.

Pages

Friday, September 6, 2013

நினைத்தாலே இனிக்கும் நினைவலைகள்

விமானத்தில் ஏறாமல்
வீடுவரைச் சென்றேன் !

பள்ளிப் பருவம்
அள்ளித் தரும்
அழியா நினைவலைகள்
விழியோரக் கரையினிலே !

தெருவில் அரும்பிய
அருமை நட்புகள்
உருவாக்கிய உதவி
உட்கார்ந்திருக்கும் பதவி !

நூலகத்தில் உலகைக் கண்டேன்
உலகத்தில் நூலகத்தைக் கண்டேன் !

”கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”
கற்றுக் கொடுத்தவர்கட்குச் செய்ய வேண்டும் சிறப்பு !

கற்றவர் சபையில் எனக்கோர் இடமுண்டு
கா.மு.உ. பள்ளிக்கு அதில் முழு பங்குண்டு !

ஏழு ம்ணிக்குள்
இறைவேதம் ஓதிட
எழுந்து ஓடியதால்
“ஈமான்” எனும் விசுவாசம்
இருதயத்தின் சுவாசம் !

உம்மாவின் கைவண்ணம்
சும்மா சொல்ல முடியுமா எண்ணம்?
அடுப்படியில் ஊட்டிவிட்ட
அன்புகலந்த அமுதன்றோ ?

உச்சி முகர்ந்து ஓதி ஊதி
மெச்சிப் புகழ்ந்து வழியனுப்பி
உச்சிப் பகலில் திரும்பி வரும்வரை
பச்சிளம் பாலகனாம் எனக்காக
காத்திருந்துக் காத்திட்ட உம்மாவின்
பூத்துக் குலுங்கும் புன்னகை !

கண்ணாடி முன்னாடி நின்று
கனவுகளைக் கண்டேன் அன்று
அரும்பி வரும் மீசைபோல்
அரும்பி வரும் ஆசையும்தான் !

தங்கைகளைக் கரையேற்ற
எங்களையேக் கரைதாண்டி
அரபுநாடு வந்தோம்
தமிழ்நாடு எல்லைத் தாண்டி !

முகவரிடம் ஏமாற
மும்பையில் முடங்கி விட்டேன்
பகற்கனவாய்ப் போனது
பயணமும் புளித்தது !

படித்தப் படிப்பும்
துடிப்பானப் பிடிப்பும்
தோல்வியை வெற்றியாக்கின
கால்வைத்து அயல்நாட்டில்
கால்நூற்றாண்டும் ஆனது !
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 05-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. 

25 comments:

  1. கவியன்பன் கலாம் அவர்களின் கவி ..

    வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம் ...

    ஓராயிரம் பக்கங்களை ஓரிரு வரியில்

    சொல்ல கவியால் மட்டுமே முடியும்

    ReplyDelete
    Replies
    1. அன்பின் அதிரைத் தமிழூற்றே! முழு வாழ்வின் அனுபவங்களை இன்னும் இதில் சொல்லவேயில்லை; சில நிமிடத்துளிகளில் ஓடி வந்த சிந்தனைத் துளிகள் தான் ஈண்டு உங்கள் பார்வைக்குக் கவிதையாய்ப் படைத்துள்ளேன்.

      உங்களின் வாழ்த்தினுக்கு உளம்நிறைவான நன்றிகள்!

      Delete
  2. வாழ்வியல் கவிதையில் அருமை!

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தம்பி இலண்டன் இளங்கவி ஜாஃபர் ஸாதிக் அவர்களே! உங்களின் அருமையான வாழ்த்தினுக்கு அகம்நிறைவான நன்றிகள்!

      பாராட்டுகளும்; வாழ்த்துகளும்; மறுமொழியில் நன்றிகளும் ஆக ஈண்டு மடலாடிக் கொண்டிருப்பதில் அன்பின் நெருக்கம் தான் என்பதை அன்புடன் அறிய வைத்தீர்!

      நிற்க. நீங்கள் ஓர் இளங்கவி என்பதை அறிவோம்; இன்னும் ஏன் இத்தளத்தில் உங்களின் பதிவுகள் இல்லை? உங்களை நேர்காணல் செய்த இத்தளத்தின் நிர்வாகி அன்புத் தம்பி நிஜாம் அவர்கள் பலமுறை என்னிடம் உங்களைப் பாராட்டிச் சொல்லியிருக்கின்றார்கள்; ஆயினும், உங்களின் கவிதைகள் மட்டும் இன்னும் இங்குப் பதிவாகவில்லையே?

      பதிவாளர்களில், பின்னூட்டமிடுபர்களில் “தமிழின் பால் பற்றும்; தமிழில் மட்டுமே பின்னூட்டங்கள் இடப்பட வேண்டும் என்ற பேரவாவும்” வெளிப்படுத்தும் நீங்கள் உங்களின் தமிழ்ப்பற்றின் சாரத்தைக் கவியாக்கித் தர வேண்டுகிறேன்.

      இத்தளத்தில் உங்களின் உறவினர்கள் இருவர் ஏற்கனவே நல்ல ஆக்கங்களைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும்; உங்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்து விரைவில் நடைமுறைப் படுத்தும் நிஜாம் அவர்களே இத்தளத்தின் நிர்வாகி என்பதும் உங்கட்குக் கூடுதல் பலமாகும்; எனவே, தயங்காமல் உடன் உங்களின் கவிதையை எதிர்பார்க்கிறேன்.

      அன்புத் தம்பி நிஜாம்,

      இந்த இலண்டன் இளங்கவி அவர்கட்கு வாரத்தில் ஒரு நாள் அட்டவணையில் ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறேன்.

      Delete
  3. Replies
    1. ஆம். அய்யா திண்டுக்கல் தனபாலன் அவர்களே! உங்களின் திருமுகம் காணும் நல்வாய்ப்பை “பதிவாளர்கள் சங்கமம்” சென்னையில் சென்ற வாரம் நடைபெற்றதில் கிட்டாமல் போனதிலும் எனக்கு வலிகள் தான். எங்களைப் போன்று அயல்நாட்டில் இருப்பவர்களால் இதுபோன்ற விழாக்களில் கலந்து தமிழார்வலர்களுடன் சங்கமிக்கும் வாய்ப்புகள் தவறி விடுகின்றன.

      உங்களின் வாழ்த்தினுக்கு உளம்நிறைவான நன்றிகள்!

      Delete
  4. நினைத்த அலைகள் அனைத்தும் அருமை !

    நெஞ்சை நெகிழச்செய்யும் அழகிய வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மையான நிகழ்வுகள் உணர்வுகளின் ஓசையில் மீட்டப்படும் போதில், நெகிழ்ச்சி தானே வரும், நிஜாம் தம்பி!

      அழகான வாழ்த்தினுக்கு அகம்நிறைவான நன்றிகள்!

      நிற்க. என் வேண்டுகோளை ஏற்றுச் சீர்படுத்திய உங்களைப் பாராட்டி உங்கட்காக துஆ செய்கிறேன்.

      இலண்டன் இளங்கவி ஜாஃபர் ஸாதிக் அவர்களின் கவிதைகள் வாரந்தோறும் வெளியாக வேண்டி அன்னாரிடம் நீங்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆவன செய்ய வேண்டுகிறேன்.

      Delete
  5. கடந்த கால அனுபவ அனுபவித்த நினைவலைகள் ஒவ்வொன்றும் நம் வாழ்வில் நமக்கு கற்றுத்தந்த பாடங்கள். அதுவே நமது வாழ்க்கையின் அஸ்திவாரம். தாங்களின் கவி வரியில் நினைவூட்டி பின்நோக்க வைத்தமைக்கு மிக்க நன்றி கவித்தீபம் அவர்களே.!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் நண்பர் அதிரை மெய்சா அவர்களே!
      என்பாலும் என் கவிதையின் பாலும் நீங்கள் கொண்டுள்ள மதிப்புக்கும் உங்களின் உளமார்ந்த வாழ்த்தினுக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்!

      அனுபவங்களை அணு அணுவாக அசைபோட்டேன்;உங்களைப் போன்று புதுக்கவிதையில் இட்டேன்; அதனால் என் வழக்கமான மரபின் “அசை” போடவில்லை!

      கவிதைகள் எழுத நினைக்கும் போதில், கருத்துக்கள் கருவாகி “அதன் ஓட்டத்தில்” போகிற போக்கில் விட்டு விட்டால் அதுவே கவிதையாகி நிற்கும் என்கின்ற அடிப்படை விதியே இதனை நிரூபிக்கும்!

      அதனாற்றான், இக்கவிதை இதன் ஓட்டத்தில் விட்டு விட்டேன்; அதே நேரத்தில், நேற்று ஒரு கவிதை எழுதினேன் (வேறொரு தளத்தில் இன்ஷா அல்லாஹ் காண்பீர்கள்) அதனை ஓசை நயம் கூட்டும் வாய்பாட்டின் அமைப்பில் மரபில் வார்த்தெடுத்தேன்; அதன் ஓட்டம் அப்படி வந்தது; அதனால் அதன் ”போக்கிலேயே” விட்டு விட்டேன்.

      இதனால் எனக்குள் ஓர் ஆறுதல்!

      Delete
    2. அன்பின் நண்பர் அதிரை மெய்சா அவர்களே!
      என்பாலும் என் கவிதையின் பாலும் நீங்கள் கொண்டுள்ள மதிப்புக்கும் உங்களின் உளமார்ந்த வாழ்த்தினுக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்!

      அனுபவங்களை அணு அணுவாக அசைபோட்டேன்;உங்களைப் போன்று புதுக்கவிதையில் இட்டேன்; அதனால் என் வழக்கமான மரபின் “அசை” போடவில்லை!

      கவிதைகள் எழுத நினைக்கும் போதில், கருத்துக்கள் கருவாகி “அதன் ஓட்டத்தில்” போகிற போக்கில் விட்டு விட்டால் அதுவே கவிதையாகி நிற்கும் என்கின்ற அடிப்படை விதியே இதனை நிரூபிக்கும்!

      அதனாற்றான், இக்கவிதை இதன் ஓட்டத்தில் விட்டு விட்டேன்; அதே நேரத்தில், நேற்று ஒரு கவிதை எழுதினேன் (வேறொரு தளத்தில் இன்ஷா அல்லாஹ் காண்பீர்கள்) அதனை ஓசை நயம் கூட்டும் வாய்பாட்டின் அமைப்பில் மரபில் வார்த்தெடுத்தேன்; அதன் ஓட்டம் அப்படி வந்தது; அதனால் அதன் ”போக்கிலேயே” விட்டு விட்டேன்.

      இதனால் எனக்குள் ஓர் ஆறுதல்!

      Delete
  6. //நூலகத்தில் உலகைக் கண்டேன்
    உலகத்தில் நூலகத்தைக் கண்டேன் !//

    நூலகத்தில் நுழைந்து
    உலகமே நுலகம்
    கற்றது கையளவு
    கல்லாதது உலகளவு
    காணத் தொடக்கம்
    அதனாற்றான் அவனும்
    அழகாய் சொன்னான்
    என்னை அறியப்படவே
    உன்னை படைத்தேன்
    அறிபவர் வரிசை
    அதிலே நீரும்
    அணியாகி நிற்கின்றீர்.

    நினைவுகள் நிகழ்காலம் வரை
    அனைவரின் அகத்தில் நிறைய
    துணையாக தூண்டிட்ட கவிதை
    புனைவது உனதது திறனிறையே.

    ReplyDelete
    Replies
    1. ஆம்! ஆசான் நபிதாஸ் அவர்களே!

      நூலகம் என் தாய்மடி
      நாடோறும் அதனை விடாப்பிடி
      பாலகப் பருவத்தில்- தமிழ்ப்
      பாலூட்டியக் கருவறை!

      இன்றுவரை ஒவ்வொரு விடுமுறையிலும் தாயகத்தில் நூலகம் செல்கின்றேன்; கணினியில் இப்பொழுது நூலகமாயும் காண்கிறேன்!

      இளம் பருவத்தில் எனக்குக் கிட்டிய மனவிதான் புத்தகங்கள்!

      குருவே! ஓர் இஸ்லாமியப் புலவர் (மர்ஹூம் பனைக்குளம் அப்துல் ஜப்பார் என்பார்) கேட்டார்களாம்”இறப்புக்குப் பின்னரும் நான் படிக்க வேண்டும்” என்று, எனக்கும் அப்படித் தான் படிப்பு, படிப்பு, படிப்பு, என்பதில் தான் என்றும் பிடிப்பு , பிடிப்பு!

      அல்லாஹ் எனக்கு இப்படிப் படிப்பின்பால் ஓர் அசைக்க இயலாதப் பிடிப்பைத் தந்தனாற்றான், படிப்பாளியே சிற்ந்த இலக்க்கியப் படைப்பாளியாவான் என்பதும், படி, அதனால் நீ படிக்கப்படுவாய், எழுது- அதனால் நீ எழுதப் படுவாய் என்பதும் நிதர்சனமாய் என் வாழ்வில் காண்கிறேன்!

      எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

      கல்வி, இல்மு, knowledge எல்லாம் அவனிடமிருந்து நமக்குக் கிட்டிய தவப்பயன் என்பதையும் குருவிடம் ஒப்புக் கொள்கிறேன்~

      கவிவடிவிலான வாழ்த்தினுக்கு “கல்பு” நிறைவான நன்றிகள், கலாம் இடமிருந்து!

      Delete
  7. முகவரிடம் ஏமாற
    மும்பையில் முடங்கி விட்டேன்
    பகற்கனவாய்ப் போனது
    பயணமும் புளித்தது !//////

    வெளி நாட்டு மோகத்தில்
    மாட்டாதார் யாருமுண்டோ
    உங்களுக்கும் அவ்வனுபவம்
    கிட்டியதோ

    முகவரிடம் மாட்டியதால்
    முகவரிகள் துளைந்ததென
    முகங்களும் அழுதிடுமே
    முயற்ச்சிகளை தொடர்ந்திட்டாள்
    தொலைந்ததும் கிடைத்திடுமே
    தொடருங்கள் முயற்ச்சிகளை
    வெற்றிகளை சுவைத்திடுங்கள்


    ReplyDelete
    Replies
    1. முகவரில்லாமல் போனால்
      முகவரி ஏது நண்பா!
      புகலிடம் யாவர்க்கும்
      பம்பாய் தான் என்பேன்!


      அணுவணுவாய்
      அனுபவித்த வேதனைகள்
      கணு கணுவாய்
      “கல்பில்” உண்டு

      எப்படி கண்டுபிடித்தீர்
      அப்படித்தான் யானும்
      தப்பான முகவரிடம்
      கப்பம் கட்டி விட்டேன்;

      முகவரியும் தொலைந்தனவே
      முகிலங்கள அலைந்தது போலே
      அழுதிட்டேன் அன்றுதானே
      தொழுதிட்டேன் இறைவனைத் தானே

      ஓடிவிட்ட முகவரையும்
      தேடிப்பிடித்த வேளையில்
      நாடிவந்தது ஒரு வேலையும்
      தாடிவைத்த ஒரு முதலாளியால்!

      “அன்புடன்” புகாரியும்
      அன்புடன் இணைந்தார் அன்றுதான்
      பண்புடன் பழகினோம்;
      பறந்து வந்தோம் பாலைவனம்!

      நாட்கள் ஓடினாலும்
      முட்கள் ஒட்டியே
      நினைவு நாடாக்களைச் சுழற்றும்!

      கவிவடிவில் வாழ்த்திசைத்த வருங்காலக் கவிஞராம் தொழிலதிபர் அவர்கட்கு தோழமையுடன் நன்றிகள்!

      Delete
  8. // படித்தப் படிப்பும்
    துடிப்பானப் பிடிப்பும்
    தோல்வியை வெற்றியாக்கின
    கால்வைத்து அயல்நாட்டில்
    கால்நூற்றாண்டும் ஆனது !//

    ரசித்து வாசித்தேன்

    நன்றி அய்யா

    வாழ்க தமிழ். வளர்க தமிழ்பற்று.

    ReplyDelete
    Replies
    1. நேசித்தமைக்கும்; வாசித்தமைக்கும் நேசமுள்ளத் தமிழன் அய்யா அவர்கட்கு நேசம்நிறைந்த நன்றிகள்!

      கால் நூற்றாண்டுகள் கடந்தாலும், கடவுள் என்னும் சிருஷ்டி கர்த்தனவன் விதியின்படி “பட்சியாய்”ப் பறந்து கொண்டுதானிருக்க வேண்டும்! இரைதேடும் பறவை போல் இறைவனவன் நாட்டத்தில் திரைகடலோடி திரவியம் தேடுகின்றோம்!

      அரபுநாடு வந்தாலும் அன்னைத் தமிழ்நாடு மறப்போமா? தமிழெனக்குத் தாய்மொழியன்றோ? தமிழின் பற்று தமியேன் சொத்து!

      Delete
  9. // கா.மு.உ.//

    மன்னிக்கவும். இதன் பொருள் அறிய இயலவில்லை.

    விளக்கம் தாருங்கள் அய்யா

    ReplyDelete
  10. யான் படித்தப் பள்ளியின் பெயர்

    “காதிர் முஹைதீன் உயர்நிலைப் பள்ளி”

    ReplyDelete
  11. பதிவுக்கு நன்றி.

    அன்பு மச்சானின் அருமையான கவிதை, நினைத்து நினைத்து மகிழ்ந்தேன்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. உங்களை நினைத்து நினைத்து ஏங்குகிறேன், மச்சான், எங்கே ஆளையே காணோம் என்று!

      உங்களின் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் உளங்கனிந்த நன்றி!

      Delete
  12. " ஒரு நூலகத்தின் கதவு திறக்கப் படும்போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப் படும் " என்று ஒரு சிறப்பு, நூலகங்களுக்கு உண்டு.

    நூலகத்தின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுள்ள இந்த கவியன்பனின் கவிதை வாழ்க்கை எனும் ஓடம வழங்கும் பாடம்.

    ReplyDelete
  13. அன்பின் மூத்த சகோதரர் அவர்கட்கு மிக்க நன்றி. தங்களின் வருகையும் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டன என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்; என் கவிதையின் விமர்சனத்தில் தங்களின் தரிசனம் கண்டேன்; அதுவும் நிதர்சனமான ஓர் உண்மை ஒப்புதலுடன்! ஆம். நூலகங்கள் தான் தங்களையும் தமியேனையும் படிப்பாளியாக்கி, இன்று படைப்பாளியாக்கி வைத்துள்ளது.

    1973ல் வாங்கிய நூலக அடையாள அட்டையை இன்றும் வைத்துள்ளேன்; அதனை வைத்து ஒவ்வொரு விடுமுறையில் தாயகத்தில் இருக்கும் தருணத்தில் நூலகம் சென்று நூல்களைப் பெற்றுக் கொள்வேன். இறையருளால் நமதூர் கிளை நூலகம் எங்கெல்லாம் செயல்பட்டனவோ (தற்பொழுதைய இ.ஷாஃபி பள்ளி, தரகர் தெரு, மெயின்ரோடு மற்றும் தற்பொழுதுள்ள இசிஆர் ரோடு) அங்கெல்லாம் “கொசுக்கடியை” வாங்கிக்கொண்டே படிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்தேன்!

    அந்த நூலகத்தில் எந்தத் தட்டில் எந்தப் புத்தகங்கள் இருக்கின்றன என்று என்னால் சரியாகச் சொல்ல முடியும்; அந்த அளவுக்கு ஒன்|றிப் போய் விட்டேன், நூலக்த்துடன்! அல்ஹம்துலில்லாஹ்!

    (இவைகளை ஈண்டுப் பதிவதின் நோக்கம்: இதனைப் படிக்கும் மாணவ மணிகள் என்னைப் போன்று படிப்பாளியாகி- இலக்கியப் படைப்பாளியாக வர வேண்டும்; ஊரின் பெயரை உலகமெலாம் பரவச்செய்ய வேண்டும் என்பதே அன்றி;வெறும் புகழ்ச்சியல்ல!)

    ReplyDelete
  14. உம்மாவின் கைவண்ணம்
    சும்மா சொல்ல முடியுமா எண்ணம்?
    அடுப்படியில் ஊட்டிவிட்ட
    அன்புகலந்த அமுதன்றோ ?

    உச்சி முகர்ந்து ஓதி ஊதி
    மெச்சிப் புகழ்ந்து வழியனுப்பி
    உச்சிப் பகலில் திரும்பி வரும்வரை
    பச்சிளம் பாலகனாம் எனக்காக
    காத்திருந்துக் காத்திட்ட உம்மாவின்
    பூத்துக் குலுங்கும் புன்னகை ! masaalalh

    ReplyDelete
  15. உம்மாவின் கைவண்ணம்
    சும்மா சொல்ல முடியுமா எண்ணம்?
    அடுப்படியில் ஊட்டிவிட்ட
    அன்புகலந்த அமுதன்றோ ?

    உச்சி முகர்ந்து ஓதி ஊதி
    மெச்சிப் புகழ்ந்து வழியனுப்பி
    உச்சிப் பகலில் திரும்பி வரும்வரை
    பச்சிளம் பாலகனாம் எனக்காக
    காத்திருந்துக் காத்திட்ட உம்மாவின்
    பூத்துக் குலுங்கும் புன்னகை ! masaalalh

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers