.

Pages

Friday, November 1, 2013

என் விருப்பம்

பார்முழுதும் அமைதித்தென்  றல்வீச  விருப்பம்;
பகையென்னும் புயற்காற்று நீங்கிடவே  விருப்பம்;
கார்முகிலும் மும்மாரிப்  பொழிந்திடவே விருப்பம்;
காடுகளும் அழியாமற் காற்றுவர விருப்பம்;

பசுமையெனும் தாய்மையைநான்  காத்திடவே விருப்பம்;
பயிரெங்கும் இயற்கையுரம்  தழுவிடவே  விருப்பம்;
பசுமரத்தா  ணியாய்மரபும்  நினைவிருக்க  விருப்பம்;
பைந்தமிழில் காவியங்கள் படைத்திடவே  விருப்பம்;

முழுசுகமும் உடல்மீது  முத்தமிட  விருப்பம்;
முயற்சிகளால் வாய்ப்புவாசல் திறந்திடவே விருப்பம்;
எழுதுவதும் எட்டுதிசை  எட்டிடவே விருப்பம்;
எல்லார்க்கும் உதவிடவே  என்கரங்கள்  விருப்பம்;

கண்ணியமாய்  மூத்தோரை  மதித்திடவே  விருப்பம்;
கற்றோரின்  காலடியில்  சுற்றிநிற்க  விருப்பம்;
புண்ணியங்கள் செய்வதனால் தீங்கொழிய விருப்பம்;
புவியெங்கும் பூமனங்கள் வாழ்ந்திடவே விருப்பம்

மதம்மொழியால்  பிரியாத  என்நாடு விருப்பம்;
மாணவர்கள் சாய்க்கடையில் வீழாமை விருப்பம்;
நிதம்நடக்கும் வன்முறைகள் இல்லாமை விருப்பம்;
நீதிகளும் எல்லார்க்கும் ஆகத்தான் விருப்பம்;

மண்ணகத்தில் உள்ளவற்றின் மனங்கவர விருப்பம்
மண்ணுக்குள் சென்றபின்னும் புகழ்மணக்க விருப்பம்;
விண்ணகத்தின் வானவர்கள் குடில்புகவே விருப்பம்;
வீணாகும் காலங்கள் முறைப்படுத்த விருப்பம்;

பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக விருப்பம்
பிள்ளைகளும் பெற்றோரை மதித்திடவே  விருப்பம்;
சுற்றத்தார்  விலகாமல் சூழ்ந்திருக்க விருப்பம்
சுவனமாக  வீட்டைத்தான் காணுதலில் விருப்பம்

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 31-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

18 comments:

  1. கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்தினுக்கு நன்றிகள் ஐயா.

      Delete
  2. உங்களது விருப்பம்
    அனைவர்களது விருப்பம்
    விரும்பியவை கிடைத்திட
    எனது விருப்பம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விருப்பம் என் விருப்பம். விருப்பம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  3. கவித்தீபத்தின் கவியில் சொல்லப்பட்ட அனைத்து விருப்பங்களும் நிறைவேறிவிட்டால் இவ்வுலகம் அமைதிபெற்று அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முற்றுப் புள்ளியாகிவிடும்.

    கவித்தீபத்தின் அனைத்துவரிகளும் நிஜமாகிட இறைவனை வேண்டிக் கொள்வோமாக.!

    ReplyDelete
  4. ஆம். அன்பர் அதிரை மெய்சா அவர்களே!

    உங்களின் வேண்டுதல் நிறைவேற வேண்டுகின்றேன் இறைவனிடம். உளம்போந்துக் கருத்துக்களை உள்வாங்கிச் சொன்ன வாழ்த்தினுக்கு என் உளம்நிறைவான நன்றிகள்.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    என் விருப்பம்.
    இது இந்த கவிதையின் தலைப்பு.

    மச்சான், உங்கள் விருப்பம்தான் என் விருப்பமும்.
    நம் விருப்பம்தான் நம் எல்லோருடைய விருப்பமும்.

    நாம் எல்லோரும் ஒரு மனதோடு விருப்பத்தை பகிர்ந்து கொண்டால் இந்த வையகத்தில் வெறுப்பு இருக்குமா?

    மனிதன் எப்போது தன் சொந்த விருப்பத்தை முறையாக விரும்புகின்றானோ, அன்று எல்லோருடைய விருப்பமும் முறையாக நிறைவேரினதாக அர்த்தம்.

    அப்புறம் என்ன, இந்த வையகம் மனிதன் சொல்படி நடக்கும்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக விருப்பம்
    பிள்ளைகளும் பெற்றோரை மதித்திடவே விருப்பம்;
    சுற்றத்தார் விலகாமல் சூழ்ந்திருக்க விருப்பம்
    சுவனமாக வீட்டைத்தான் காணுதலில் விருப்பம்.அருமை வரிகள்.

    மொத்தத்தில் அணைத்து விருப்பங்களும் எனக்கு விருப்பம்

    ReplyDelete
    Replies
    1. அன்பு நேசர் ஹபீப் அவர்களின் அன்பான அனைத்து விருப்பங்களும் என் விருப்பங்களுடன் இணைந்திருப்பதற்கு என் இதயம் நிறையும் இனிய நன்றிகள்.

      Delete
  7. அன்பின் மச்சான் அவர்களின் விருப்பங்களும் என் விருப்பங்களும் அனைவரின் விருப்பங்களும் ஒன்றென அறிந்தேன்; அவைகள் யாவும் நிறைவேற இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

    “சின்னச் சின்ன ஆசை” முதல் “வேண்டும் வேண்டும்” என்று வேண்டும் பாடல்கள் வரைக்கும் எல்லாரிடத்திலும் ஓர் ஆசையும் வேண்டுதலும் தேட்டமும் நாட்டமும் கொண்டு எண்ண அலைகளின் எதிர்பார்ப்புகள் மனக்கரையில் வந்து மோதிக் கொண்டுதானிருக்கின்றன. அவற்றுள் “என் விருப்பம்” என்று தலைப்பிட்டு என் விருப்பங்களைப் பதிய வேண்டும் என்று என் சின்னச் சின்ன ஆசையும் , வேண்டும் வேண்டும் என்ற வேண்டுதலும் இப்பதிவால் மனம்நிறைய வைத்து விட்டது.

    ஆயினும், கலியுகம் என்றும் “கியாமத் நாளின் நெருக்கம்” என்றும் கூறப்பட்டுள்ள அடையாளங்களில் பல இற்றைப் பொழுதினில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதாற்றான், எம் விருப்பங்களான மேற்காணும் நல்லாசைகள் நடைபெறத் தடையாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் அறிவேன்.

    பூமனங்கள் வாழ வேண்டிய பூமியானது பேய்மனங்களின் கூடாரமாகி, பாவங்களை நல்லதெனச் செய்யும் தலைகீழ் வாழ்க்கை முறைகளை நோக்கி நகரும் இந்தப் பூமியின் நகரம் எங்கும்; அதனால் இம்மக்கள் நரகம் நோக்கியே சாத்தானால் வழிநடத்தப்படுகின்றனர் என்பதும் அறிவேன்.

    இறைவன் நாடினால் என் விருப்பங்கள் நிறைவேறலாம் என்ற சின்னச் சின்ன ஆசையில் யான் யாத்திட்ட இப்பாடலுக்குப் பின்னூட்டங்களிட்ட அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

    ReplyDelete
  8. உங்களது விருப்பம்
    அனைவர்களது விருப்பம்
    விரும்பியவை கிடைத்திட
    எனது விருப்பம் 

    ReplyDelete
    Replies
    1. உங்களோடு இருப்பதில் எல்லார்க்கும் விருப்பம்.
      உங்களின் விருப்பமான வாழ்த்தினுக்கு என் விருப்பமான நன்றிகள்.

      Delete
  9. கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. உலகெங்கும் ஒற்றுமைதான் ஓங்கிடவும் ஆசை;
    உள்ளத்தில் ஒருமையுடன் உயர்ந்திடத்தான் ஆசை;
    நலன்களாக நன்மைகளை நாடிடவே ஆசை;
    நன்மைகளை தடுப்பவைகள் நலுவிடவே ஆசை.

    திலகமாக எம்மக்கள் திகழ்ந்திடவே ஆசை;
    தீண்டாமை எங்கணுமே தேங்கிடாத ஆசை;
    பலமான நட்புகளே பசுமையாக ஆசை;
    பகைமைகளே இல்லாத பார்வைகளே ஆசை.

    குலப்பெருமை காத்திடும்நல் குணநிறைவு ஆசை;
    குறைவில்லா சுகாதாரம் குன்றாமல் ஆசை;
    நிலமெங்கும் பசுமைகளே நிலைத்திருக்க ஆசை;
    நிகரில்லா கொடைத்தன்மை நிறைந்திருக்க ஆசை.

    கலக்கமில்லா இதயமுடன் கடைசிவரை ஆசை;
    கற்பனைகள் நல்லவைகள் கனிந்திடவும் ஆசை;
    இலக்குகளை எளிதாக எட்டிடவும் ஆசை;
    இகமதிலே இனிமையுடன் இருந்திடத்தான் ஆசை.

    புலன்களெல்லாம் கடைசிவரை புதிதுபோல ஆசை;
    புத்தியுடன் பக்தியுடன் பொறுமையிலே ஆசை;
    மூலவனின் வாசமாக முகமிருக்க ஆசை;
    முக்காலம் அறிந்துணர்ந்த முன்னவர்மேல் ஆசை.

    சுலபமாக படைத்தவனை சுயமறிய ஆசை;
    சுயம்புவாக நிலைகொண்டு சூழ்ந்திடவே ஆசை;
    காலத்தில் நிலைத்திருக்கும் கவியாக்க ஆசை;
    கலாமினது யாப்பினிலே பாவனைய ஆசை.

    இன்று மதியம் வரை ஊரில் இல்லை எனவே காலதாமதமாக பின்னுட்டம் வனைய நேர்ந்தது.

    நன்றி ! அன்பரே.

    ReplyDelete
  11. //கலாமினது யாப்பினிலே பாவனைய ஆசை.\\

    என் ஆசையைத் தாங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்,
    எண்சீர்க் கண்ணியில் என் விருப்பக் கவிதையின் அடிகளையொற்றியே. நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் இப்பாடலில் யான் யாத்ததும் எண்சீர்க் கண்ணி என்னும் வாய்பாட்டின் அமைப்பில் தான்; இதனையே, இன்னும் நான்கு அரையடிகளில் நீட்டித்தால் (மா+மா+மா+தேமா அரையடிக்கு என்னும் வாய்பாட்டின்படி ) ஓர் எண்சீர்க் கழிநெடிலடி விருத்தம் உருவாகியிருக்கும்.

    விருத்தம் எழுத வருத்தம் எதற்கு என்று இன்ஷா அல்லாஹ் விரைவில் கற்பிக்கின்றேன். அதுவரை, வெண்பா, ஆசிரியப்பாவினைத் தொடர்க. பின்னர் படிப்படியாக ஏறுக.

    எனக்குப் பின்னர் மரபைப் பற்றிப் பிடிப்பதில் ஆர்வம் கொண்ட தங்களால், இயல்பாக - கருவில் திருவாகி- இறைஞானம் மிக்கவராய் இருப்பதால், அதிரை அருட்கவி தாஹா அவர்களைப் போல் ஞானப்பாடல்கள் யாத்தளிப்பீர்கள் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்துவிட்டீர்கள்; அல்ஹம்துலில்லாஹ்.

    ஜஸாக்கல்லாஹ் கைரன்

    ReplyDelete
  12. பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக விருப்பம்
    பிள்ளைகளும் பெற்றோரை மதித்திடவே விருப்பம்;
    சுற்றத்தார் விலகாமல் சூழ்ந்திருக்க விருப்பம்
    சுவனமாக வீட்டைத்தான் காணுதலில் விருப்பம்//
    நல்லதோர் ஆசை ..

    ReplyDelete
    Replies
    1. கவிப்பேரரசு வைரமுத்துவின் “சின்னச் சின்ன ஆசை” மற்றும் “வேண்டும்” என்ற பாடல்களில் சொல்லப்பட்டவைகள் கற்பனையானவைகள் என்பதால் அவைகள் நிறைவேறா. ஆனால், கவியன்பன் கலாமின் இந்த “விருப்பங்கள்” இறைவன் நாடினால் நிறைவேற்றலாம் என்ற ஆதரவுடன் எழுதி விட்டேன்; நல்லதோர் ஆசையென்று நலமுடன் வாழ்த்தியமைக்கு நன்றிகள் கோடி, என் நண்பரும் முதலாளியுமான அதிரைத்தமிழூற்று அவர்களே!

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers