.

Pages

Saturday, October 19, 2013

[ 16 ] 'வளைகுடா வாழ்க்கை' [ கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ! ]

கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...!
இரு நண்பர்கள், இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். அதில் ஒருவர் பத்தாம் வகுப்பு  தேர்வில் தோல்வி அடைய, மற்றவர் தேர்வில் தேர்ச்சி அடைந்து பள்ளி படிப்பை தொடர்ந்தார். தேர்வில் தோல்வி  அடைந்தவர் மீண்டும் முயற்சி செய்யாமல் வளைகுடா சென்று விட்டார். சென்றவருக்கு நல்ல வேலை ! ஏதோ ஒரு அலுவலகத்தில் ஆபீஸ் பாய் வேலை நல்ல சம்பளம், மன நிறைவாய் வேலை செய்து வந்தார். இரண்டு வருடம் கடந்து விடுப்பில் ஊர் வந்தார். நல்ல போசாக்கான உணவு குளிரூட்டப்பட்ட குடியிருப்பில் வசித்ததன் விளைவு பார்க்க நல்ல நிறமாக காணப்பட்டார்.

பார்ப்போர் எல்லாம் நலம் விசாரிப்பு அவருக்கு நண்பனை காண வேண்டும் என்ற ஆவல் ! நண்பனை கண்டு ஏக சந்தோசம், பள்ளி படிப்பை முடிக்கும் தருவாயில் நண்பன் வளைகுடா சென்று வந்த நண்பனை பார்த்ததும் சந்தோசம் ஒருபுறம், மறுபுறம் நான் எப்போது சம்பாதிக்க ஆரம்பிப்பது என்ற ஏக்கம் !

மச்சான்... எனக்கு படிக்கவே  பிடிக்கவில்லை நானும் உன்னைப்போல
வளைகுடா வந்து விடுகிறேன் என்றான் படிக்கும் நண்பன் ...!

அடப்பாவி அந்த காரியத்தை மட்டும் செய்து விடாதே ! நான் படும் கஷ்ட்டம் கொஞ்சமல்ல பல பேர் இழி சொல்லுக்கு ஆளாகி வேலை செய்து வருகிறேன். அந்த நிலை உனக்கு வேண்டாம்.

எப்படியாவது படித்து விடு... இன்னும் மூன்று வருடம் அதன் பின்னர் நானே உனக்கு முயற்ச்சிக்கிறேன் என்றார் நண்பர். நண்பன் சொல் கேட்டு அவரும் கல்லூரி படிப்பை முடித்தார் மறு விடுப்பில் வந்த நண்பர் விசாவுடன் வந்து நண்பரை அழைத்து சென்றார். படிக்காத நண்பன் ஐந்து வருடம் ஈட்டிய பணத்தை ஒரே வருடத்தில் படித்த நண்பர் சம்பாதித்து விட்டார் !

இன்னும் ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன்...
காலம் செல்ல செல்ல வேலை வாய்ப்புகளில் படித்தவர்களுக்கிடையே போட்டி நிலவ ஆரம்பித்தது. இது கம்பெனி நிர்வாகிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பட்டதாரியாக இருந்தாலும் உபரியாக என்ன தெரிந்துள்ளாய் என்ற ஒற்றை கேள்வி மூலம் பலரை கழித்து கட்ட ஏதுவாக அமைந்தது. நான் கூற வரும் நிகழ்வும் இது சார்ந்ததே...

ஒருவருக்கு கல்லூரி படிப்பை முடித்ததும் உடனே கல்யாணமும் ஆனது உல்லாசமாய் ஆறு மாதம் கழிந்தது. உறவினர் மூலம் வளைகுடா பயணத்திற்கு ஏற்பாடானது... வளைகுடா சென்றார் அங்கே படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை எதுவும் இல்லை. வளைகுடாவிற்கு வருவதற்காக செய்த செலவுகள் ஊரில் கடனாக இருப்பதை அறிந்து எதோ ஒரு வேளையில் சேர்ந்தார். பலரிடம் தான் ஒரு பட்டதாரி  என்பதை கூறி தகுந்த வேலை தேடினார்.

ஒருவர் கூறிய அறிவுரை அவர் எதிர்காலத்திற்கு ஏற்றதாய் அமைந்தது. தம்பி இந்த காலத்தில் கல்லூரி படிப்பு ஒரு தகுதிதான். ஆனால் அலுவலக நிர்வாகத்திற்கு கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது மேற்படிப்பு தகுதி வேண்டும் என்றார். தனது தவறை உணர்ந்தார்.

ஆறு மாதத்தை வீணடித்து விட்டதை தனது மனைவியிடம் கூறி மனம் வருந்தினார். சற்றும் எதிர்பாராத பதில் மனைவியிடமிருந்து வந்தது. உடனே ஊருக்கு வாருங்கள். நீங்கள் விரும்பும் மேற்படிப்பை தொடருங்கள். அதற்கு உண்டான செலவுகளை எனது நகைகளை விற்று சமாளித்து கொள்ளலாம் என்றார்.

அது போன்றே ஊர் வந்தார்... அக்கறையாய் கல்வி பயின்றார். மீண்டும் வளைகுடா சென்றார். தான் படித்த கல்வி ! செல்வமாய் மாறி பண மழையாய் பொழிந்தது. மனைவி விற்று கொடுத்த நகைக்கு நான்கு மடங்கு நகை அணிவித்து அழகு பார்த்தார்.

நவீன காலக்கல்வி  நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வளர்த்து வருவதால் கல்லூரி படிப்பை முடித்து விட்டோம் என்று இருக்காமல் வேலை பார்த்து கொண்டே பகுதி நேரமாக மேற்படிப்பை படியுங்கள் என் அன்பு நெஞ்சங்களே..! வளைகுடா வாழ்வில் கல்வியின் மகத்துவம் அங்கு சென்றவர்களிடம் கேட்டால் தெரியும்...

படித்தால் மட்டும் போதாதுங்க !? அடுத்த வாரம்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

12 comments:

  1. கல்வியின் அவசியம் குறித்து விளக்கிய விதம் அருமை !

    ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு நல்ல விசயத்தை தாங்கி வருகின்றன. கட்டுரையாளரின் சாமர்த்திய திறமையை வியந்து பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  2. வளைகுடா வாழ்வின் மூலம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு கல்வித்தகுதி மிக முக்கியம் என்பதினை நல்ல உதாரணங்களுடன் விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்.அருமை .

    இதை அனுபவபூர்வமாக வளைகுடா வாழ்வில் நான் உணர்கிறேன்.என்ன தான் திறமைகளும் பல மொழிகள் பேசத் தெரிந்தும், அனைத்து தகுதிகளும் இருந்தாலும் மேற்ப்படிப்புச் சான்றிதழ் இல்லாமல் முன்னேற்றம் அடைய முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..அதிரை மெய் சா அவர்களே ...
      நீங்கள் கூறிய கருத்து நிதர்சன உண்மை

      Delete
  3. நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மையிலும் உண்மை!

    பொதுவாக, தமிழர்களிடம் கல்வியில் குறைபாடு இருப்பதே, மற்ற மாநிலத்தவர்கள் இங்கு நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுச் செல்லுகின்றனர். இப்பொழுது இங்கு வந்துக் கஷ்டப்படும் தந்தையர்கள் அவர்களின் பிள்ளைகளும் இவர்களைப் போன்று கஷ்டப்படாமலிருக்க வேண்டும் என்ற ஒரு வைராக்யத்துடனே தான் பணம் செலவழித்துப் பிள்ளைகளை மேற்படிப்பும், நுண்கலைகளும் கற்க வைக்கின்றனர். நமக்குப் பிறகு நம் பிள்ளைகள் நம்மைப் போல் இல்லாமல் உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும் என்பதே, இந்தத் தந்தையர்களின் பேரவாவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    உண்மைகளை உரத்தும், உரித்தும் சொல்லும் உங்களின் துணிவான எழுத்துக்கு என் உளம்நிறைவான வாழ்த்துகளும், பாராட்டுகளும் உரித்தாகுக!

    ReplyDelete
    Replies
    1. கற்றறிந்த ...கவியன்பரே ..
      தாங்கள் கூறிய கருத்து மிக சரியானதே

      Delete
  4. கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. அறிஞர் நபி தாஸ் அவர்களின் வருகை
      பதிவின் சிறப்பு

      Delete
  5. அருமையான ஆக்கம் படித்தால் மட்டும் போதாது படித்த படிப்பிற்கு வேண்டிய வேலையில் சேர்ந்து அதனுடைய அனுபவம் கற்றுக்கொள்ளுகள் படிப்பு மிக முக்கியம் அதன் கூட நமக்கு அதிர்ஷ்டமும் தேவை.

    ReplyDelete
    Replies
    1. தம்பி ஹபீப் அவர்களின் கருத்து பற்றி பின் வரும் நிகழ்வுகளில் கூற இருக்கிறேன் ...
      வருகைக்கு நன்றி

      Delete
  6. சீன தேசம் சென்றாகிலும் சீர் கல்வி தேடு-[ஸல்]அவர்கள்

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர போராட்டத்தின் போது...ஆங்கில கல்வியை
      புறக்கணிப்போம் என்று இஸ்லாம் கூறாத கருத்தை
      அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் கூறியதன் விளைவாக இந்திய முஸ்லீம்கள் கல்வியில் நூறு
      ஆண்டுகள் பின் தங்கி உள்ளனர் .சீன தேசம் சென்றாகிலும் சீரிய கல்வி கற்க சொன்ன பெருமகனாரின் வாக்கை பரிசீலிக்காமல் அக்கால அறிஞர்கள் அறிவித்தது அறிவீனமே

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers