.

Pages

Friday, October 25, 2013

எதிர்பார்ப்பு

கருவும் உருவாகிக் காண  எதிர்பார்ப்பு
கருமை முகில்கூடும் காட்சி எதிர்பார்ப்பு
பெருகும் விலைவாசி பேரம் எதிர்பார்ப்பு
உருகும் நிலைபோக உண்மை எதிர்பார்ப்பு

படிக்கும் பருவத்தில் பண்பின் எதிர்பார்ப்பு
அடிக்கும் தருவாயில் அன்பின் எதிர்பார்ப்பு
துடிக்கும் உடலும்தோள் தொங்க எதிர்பார்ப்பு
வடிக்கும் கவிதைக்கு வார்த்தை எதிர்பார்ப்பு

நகைக்கும் சிரிப்புக்கு நாடே எதிர்பார்ப்பு
பகைக்கும் குணத்திற்குப் பாவம் எதிர்பார்ப்பு
மிகைக்கும் கருணைக்கு மேன்மை எதிர்பார்ப்பு
புகைக்கும் பழக்கத்தால் புற்றே எதிர்பார்ப்பு

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 24-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

16 comments:

  1. ஒவ்வொரு வரியையும் எதிர்பார்போடு முடித்திருப்பது தனிச்சிறப்பு !

    வாழ்த்துக்கள் கவிக்குறள்...

    ReplyDelete
    Replies
    1. இலண்டன் வானொலியார் கடைசி நேரத்தில் (எதிர்பார்ப்புடன் காத்திருந்து, காத்திருந்துக் காலம், நேரம் கழியும் வேளையில்) புதன் அன்று தான் தலைப்பையும் எதிர்பார்த்திருந்த எங்கட்கு “எதிர்பார்ப்பு” என்றே தலைப்பிட்டுக் கேட்ட நேரத்தில் இந்தச் சிறிய பாடலை எழுதி முடித்து விட்டு, இன்று வெள்ளிக் கிழமைக் காலை அஜ்மானில் ஓர் இலக்கிய விழாவில் என்னைப் பெரிதும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து அழைத்திருந்த எங்கள் அமீரகக் கவிஞர் குழாமின் விழாவிற்குச் சென்று விட்டு, இப்பொழுதுத் தான் வந்தேன்., உங்களின் பின்னூட்டங்களின் எதிர்பார்ப்புடன்!. யானும் எதிர்பார்ப்பு என்ற சொல்லொடு முடித்திருப்பதும் தனிச்சிறப்பென்று பாராட்டியுள்ளீர்கள்; மிக்க நன்றி.

      “எதிர்பார்ப்பு” என்ற அந்தச் சொல்லைப் அடிகளின் ஈற்றில் அமைப்பதும் ஒரு மரபின் வாய்பாடாகும் எனபதாலும்,அவ்வோசைதான் மரபின் அடிப்படை என்பதாலும் யாத்தளித்தேன். யான் மிகுந்த எதிர்பார்ப்போடு எதிர்பார்த்த வண்ணமே உங்களின் பின்னூட்டக் கருத்தும் இருப்பதும் தனிச்சிறப்பு.

      ஒருபக்கம் இன்றைய இலக்கிய விழாவில் மிகப்பெரும் தமிழார்வலருடன் அடியேனையும் மேடையில் அமர்த்தியும், என் கவிதையை அவர்களும் இரசிக்க வைத்ததும், அப்படிப்பட்ட தமிழார்வலரின் தொடர்பும் கிட்டியதும்; யான் கலந்து கொண்ட அவ்விழா “மூன் டிவி”யின் பதிவுக்குள்ளும், “தின மலர்” நாளேட்டின் செய்திக்குள்ளும் சென்று விட்ட மகிழ்ச்சியும்,

      மறுபுறம், என் விருப்பப்படிக் கவிஞர்கள் இங்கு மரபின் அடியொற்றி வருவது கண்டதன் மகிழ்ச்சியும்

      எனக்கு மறக்க இயலாதவைகளாகி விட்டன; அல்ஹம்துலில்லாஹ்.

      ஆயினும், யான் மிகுந்த எதிர்பார்ப்போடு எதிர்பார்த்தவர்கள் ஆங்கு வரவில்லை என்பதும் எனக்குச் சிறிய வருத்தம் உண்டென்றாலும், அவரவரின் வேலைகளின் நெருக்கமும் காரணீயமாகும் என்றும் அறிந்து தேற்றுகிறேன்.

      Delete
  2. எதிர்ப்பார்ப்பு : ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்த்தேன் உங்களின் எதிர்பார்ப்பின் ரசிப்பையும். மிக்க நன்றி.

      Delete
  3. எனது எதிர்பார்ப்பு கவியன்பரின் கவிகள் புத்தகமாய்
    உருவெடுத்து ...வெளியாக வேண்டும் என்பதே

    ReplyDelete
    Replies

    1. ஆம். இன்ஷா அல்லாஹ் உங்களின் அந்த எதிர்பார்ப்பும் நிறைவறும் வண்ணம்,நேற்றைய இலக்கியச் சந்திப்பில் கலக்கிய போதினில் இறையருளால் ஓர் அரிய வாய்ப்பும் கிட்டியது, அதிரைத் தமிழூற்றே, அன்பர் சித்திக் அவர்களே! எல்ல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

      உண்மையில் அன்புத்தம்பி சேக்கனா நிஜாம் அவர்கள் மிக நீண்ட நாட்களாக என்னை வேண்டிக் கொண்டபடி என் கவிதைத் தொகுப்பு (இதுகாறும் என் சொந்த வலைப்பூந்தோட்டத்தில் பதியமிட்டப்பட்ட அக்கவிதைப்பூக்களில் 63 கவிதைகளைப் பூக்களை முதலில் கொய்து அவற்றை நூலுருவில் நெய்திட என் கணினியின் கோப்பில் வைத்தும், அதற்கான இரு பெரும் கவிஞர்களின் கருத்துரைகளும் பெற்றும் வைத்துள்ளேன் (அவர்களில் ஒருவர் என் மதிப்பிற்குரிய ஆசான், அதிரை அஹ்மத் காக்கா, மற்றொருவர் என் நண்பர் கனடாக் கவிஞர் புகாரி (புகாரியின் இஸ்லாமியக் கொள்கைகளில் யான் உடன்பாடுடையவன் அல்லன்; ஆயினும் அவருடைய கவிதைகளை யான் மிகவும் இரசிப்பவன்) முக்கியமாக அணிந்துரையாக என் முதுபெரும் ஆசான், காப்பியக்கோ இலங்கை ஜின்னா ஷரிஃபுதீன் வாப்பா அவர்களிடம் கேட்டுள்ளேன்; அவர்களைத் துபையில் சங்கமம் தொலைக்காட்சியில் சந்தித்த பொழுது அந்த 63 கவிதைகளின் தொகுப்பைக் கொடுத்து விட்டேன்; அவர்களின் பணி நெருக்கம் காரணீயமாகவே இன்னும் என்னிடம் அவர்களின் அணிந்துரையை அளிக்கவில்லை. மேலும், அவர்களின் மறுமொழியில் இவ்வாறு சொன்னார்கள், “ என் மாணவனே! மற்றவர்களின் கவிதைக்கு உடன் அணிந்துரையைக் கொடுப்பேன்; ஆனால் என் மாணவனாகவும் என் மரபின் வாரிசாகவும் நியமித்துள்ள உன்றன் பாடல்கள் யாவும் இலக்கணம் பிறழாதிருக்கவே நேரம் எடுத்துத் திருத்தித் தருவேன்” என்றார்கள். எனவே, “வெயிட்” ஆன அவர்களின் அணிந்துரைக்காக அடியேன் “வெயிட்” பண்ணுகிறேன்.

      நேற்றைய இலக்கியச் சந்திப்பில், சென்னை, மணிமேகலைப் பிரசுரத்தார் மூலமாக இன்ஷா அல்லாஹ் என் முதற்கவிதைத் தொகுப்பு வெளியிட ஒப்பந்தம் கையளித்து விட்டேன்.

      எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

      யான் பெற்ற இன்பம் என் சகக் கவிஞர்களும் பெறுக!

      குறிப்பு: என் கவிதைத் தொகுப்பின் தலைப்பாக, “ கலாமின் பேசும் கவிதைகள்” என்னும் சொற்றொடரைத் தெரிவு செய்தவர்கள், நம்மைப் போன்ற இத்தளத்தின் பங்களிப்பாளர்களை ஏற்றிவிடும் ஏணியாக விளங்கும், இத்தளத்தின் நிர்வாகியும் எம் அன்புத்தம்பியுமான விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் அவர்கள் என்பதையும் ஈண்டுக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  4. மனிதம் தழைத்தோங்க மாற்றம் எதிர்பார்த்தேன்
    புனிதம் நிறைவாகும் போக்கும் எதிர்பார்த்தேன்
    தனிமை தனதாகும் தாகம் எதிர்பார்த்தேன்
    இனிமை நிலைகொள்ளும் ஏற்றம் எதிர்பார்த்தேன்.

    பிரிக்கும் குனம்நீங்கும் பேச்சை எதிர்பார்த்தேன்
    சிரிக்கும் முகம்காணும் சேர்ப்பை எதிர்பார்த்தேன்
    உரிக்கும் பிரித்தானை ஓட்ட எதிர்பார்த்தேன்
    துரிதம் தனதாக்கும் தொண்டை எதிர்பார்த்தேன்.

    கவிஞன் வழிபற்றிக் கொள்ள எதிர்பார்பேன்
    கவிதை எதிர்பார்ப்பில் கற்க எதிர்பார்பேன்
    டிவியில் புகல்கண்டு டாலர் புகழ்பார்பேன்
    புவியில் புகழோங்க பூக்க எதிர்பார்ப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்று.
      யான் யாத்த வாய்பாட்டின் அடிப்படையில் பா வனையும் ஆற்றலைப் பெற்று, எனக்குப் பின்னர் மரபினைப் பற்றிப் பிடித்துத் தமிழறிஞர்கள். பாவலர்கள் பட்டியலில் தாங்களும் இடம் பெறுவீர்கள் என்ற நன்னம்பிக்கையைத் தங்களின் சீரிய- கடின முயற்சி எனக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

      அஃதே என்றன் எதிர்பார்ப்பு!

      Delete
    2. \\கவிஞன் வழிபற்றிக் கொள்ள எதிர்பார்பேன்
      கவிதை எதிர்பார்ப்பில் கற்க எதிர்பார்பேன்\\

      அன்பின் ஞான குருவே, நபிதாஸா!

      அஸ்ஸலாமு அலைக்கும்

      இவ்வரிகள் என்னை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்திவிட்டன:

      சுண்டு விரலைச் சொருகித் தொடர்சேயாய்க்
      கண்டு வியந்தது காண்.


      சுண்டுவிரல் பிடித்துத் தாயிடம் நடைபயிலும் சேயினைப்போல் கண்டேன் , தங்களும் கவிநடை பயில என்னைத் தாயினைப்போல் தக்க மதிப்புடன் கருதி வரும் தங்களின் தூய எண்ணம் கண்டு கொண்டேன்.
      ஆம், தாங்களோ ஞானப்பாட்டையின் நெறிகூறும் நல்லாசானை விளங்கும் நபிதாஸ் என்னும் நேர்வழியாளர். ஆயினும், தங்களிடம் இருக்கும் அந்த ஞானத்தில் சிறிதும் செருக்கின்றி, அடியேனிடம் மரபின் இலக்கணம் பயிலும் ஒரு மாணவனாகவே மாற்றிக் கொண்டு, அவ்வண்ணம் யான் அளிக்கும் பயிற்சிக்குப் பாடம் படித்து உடனுக்குடன் பயிற்சிக்குரிய “வீட்டுப்பாடமும்” பதிவுகளில் காணும் போதில், தங்களின் தன்னடக்கமும், கற்றுக் கொள்வதில் “ஈகோ” பார்க்கக் கூடாதென்ற உயர்ந்த இலட்சியமும் எண்ணி எண்ணி வியக்கின்றேன்.




      Delete
  5. கவித்தீபத்தின் எதிர்பார்ப்புக் கவி இன்னும் எதிர்பார்க்கும்படி இருந்தது.

    சிறப்பு அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. யானும் தான் இன்னும் எதிர்பார்த்தேன்; எதிர்பார்ப்புகள் ஏமாற்றமும் தரும் என்ற வரிகளும் எழுத நினைத்தேன்; அதுவேபோல், சில வாரங்கட்கு முன்னர் “அடுத்தவர் எதிர்பார்ப்பு” என்னும் தலைப்பிலும் ஆங்கு எமது கவிதைகள் பதியப்பட்டன; என்னுடைய சொந்த வலைப்பூந்தோட்டத்திலும் “ஏக்கம்” என்னும் ஒரு கவிதைப்பூ பதியம் இடப்பட்டுள்ளது. எனவே, சொன்னதையே திரும்பச் சொல்லும் ஒரு விரக்தியுண்டாகும் என்ற காரணீயமே என்னை அதிகம் இத்தலைப்பில் எழுத இயலாமற் நிறுத்தியது. ஆயினும், இதன் தொடர்ச்சியாக, “என் விருப்பம்” என்னும் தலைப்பிலும் வரிகளும் ஓடி வந்து கொட்டின; அவைகளையும் இந்த எதிர்பார்ப்புடன் இணைத்திட நினைத்தாலும், அவை மிக நீண்டதொரு கவிதையாகி விடும் என்றும் என் ஆழ்மனம் என்னைத் தடுத்து அணைபோட்டதால், அப்படித் தேக்கப்பட்ட அவ்வரிகள் என் மனக்குளத்தில் அணைபோட்டுக் காத்திருக்கின்றன., இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் “விருப்புத் தலைபுக்காக” தடுப்பிலிருந்து விடுபட்டு மடைதிறக்கும். இருப்பினும், நேற்று நடந்த இலக்கிய விழாவில்(அஜ்மானில்) அவ்வாறு மனக்குளத்தில் தேக்கி வைத்த என் விருப்பங்கள் என்னும் பாவரிகளில் சிலவற்றையே “கண்டேன் பாதையை” என்னும் தலைப்பில் கீழ்க்காணும் கவிதை வரிகளாய் மாற்றிப் பாடினேன்; பாவலர்களும், தமிழார்வலர்களும் வந்திருந்த அச்சபையில் அரங்கேறிய என் பாடல் இதோ:


      பார்முழுதும் படைத்தவனின் படைப்புகளைக் கண்டேன்
      பரமனவன் அற்புதங்கள் அவைகளிலே கண்டேன்
      கார்முகிலும் வெண்ணிலவும் மழைநீரும் கண்டேன்
      கர்த்தனவன் எழுதிவைத்தக் கவிதைகளாய்க் கண்டேன்

      வயல்வெளியில் காற்றோடு கதிராடக் கண்டேன்
      வயலினைப்போல் இசைத்தேனைப் பிழிந்தளிக்கக் கண்டேன்
      கயல்விழியின் கண்ணசைவில் கோடிசுகம் கண்டேன்
      கடைக்கண்னைத் திறந்திட்டத் தமிழ்க்கன்னி கண்டேன்


      சாடலுடன் வெகுண்டெழுந்துச் சமூகத்தைக் கண்டேன்
      சாற்றுகின்ற பாக்களிலே அக்கறையைக் கண்டேன்
      பாடலுடன் அறிவுரையும் இருப்பதைக் கண்டேன்
      பாவலர்கள் அவைகளையும் பாராட்டக் கண்டேன்

      கனவினிலே கவிதையெனும் காதலியைக் கண்டேன்
      கண்முன்னே எனக்குமென்றும் எழிலாகக் கண்டேன்
      நினைவினிலே அவளேதான் எனக்குள்ளே கண்டேன்
      நீங்காத பற்றுடனே இருப்பதையும் கண்டேன்

      அரபகத்தின் வாழ்க்கையிலும் தமிழின்பம் கண்டேன்
      ஆசான்கள் அளித்திட்டத் தமிழுணர்வு கண்டேன்
      மரபுவழிப் பாக்களாக ஊனெங்கும் கண்டேன்
      மன்றத்தில் கவிபாட அழைப்பிதழைக் கண்டேன்


      யாப்பிலக்கணம்: எண்சீர்க் கண்ணி
      வாய்பாடு: காய்+காய்+காய்+மா (அரையடிக்கு)

      Delete
    2. அதிரை மெய்சா என்னும் அன்பு நண்பரின் சிறப்பான வாழ்த்தினுக்குச் சிறப்பான நன்றிகள்.

      Delete
  6. வார வாரம் உங்கள் வரிகள் எங்களுக்கு எதிர் பார்ப்பு.

    அருமையாக சொன்னீர்கள் எதிர் பார்ப்பின் அருமையை.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் நேசர் ஹபீப் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்,
      உங்களின் நேசத்திற்கும் பாசத்திற்கும் என் கவிதைகளின் மீது எதிர்பார்ப்பிற்கும், இவ்வாழ்த்தினுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்,

      மீண்டும், மீண்டும் சொல்கிறேன்; ஒரு கவிஞன் ஒரு கவிதையை வெளிக் கொணர ஒரு குழந்தையைப் பிரசவம் செய்யும் ஒரு தாயின் அந்தச் சுகமான வேதனையே ஆகும். அப்படிப்பட்ட வேதனையில் உங்களின் பாராட்டும் அங்கீகாரம் என்னும் முத்தமும் எங்கள் கவிதைக் குழந்தைகட்குக் கிடைக்கும் பட்சத்தில் எங்களின் பிரசவங்களும் தொடரும், இன்ஷா அல்லாஹ்!

      மாறாக, சிலரின் தனிநபர்த் தாக்குதலால், எங்களை மன உளைச்சலுக்கு ஆளாகும் போதில் எங்களால் தொடர முடியாமல் உங்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் ஏமாற்றமும் கிட்டலாம்.

      Delete
  7. மனிதப்பிறப்பின் பார்வையில் இருப்பதை உணர்த்திய ஒவ்வொரு வரியும் சிறப்புங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆழமான உள்வாங்கும் திறனுக்கு இந்தப் பின்னூட்டமே சாலச் சிறந்த சான்றெனக் கண்டேன்; மகிழ்ச்சி கொண்டேன், என் மரியாதைக்குரிய சகோதரி சகிகலா அவர்களே!

      உங்களின் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் என் உளம்நிறைவான நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers