.

Pages

Friday, September 20, 2013

சின்னக் குழந்தை சிரிப்பு

என்னை விளித்தவன் ஏது சிறப்பென்று
மன்னன் வினவ மறுமொழி பகர்ந்தனன்
மின்னி வருவது மின்னலை விஞ்சிடும்
சின்னக் குழந்தை சிரிப்பு.

தொட்டியில் தோரணம் தொங்குதல் கண்டதும்
மட்டிலா ஆர்வத்தில் வாஞ்சையுடன்  - நீட்டியே
கன்னம் குழையக் கருவிழி பார்த்திருக்கும்
சின்னக் குழந்தை சிரிப்பு.

சத்தமிலா முத்தமிடும் வித்தகமே மொத்தமுமாய்ப்
பத்திரமாய் வைத்திருக்கும் சொத்தெனக்குச்- சித்தமதில்
நித்தமும்நான் பொத்திவைத்த அத்தனையும் எத்தனிப்பேன்
அத்தருணம்  ஒத்துவரும் காத்து

துள்ளியெழும் கிள்ளைமொழிப் பிள்ளையிடம் கொள்ளைகொள்ளும்
கள்ளமிலா வெள்ளையுள்ளம்  வெள்ளமென அள்ளிவந்து
பள்ளமெனும் உள்ளமதில் கொள்ளுவதால் தெள்ளுதமிழ்
வள்ளுவனின் பள்ளியிலும் உள்ளு

(வேறு)

உயிராய்ப் பிறந்த மழலையே வா
.......உணர்வில் நிலைக்கும் மழலையே வா
பயிராய் வளரும் மழலையே வா
...... பசுமைச் சிரிப்பாம் மழலையே வா
துயரை மறக்க மழலையே வா
......தூய்மை அன்பாம் மழலையே வா
வயிறும் வாயும் நிறைவதற்கு
......வருவாய் விருந்தாய் மழலையே வா!

சின்னஞ் சிறிய கருவுக்குள் குழந்தையெனும்
...............சித்திரத்தை வரைந்து அனுப்பியது யார்?
சன்னக் குரலில் சங்கீதம் தோற்கும்
.................சாரீரம் அமைத்துப் படைத்தது யார்?
பின்னிடும் சின்னக் குழந்தை எழுந்து
................பீடுநடை போடக் கற்பித்தது யார்?
புன்னகை ஒன்றால் மனத்தினை ஈர்க்கும்
.........பேரோளியை இதழ்களில் புதைத்தது யார்?

அந்த இறையை வணங்குகிறேன் - அவனுக்கு
..................யாதும் எளிதாகும் என்பதனால்
எந்த வரமெனக் கேட்காமலே-எனக்கு
.....................ஏற்ற தருளிட வேண்டுகிறேன்.

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 19-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

17 comments:

 1. கவித்தீபம் - கவிக்குறளின் கவிதை ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்தி பாதுகாக்கப்பட வேண்டும்.

  அற்புதமான படைப்பை படைத்திருக்கிறார்.

  தொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி...

  ReplyDelete
  Replies
  1. அன்பின் தம்பி நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும்,

   உங்களின் பேருதவியால் தான் இத்தளத்தில் என் கவிதைகள் ஏற்கனேவே ஆவணப்படுத்தப்பட்டிருப்பதை யான் ஒவ்வொரு மூச்சிலும் என் நினைவுகளில் பத்திரப்படுத்தியுள்ளேன்; ஏனெனில், ஒருவேளை என் பதிவுகள் என் சொந்த முகவரிகளிலிருந்து அகற்றப்பட்டோ/ அழிக்கப்பட்டோ விட்டாலும், உங்களின் இத்தளத்தில் எண்ணிக்கை இட்டுப் பத்திரப்படுத்தியுள்ளனவே அதுவே என் கவிதைகளின் ஆவணமாகும்.

   உங்களின் ஆதரவுக்கும் வாழ்த்தினுக்கும் என் ஆழ்மனத்தின் நன்றிகள் உரித்தாகுக!

   Delete
 2. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அருமையானவர் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கட்கு என் அருமையான நன்றிகள் உரித்தாகுக.

   Delete
 3. கவித்தீபம் அவர்களின்
  ''சின்னக் குழந்தை சிரிப்பு''மழலை சிரிப்பைப்பற்றிய படைப்பாயினும் இன்முகத்துடன் சிரிக்கும் குழந்தையுடன் ஏக இறையோனை எந்நாளும் யோசிக்கவைத்த பின்னிப் பிணைந்த சிறந்த படைப்பு. அருமை வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. அன்பின் அதிரை மெய்சா, உங்களின் “வறுமை” என்னும் தலைப்பிட்டக் கவிதையை இலண்டன் பாமுகம் யூட்யூப் பகுதி 3ல் கேட்டு மகிழ்ந்தேன்; உங்களின் கவியோட்டத்தில் மோனைகள் சிறப்பாய் முன்னின்று உங்களின் கவிக்குழந்தையைக் கைபிடித்து நடத்தாட்டிச் செல்வதும் உணர்கிறேன். என் இந்தச் சின்னக் குழந்தை சிரிப்பு என் யாப்பிலக்கண வகுப்பு (இணையக்குழுமம்) நடத்தும் வகுப்புப்பாடத்தின் வீட்டுப்பாடம்; ஆங்குள்ள ஆசான்களின் மதிப்பீட்டைப் பெற்றதும் உங்களின் வாழ்த்துகளைப் பெற்றதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாகும்.

   சிறந்தப் படைப்பென்றுச் சீர்தூக்கிப் பாராட்டிய உங்களின் வாழ்த்தினுக்கு என் உளம்நிறைவான நன்றிகள்!

   Delete
 4. மழலை மொழி கேட்டு ...தாயவள் மகிழவாள்...

  இனி ..கவி தீபம் கவி கேட்டு மழலைகள் மகிழும் ...

  ReplyDelete
  Replies
  1. என் “சின்னக் குழந்தை சிரிப்பை” தாலாட்டிப் பாராட்டி வாழ்த்திய உங்கட்கு என் உளம்நிறைவான வாழ்த்துகள்.

   Delete
 5. சின்னக் குழந்தை சிரிப்பு சித்திரம்
  வண்ண வார்த்தை வடித்து தந்த
  சொன்ன கவியில் சொக்கி உள்ளம்
  மின்னி மயங்கி நிக்கிது.

  (வேறு)

  அழகாய் எழுதும் கவிஞரே வாழ்க !
  .......அன்பை பொழியும் அன்பரே வாழ்க !
  உலகில் உந்தன் கவிகளும் உண்மை
  .......உணர்த்த பிறந்தும் வாழ்வது காணலாம்
  நலமாய் நீங்களும் வளமாய் வாழ்தல்
  .......நாங்கள் நற்கவி சுவைத்திட ஆகுமே
  உளத்தில் பிறந்த ஊக்க வரிகள்
  .......உனக்கு எந்தன் மணக்கும் மாலையே.

  ReplyDelete
 6. மரியாதைக்குரிய குரு நபிதாஸ் அவர்கட்கு, மாணவனின் அன்பான சலாம், அஸ்ஸலாமு அலைக்கும்.

  தங்களின் வாழ்த்தை மரபின் வழிநின்று வாழ்த்தவே தாங்கள் முனைந்திருப்பது, அவற்றைப் புனைந்திருக்கும் வடிவம் கண்டு மகிழ்கிந்தேன்; ஆயினும், வெண்பாவாய் நினைத்து எழுதியவை வெண்பாவின் இலக்கணத்தில் “தளைதட்டலுடன்”, விருத்தமாய் எண்ணி எழுதிய எண்சீர் விருத்தத்தில் வாய்பாட்டின் நிலையும் வகைப்படுத்தாமையும் இலக்கணத்தை வைத்து நோக்குங்கால் இலக்கணப் பிழைகளாகின்றன; ஆயினும் தங்களால் மிகச் சிறப்பாக மரபு வழி நின்று யாப்பின் இலக்கணம் கற்றுப் பாக்கள் வனைய இயலும் என்பதும் என் துணிபு; கணிப்பு.

  தங்களின் தனிமடல் முகவரி இல்லாமையால், ஈண்டுப் பதிந்தேன்.

  தங்களின் வாழ்த்து மாலை மணம்வீசி என் மனத்தில் தங்களின் அன்பைப் பேசியது! மிக்க நன்றி=ஜஸாக்கல்லாஹ் கைரன்.

  ReplyDelete
 7. தங்களின் விருப்பத்தை என் தனிமடலுக்கு எழுதினால், இன்ஷா அல்லாஹ் தங்கட்கு “மரபுப்பா இயற்றும் யாப்பிலக்கணம்” கற்றுத்தருவேன்.

  “யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என” என்பதே என் அடிப்படைக் கொள்கை, அன்றும், இன்றும், என்றும் எனபதை அறிக.

  ReplyDelete
 8. சின்னஞ் சிறிய கருவுக்குள் குழந்தையெனும்
  ...............சித்திரத்தை வரைந்து அனுப்பியது யார்?
  சன்னக் குரலில் சங்கீதம் தோற்கும்
  .................சாரீரம் அமைத்துப் படைத்தது யார்?
  பின்னிடும் சின்னக் குழந்தை எழுந்து
  ................பீடுநடை போடக் கற்பித்தது யார்?
  புன்னகை ஒன்றால் மனத்தினை ஈர்க்கும்
  .........பேரோளியை இதழ்களில் புதைத்தது யார்?
  அருமையிலும் அருமை

  ReplyDelete
  Replies
  1. அருமையிலும் அருமையென்று உண்மையிலும் உண்மையான உளம்நிறைவாய் வாழ்த்தளித்த உங்களின் வாழ்த்தினுக்கு என் உளம்நிறைவான வாழ்த்துகள்.

   Delete
 9. நல்லது கவிஞரே ! எனக்கு கவிதை எழுதி பழக்கம் இல்லை. ஆனாலும் கருத்துக்களை கோர்பேன். இதோ அதிரை மெய்சா அவர்களுக்கு எழுதிய கருத்துக் கோர்வை. அதில் எதுவும் தளைதட்டுகிறதா ? எழுதவும்.

  மனிதன் படைப்பு மாயோன் படைப்பு
  இனிமை நிலைப்பு இவனின் உயர்வில்
  இகத்தை நடத்த இறைவன் வகுத்த
  அகத்தை கொண்ட அவனே தலைவன்
  தன்னை அறிய தலைவனை அடைய
  உன்னை படைத்தே உயர்ந்தோன் விருப்பம்
  தகுதியை வளர்த்து தன்னை உயர்த்தி
  மிகுதியை பெற்று மகிழ்ந்தே வாழ்க !
  அகத்தினில் விழுந்த அழுக்கை அகற்றி
  தகுந்த தளத்தை தன்னில் தரிக்க
  மலமல வென்று மாயோன் வருவான்
  உளமதில் ஆகி உயர்ந்தே வாழ்க !

  நன்றி !

  ReplyDelete
 10. காந்தத்தில் உரச உரச காந்தம். உந்தன் கவியில் உரச எந்தன் கவி வந்தது. தளைதான் தட்டுகிறதா ? சொல்லிடுவீர், நான் என் தலை உருட்ட !

  சின்னக் குழந்தையின் பூத்த சிரிப்பினிலே
  உன்னில் உருவான நல்ல வனப்புகள்
  வண்ண எழுத்தில் அழகாய் வடித்ததில்
  சொன்ன விதமது நன்கு.

  நன்றி ! கவிஞரே .

  ReplyDelete
 11. அன்பு கவிஞரே !

  இதிலும் தளை தட்டுகிறதா ? என்று பாருங்கள்.

  அழகாய் எழுதும் கவிஞரே வாழ்க !
  .......அமுதம் பொழியும் தமிழரே வாழ்க !
  உலகில் உமது கவிகளும் உண்மை
  .......உணர்த்த பிறந்தும் இருப்பது காணலாமே
  நலமுடன் நீவீர் வளத்துடன் வாழ்தலே
  .......நாங்கள் நலகவி பார்திட ஆகுமே
  உளத்தில் பிறந்த நலமான வரிகள்
  .......உனக்கு எனது மணக்கும் மாலையே.

  நன்றி !

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers