கல்லாஹ் ஹைர் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

   Delete
 5. மிகச்சிறந்த விழிப்புணர்வுக் கட்டுரை. இப்போது கிடைக்கும் நீரை அதி சிக்கனமாக செலவழித்து பாதுகாத்து நமது வரும் தலைமுறைக்குக் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

  ReplyDelete
  Replies
  1. தாங்களின் பாராட்டுக்கு நன்றி

   Delete
 6. பதிவுக்கு நன்றி.

  தண்ணீர் இன்றி யாரும் வாழ முடியாது. நல்ல ஆக்கம், தொடர வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
  Replies
  1. ஜசக்கல்லாஹ் ஹைர் காக்கா

   Delete
 7. நல்ல விழிப்புணர்வுள்ள ஆக்கம் ....

  இன்னும் பல ஆக்கம் தம்பி இர்பானிடம் இருந்து எதிர் பார்த்து

  காத்திருக்கிறேன் ...வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஜசக்கல்லாஹ் ஹைர் காக்கா

   என் மறு ஆக்கத்திற்கான காத்திருப்பு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்.

   Delete
 8. அயல் தேசத்திற்கு நம் நாட்டில் இருந்து ஏற்றப்படும் ஏற்றுமதி பொருள்களில் மறை நீர் எனப்படும் பொருள்களுக்கு தேவைப்படும் நீரும் ஏற்றுமதி ஆவதாய் புள்ளியல் நிபுணர்கள் கூருகின்றனர் ஜவுளி பொருள்களுக்கு சாயமிடும் நீர் மாசுபடுகிறது பஞ்சு உற்பத்திக்கு விவசாய நீர் ஏற்றுமதியாவதாய் கணக்கிடப்படுகிறது நைஜீரியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35௦௦ சதுர கிலோ மீட்டர் நீரின்றி பாலைவனமாக மாறுவதாய் கணக்கிடுகின்றனர்

  நல்ல ஆக்கம் தொடருங்கள் சகோதரரே

  ReplyDelete
  Replies
  1. தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் அதனை சிக்கனமான பயன்படுத்தினாலோ அல்லது பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தினாலோ வரிச் சலுகை அளிப்பது என்கிற ஊக்கத் திட்டத்தை நீர்க கொள்கையில் சேர்க்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

   மத்திய நீர் வள அமைச்சகமும், திட்ட ஆணையமும் இணைந்து புதிய தேச நீர்க் கொள்கையை வகுத்து வருகின்றன. அதில் சிக்கன நடவடிக்கைக்கு வரிச் சலுகை அளிக்கும் ஊக்கத் திட்டமும் ஒரு அங்கமாக இடம் பெறும். என்று இரு வருடங்களுக்கு முன்னே அரசின் தகவல் தற்போது என்னவாயுற்று என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

   தாங்கள் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

   Delete
 9. நீரும், நானும். நீரின்றி இருத்தல் ஆகுமோ
  விண்ணின் மழை துளி
  மண்ணின் உயிர் துளியன்றோ

  ReplyDelete
 10. //
  *பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல.

  *பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை.

  *பெய்த மழை நீரின் முக்கால் பங்கு கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜம்.

  *கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது.

  *கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் சரிவரத் தூர் வாரபடுவதில்லை.

  *தூர் வாரியதாக பொய் கணக்கு எழுதமட்டும் தவறுவதில்லை.

  *இதுபற்றி எந்த அரசும் அக்கறைபட்டதும் இல்லை.கவலைபட்டதும் இல்லை.
  //

  நல்ல கட்டுரை. நீர் நிர்வாகம் நீரின் அவசியாத்தை புரிந்ததாகத் தெரியவில்லை. புரிந்திருந்தால் அதிக செலவாகும் நதிநீர் இணைப்பை தற்சமயம் செயல்படுத்தாவிட்டாலும் காணாமல் போவதற்கு முன்னால் இருக்கும் மழை நீர் சேகரிப்புகளான குளம், குட்டை, ஏரிகள் இவைகலாவது பாதுகாக்கப்பட்டு, ஆழத் தூர் வாரினால் இருக்கும், எதிர்கால சந்ததினர்களுக்கும் செய்யும் மகாப்பெரிய கடமையும், தர்மமும் ஆகும்.

  நன்றி !

  அதிரை தென்றல் (Irfan Cmp)அவர்களுக்கு, வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 11. இன்றைய கால அவசர அவசியமான தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers