.

Pages

Friday, November 15, 2013

கவியன்பன் கலாமின் கவிதைக்கு குரல் கொடுத்த பிரபல பதிவர் ஜாஃபர் [ காணொளி ]

தஞ்சை மாவட்டம் அதிரை என்ற ஊரின் பிரபல கவிஞர் அபுல் கலாம். இவர் யாப்பு வடிப்பதில் மூத்த கவிகளில் ஒருவராக இந்த ஊரில் திகழ்ந்து வருபவர். இவருக்கு இணையத்தோடு தொடர்புடைய நட்பு வட்டம் ஏராளம். குறிப்பாக இவர் எழுதும் கவிதையை ரசிக்கும் பெண் வாசகர்கள் அதிகம். வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். தான் பெற்ற கவி புலமையை பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்ற உயரிய பண்புடையவர். எந்தவொரு தலைப்பை கொடுத்தாலும் உடனுக்குடன் கவிதை எழுதுவதில் வல்லவர். 'கவியன்பன்' என்றும் 'கவிக்குறள்' என்றும் இணையத்தோடு தொடர்புடைய அவர்களின் நண்பர்களால் அன்புடன் பாராட்டப்படுபவர்.

இலண்டன் வானொலி இவரின் கவிதையை வாரமொருவரை தொடர்ந்து வாசித்து வருகின்றன. சமீபத்தில் இவருக்கு இலங்கையிலிருந்து செயல்படும் சர்வேதச அளவினான தடாகம் இலக்கிய வட்டத்திலிருந்து 'கவித்தீபம்' என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது.

சமீபத்தில் இவர் எழுதிய கவிதை 'பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!' இந்தக் கவிதையை  தஞ்சை மாவட்டம் அதிரை என்ற ஊரைச்சேர்ந்த பிரபல பதிவர் ஜாஃபர் அவர்கள் தனது இனிய குரலில் பதிவு செய்து காணொளியாக வடிவமைத்துள்ளார்.

காணொளியை கண்டு மகிழ்வதற்கு முன்பு நண்பர் ஜாஃபர் அவர்களைப்பற்றிய சிறு குறிப்பொன்றை நாம் பார்ப்போம்...
தஞ்சை மாவட்டம் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள இவர் சவூதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகின்றார்.

சமூக ஆர்வலரான இவர் அய்டா என்ற சமுக அமைப்பின் ஆலோசணைக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். பதிவர், ஊடக ஆர்வலர், உள்ளூர் வலைத்தளம் அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் நிர்வாகி மற்றும் இன்னும் சில தளங்களின் பங்களிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டு சேவை செய்து வருகின்றார்.

சமூக விழிப்புணர்வு ஆக்கங்கள் பலவற்றை உள்ளூர் தமிழில் அழகாக எழுதியுள்ளார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசும் இவருக்கு ஏராளமான நட்பு வட்டாரம் உள்ளன. இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து அவர்களின் ஆக்கங்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.

இனிய குரலில் ஜாஃபர் பாடிய காணொளி :


'கவியன்பன்' கலாம் இயற்றிய எழுத்து வடிவில் உள்ள கவிதை :

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!
பாவையை விட்டு வந்து
….பாலையின் சூட்டில் நொந்து
தேவையைக் கருத்திற் கொண்டு
…தேடினோம் செல்வம் இன்று
யாவையும் மறக்கும் நெஞ்சம்
..யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும் பிள்ளை
..பிரிவினைத் தாங்க வில்லை!
விடையினைக் கொடுத்த நேரம்
…விலகியே நிற்கும் தூரம்
தடைகளாய்ப் போன தூக்கம்
..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம்
மடையென திறக்கும் கண்ணீர்
..மனத்தினில் கொதிக்கும் செந்நீர்
உடைந்திடும் இளமைக் கட்டும்
..உடையினில் வேடம் மட்டும்!
வாயினைக் கட்டிப் பூட்டி
…வயிற்றினைப் பசியால் வாட்டி
காயமும் தாங்கிக் கொண்டு
…கயிற்றினில் தொங்கிக் கொண்டு
தாயகத் தேவை ஆசை
..தீர்ப்பது எங்கள் காசே
மாயமாம் இந்த மோகம்
…மடியுமோ இந்த வேகம்?
வாடிய பயிராய் வாழ்க்கை..
…வளமுள காசின் சேர்க்கை
தேடிய செல்வம் தீரும்
..தேவையோ நாளும் ஊறும்
 ஓடியே களைத்து மீண்டும்
…ஓடவே நம்மைத் தூண்டும்
ஓடிடும் விலையின் ஏற்றம்
..ஓட்டுமே ஊரை விட்டும்
ஒட்டகம் போல நாங்கள்
  ஓய்விலாச்  சுமைகள் தாங்க
ஒட்டகம் மேயும் நாட்டில்
..உழைப்பதைச் சொன்னேன் பாட்டில்
பெட்டகம் நிறைய வில்லை
…பெரிதினும் பெரிதாய் இங்கே
கட்டிடம் கட்டும் வேலை
….கரணமும் விட்டால் மேலே!

'கவியன்பன்' கலாம்

21 comments:

  1. இனிய குரலில் சிறந்த விழிப்புணர்வு கவிதை !

    மரியாதைக்குரிய கவிக்குறள் அவர்களுக்கும், நண்பர் ஜாஃபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. இரு படைப்பாளிகள் ஒன்றாக கைக்கோர்த்து புதிய முயற்சியில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கின்றது.

    ReplyDelete
  3. இந்த வாரம் (14/11/13 வியாழன்) இலண்டன் வானொலிக்கு இப்புதிய முயற்சியில் “வாழ்க்கை என்னும் பாடம்” என்னும் விருப்புத்தலைப்பில் யான் எழுதிய பாடலுக்கு, அன்பர் - பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்களின் தேன்குரலில் பதிவாகி- காட்சி அமைப்புகளுடன் கூடிய ஓர் இணைப்பை விழியத்தில் அனுப்பியிருந்தோம். இந்த நிமிடம் வரை அதன் ஒலிபரப்பின் பதிவிறக்கம் கிடைக்காமல் இருப்பதால், என் மீதும் என் கவிதைகள் மீதும் உள்ள அன்பினால், எங்கள் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய இத்தளத்தின் நிர்வாகி விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் அவர்கள் என் இக்கவிதை (”பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு முன்னர் இடப்பட்டதாக இருப்பினும், மீள்பதிவாகவும், சிறப்பான முறையில் பாடியும் காட்சி அமைப்புகளும் சேர்த்துள்ளதன் காரணீயமாகவும், அன்பர்-- பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்களை கவரவிக்கும் எண்ணத்துடனும் ஈண்டுப் பதிந்தமைக்கும், உங்களின் வாழ்த்தினுக்கும் எங்களின் உளம்நிறைவான நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

    ReplyDelete
  4. கவித்தீபத்தின் இப் புதிய முயற்ச்சிக்கு முதலில் வாழ்த்துக்கள்.

    சகோதரர் ஜாஃபரின் தேனினும் இனிய குரலில் கவித்தீபத்தின் பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு நெஞ்சைக் கிள்ளிய கவிவரிகளாய் மேலும் சிறப்புடன் மிளிர்ந்து நிற்கிறது.அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அன்பின் மெய்சா அவர்கள் உளம்போந்து அளித்த வாழ்த்தினை ஆனந்தக் கண்ணீர் மல்க ஏற்கின்றோம், நாஙகளிருவரும், இன்ஷா அல்லாஹ் அன்புத் தம்பி , பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்கள் இனிமேல் தொடர்ந்து இவ்வண்ணம் அமைத்துக் கொடுப்பார்கள், உண்மையில் இந்தப் புதிய முயற்சி என்னுடையதல்ல, ஒருநாள் திடீரென்று, அன்பர் பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்கள் எனக்கு மின்மடலில் என்பாடல் “அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக” என்ற பாடலின் கவிதை வரிகளை அவராகவே ஓய்வில் பாடிவிட்டுப் பதிவும் செய்து எனக்கு அனுப்பிக் கருத்தும் கேட்டார்கள். அவர்கள் அதனை அனுப்பிய வேளையில் எனக்கு அலுவலகப் பணி நெருக்கம் காரணீயமாக அந்தப் பதிவை நோட்டமிட நேரமில்லை; ஆயினும் தொடர்ந்து மிகுந்த ஆர்வம் காரணீயமாக அன்பர் பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்கள் ஜித்தாவிலிருந்து அலைபேசியில் அழைத்து என்னிடம் அப்பதிவைப் பற்றிக் கேட்டதும், உடன் அறைக்குச் சென்று கணினியைத் திறந்து பார்த்தேன்; கேட்டன்;மகிழ்ந்தேன்; இவ்வளவு தேன் சொட்டும் குரலா என்று வியந்தேன்; உடனே அவர்கட்கு ஓர் அங்கீகாரமும் அனுமதியும் இட்டேன்; இன்ஷா அல்லாஹ் இனிமேல் என் பாடல்கள் (குறிப்பாக வண்ண்ப்பாடல் என்னும் யாப்பின் மரபுக்குள் கட்டுண்டு ஓசை நயம் இருப்பதால் பாடகரின் வாயசைவுக்கு ஒன்றிவிடும் என்பதால்) யாவும் தொடர்ந்து அவரே பாடலாம் என்று அனுமதி கொடுத்தும் விட்டேன். அதன் பிரதிபலிப்பே இந்த வெளியீடு. நேற்றும் இலண்டன் வானொலிக்கு : வாழ்க்கை என்னும் பாடம்: என்னும் என் கவிதை வரிகளை இதுவே போல் மிகவும் ஈடுபாட்டுடன் பாடியும் காட்சி அமைப்புகள் கோத்தும் செவ்வனே செய்து தந்ததை அனுப்பி விட்டேன்; இன்று வரை அத்தளத்தில் பதிவிறக்கம் காணாதததினால் இந்த எங்களின் இரண்டாம் வெளியீட்டை ஈண்டுப் பதிந்து விட்டார்கள், நம்மீது அளவற்ற அன்புள்ள நம் சகோதரர்- இத்தளத்தின் நிர்வாகி நிஜாம் அவர்கள்.

    ReplyDelete
  6. நண்பர் நிஜாம் இப்பதிவை பதிந்து எனக்கு மீண்டும் அங்கீகாரம் கொடுத்ததோடு, கவியன்பனின் வரிகட்கு மீண்டும் மரியாதை செலுத்தியுள்ளீர்கள்

    இன்ஷா அல்லாஹ் இனி என் முயற்சியில் பல பதிவுகள் வெளிவரும், கவியன்பனின் வரிகளுடன்.

    பதிவிற்கு மீண்டும் ஜஸாக்கல்லாஹ் நன்றி....

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ், அன்புத் தம்பி ஜாஃபர் அவர்களின் உள்ளத்தில் இப்படிப்பட்ட ஓர் உதிப்பைப் போட்ட எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். யான் கனவிலும் காணாத ஓர் அரிய முயற்சி; அதிலும் கணினித் துறையில் இந்த அளவுக்கு ஈடுபாடு இல்லாத எனக்கு, இப்படிக் கடின உழைப்பில் உருவாக்கும் ஓர் இனிய சகோதரர் ஜாஃபர் அவர்களின் கூட்டு முயற்சி எனக்குக் கிடைத்த நற்பேறு என்றே கருதுகின்றேன். எனக்குத் தெரியாமலே இரகசியமாகவே என்னை உயர்த்தும் பணிகளில் ஈடுபடுகின்றவராகவே இவர்கள் திகழ்கின்றார்கள்; குறிப்பாக, தமியேன் சென்ற ஆண்டு உமராவுக்குச் சென்ற வேளையில் புனித மக்கா நகரில் வைத்து என்னை முதன்முதலாக நேர்காணலும் எடுத்துப் பதிந்தவர்கள்; அதுவே போல் தான் இந்த முயற்சியிலும் என்னைக் கேட்காமல் அவர்களாகவே முன்வந்து இரகசியமாகவும் - கச்சிதமாகவும்- மிகவும் கடின உழைப்பைச் சிந்தியே இந்த அரிய படைப்பை வெளியிட்டுள்ளார்கள் என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும், அவர்கட்கு யான் பெரிதும் கடப்பாடு உடையவனாகவே இருக்கின்றேன்; இந்தக் கூட்டணி அல்லாஹ்வால் - அல்லாஹ்வுக்காக் ஏறபடுத்தப்பட்டிருப்பதாற்றான், இத்துணை விரைவாக உஙகளை எல்லாம் எட்டியிருக்கின்றது; அல்ஹம்துலில்லாஹ் ஷுக்கூர்.

      Delete
  7. கருத்திட்டு ஊக்கமளித்த சகோ. மெய்சா அவர்களுக்கும்.. நண்பர் சேக்கன நிஜாம், கவியன்பன் கலாம் காக்கா ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தமியேன் தலைமையில் , அதிரைப்பட்டினம் , ஆஸ்பத்திரித்தெரு (யான் பிறந்தத் தாய் வீட்டுத் தெரு)வில் அமைத்து இருந்த “ஹிமாயத்துல் இஸ்லாம்” சங்கத்தின் ஆலோசகராய் இருந்த எங்களின் மதிப்பிற்குரிய ஆலிம் கோயா ஹழ்ரத் அவர்களின் “தர்பியத்துல் இஸ்லாமிய்யா” என்னும் பாடசாலையில் பயின்று அவர்களின் வழிகாட்டுதலும் பயிற்சியும் கொண்டே இவர்கள் இந்த இனிய குரலின் பாடகராய் அமைந்தார்கள் என்பதையும் அறிந்து மிக்க மகிழ்ந்தேன்; அல்லாஹ்வைப் புகழ்ந்தேன்.

      Delete
  8. நல்ல முயற்சி ..
    கா.மு.ஷரிப் ..அவர்களின் கவிக்கு ..
    குமரி அபூபக்கர் பாடிடியத்தை போன்ற உணர்வு ..
    வளைகுடா வாழ்கையில் கடைநிலை ஊழியரின்
    நிலை பற்றி சோகமாய் சொன்ன விதம் .அருமை ..
    சகோ ஜாபர் அவகளின் குரல் வளம் ..சொல்லாற்றல்
    அருமை அருமை ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. //வளைகுடா வாழ்கையில் கடைநிலை ஊழியரின்
    நிலை பற்றி சோகமாய் சொன்ன விதம் //

    அன்பின் அதிரைத் தமிழூற்றே!

    முதற்கண் உஙகளின் முந்தையப் பதிவுகளில் வளைகுடாவில் வாழும் தொழிலாளிகளின் பாட்டைச் சொன்னீர்கள்; அதனைப் படித்தும், யான் கண்டும் கேட்டும் உணர்ந்தசெய்திகளைவைத்தும் தான் இப்பாடலை யாத்திட்டேன்; அன்புச் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்களின் குரலின் அசைவுக்கு ஒத்து வாய்ப்பாடும் வண்ணம் இந்தப்பாடலின் அமைப்பின் இலக்கண வாய்பாடும் வண்ணப்பாடலின் அமைப்பிலும், விளம், மா, மா என்னும் விருத்தப்பாவின் இலக்கணத்திலும் அமைத்ததனால் அவர்க்கு மிகவும் இலகுவாக அமைந்து விட்டது, அன்புச் சகோதரர் அவர்களின் குரலின் ஏற்றம் உணர்ந்து அதற்கொப்பவே இனிமேலும் இன்ஷா அல்லாஹ் யான் பாடல்களைப் புனைவேன் என்றும் அவர்கட்கு உறுதியளித்துள்ளேன். இப்பாடல் எங்கள் கூட்டணியின் இரண்டாம் வெளியீடு ஆகும், முதல் வெளியீடு என் பாடல் “அருளைச் சுமந்த ஹாஜிகளே” வருக என்னும் வண்ண்ப்பாடலை அன்புச் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்களின் இனிய முதற்முயற்சியில் வெளியாகி அதிரை நிருபர் மற்றும் அதிரை நியூஸ் தளங்களில் இடம் பெற்று விட்டது. இப்பொழுது இந்த இரண்டாம் வெளியீடு ஈண்டுப் பதியப்பட்டுள்ளது. மூன்றாம் வெளியீடு நேற்று இலண்டன் வானொலிக்கு அனுப்ப்பட்டு விட்டது; அதன் பதிவு இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் ஈண்டுப் பதிவில் காணலாம்.

    உங்களின் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் எங்களிருவரின் அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. சுவைகளை தொட்டு நீங்கள்
    .....சொன்னவை கேட்டு நாங்கள்
    இவைகளை தெவிட்டா பாட்டில்
    .....இனிமையாய் குரலில் விட்டார்
    புதுமைகள் படைக்க வந்தீர்
    ..... புகழினில் நிலைப்பீர் நீவீர்.
    இதுதனை நவின்றேன் பார்ப்பீர்
    .....இதமுடன் இருவரும் ஏற்பீர்.

    ReplyDelete
    Replies
    1. இப்பின்னூட்டக் கவிதை மிகவும் அருமையாகவும் ஓசை மற்றும் ஈற்றுச் சீரின் சந்தங்களின் சொந்தங்களும் இன்னும் என் பாடலை நெருங்கி விட்டது. மிக்க நன்றி . இன்னும் முயற்சியுங்கள்; யான் தரும் பயிற்சிகளைப் பின்பற்றுங்கள்; இன்ஷா அல்லாஹ் அடுத்து உங்கள் பாடலும் எங்கள் கூட்டு முயற்சியின் வெளியீடாக வரும்.

      குறிப்பு: மேற்கண்டப் பாடல் விருத்தம் என்று எண்ணினால், 4 அடிகளிலும் ஒத்த் சீராக அமைக்க வேண்டுகிறேன்; அல்லது, 4 அரையடிகளைப் பிரித்துப் போட்டுத் தனித்தனியாக் மாற்றிப் பதிந்தால் அதுவே எண்சீர்க் கண்ணியாகும் (என் முந்தையப் பா “விருப்பம்” தலைப்பில் உள்ளதும் அந்த எண்சீர்க் கண்ணிப் பா அமைப்பு என்பதும் நோக்குக.)

      எனக்கு நிறைவான நம்பிக்கை வந்து விட்டது, இன்ஷா அல்லாஹ் அதிரைக்கு மற்றுமொரு மரபுக்கவிஞர் உருவாகி விட்டார் என்னுடைய பயிற்சியும் ; உங்களுடைய முயற்சியும் , அல்லாஹ்வின் அருள் கொண்டு தொடரும்...

      Delete
    2. \\தனித்தனியாக் மாற்றிப் பதிந்தால் அதுவே எண்சீர்க் கண்ணியாகும் (\\

      மன்னிக்கவும். உங்களின் பின்னூட்டக் கவிதை ”அறுசீராக இருப்பதால்” அறுசீர்க் கண்ணியாகவும் மாற்ரலாம். அல்லது இன்னும் இடையில் இரண்டு சீர்கள் சேர்த்து எண்சீர்க் கண்ணியாகவும் மாற்றலாம்.

      அல்லது. நீங்கள் என்பாடலைப் பின்பற்றியிருந்தால், எல்லா 4 அடிகளிலும் ஒத்தசீராக அமைத்துவிடுக.

      Delete
    3. நல்லது அன்பரே. தங்களது பாடலை பார்த்து அதுபோல் பின்னுட்டம் எழுத ஒன்று எழுதிவிட்டேன். ஆனால் அதை பதியவில்லை. இருப்பினும் அவசர கதியில் இதனை பின்னுட்டம் இட்டேன். அதிலும் சில விளக்கங்கள் பெற்றேன்.

      நன்றி !

      Delete
    4. \\அவசர கதியில்\\

      பதறாத காரியம் சிதறாது என்பர் முன்னோர்கள்; அவர்தம் வழிகளைப் பின்பற்றும் தாங்களும் யானும் இப்படிப்பட்ட அவசர கதியில் நிரம்பத் தவற்றினைச் செய்கின்றோம் என்றால், அதனால் பிழைகள் இல்லை; மாறாக, அனுபவம் என்னும் பாடம் படிக்கின்றோம். மேலும், கற்பிக்கும் ஆசான் அவர்களிடம் மீண்டும் கேட்டுத் தெளிவுறும் ஓர் அரிய வாய்ப்புக் கிட்டும் என்பதால்; கவலையை விட களிப்பே அடைவோம்.
      கற்க கற்க ஞான்மும் புலமையும் கூடுமன்றோ?

      தமியேனுக்கும் இன்று ஒரு தவறு என் பாடலில் தென்பட்டது; அதுவும் ஒரு அவசர கதி என்பதை உணர்ந்தேன்; எனவே, “மீள்பார்வை” என்பது கவிதையில் மட்டுமன்று, நாம் செய்யும் அலுவலகப் பணிகளிலும் அப்படி “மீள்பார்வை” செய்யாமல் உடன் பதிந்து விட்டா அதனால் தணிக்கையில் மாட்டிக் கொள்வதும் எமக்கும் உண்டாகும் ஓர் அனுபவமே!

      “அவசரம் ஷைத்தானுடையது” என்றும் கூறுவர்; நம் இரத்த நாளங்களில் ஓடும் ஷைத்தானால் இப்படிப்பட அவசரங்கள் ஆபத்தை விளைவிக்கின்றன என்பது அறிவோமாக.

      யான் கண்ட என் பாடலின் தவறு;

      ஒரு நான்மணி இயற்றிப் பதிவுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றேன். உண்மையில் அதன் அமைப்பில், நான்கு வகைப் பாக்கள் இடம்பெற்றுவிட்டன; ஆயினும், அதனை முன்னோர்கள் கையாண்ட விதமாக, மண்டலித்து வரும் அந்தாதி என்னும் வகையில் முதற்பாவின் ஈற்றுச் சீர் அடுத்தப் பாவின் முதற்சீராக அமைக்க வேண்டும் என்ற அதிசிறப்பான ஓர் அங்கத்தை விட்டு விட்டேன் முந்தைய இரு பதிவுகளாம் அந்த நான்மணி மாலையில் (வேறொரு தளத்தில்) இன்று தான் யான் அந்த அவசர கதியில் மீள்பார்வையிடாமையைக் கண்டு, இன்று இயற்றிவிட்ட மூன்றாம் பகுதியில் அந்த “அந்தாதி” அமைப்புச் செவ்வனே கொண்டு வந்து அமைத்து விட்டப் பின்னர் தான் என் மனம் நிம்மதி அடைந்தது; இதை ஈண்டுச் சொல்வதன் நோக்கம்;: ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதால், அவசரம் எனபது மனிதர்களின் இயல்புதான் எனபதைச் சுட்டிக் காட்டுதலே ஆகும்.

      Delete
  12. இனிய குரலில் சிறந்த விழிப்புணர்வு கவிதை !கவிதைவரிகள் அதற்கு சமர்ப்பணம்.

    ஒரு கை தட்டினால் ஓசை வராது இரு கையும் சேர்ந்தால் தான் அதில் ஓசை அது போல் இந்த பதிவில் இருவர் சேர்ந்ததாளிலோ என்னவோ இதில் அதிக ஓசை கிடைத்துள்ளது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம். உண்மையிலும் உண்மை; முக்காலும் உண்மை; அன்பின் நேசர் ஹபீப் அவர்கள் கூற்றை முழுமையாய் ஏற்கிறேன்’ உடன்படுகிறேன். என்னுடைய கவிதை வரிகள் கண்னிப் பெட்டிக்குள் உறங்கும்பொழுது அதன் வீரியம் எனக்கே தெரியவில்லை;ஆனால், திடீரென்று அல்லாஹ் எங்களின் மேல் கருணைமழை பொழிந்தான்; காணொளி வடிவில் என் கவிதை வரிகளின் உணர்வுகட்கு “உயிரோசை” யை அன்புச் சகோதரர்- பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்களின் தேன்குரலில் ஊட்டப்பட்டதும் பெட்டியிலிருந்து எழுந்து எட்டுத் திசைகளிலும் எட்டும் வண்ணம் இணைய உலகில் உலா வந்து கொண்டிருக்கின்றன. உங்களின் கைதட்டல் கூட அவ்வோசையை மேலும் மெருகூட்டும்; உளம்போந்து அளித்த உன்னத கருத்துரைக்கு எங்களின் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

      Delete
  13. மகிழ்ச்சிகரமான செய்தி !

    இந்த பதிவை சகோ. நீடூர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தனது வலைதளத்தில் எடுத்து மீள்பதிவு செய்துள்ளார்கள்.

    http://nidurseasons.blogspot.in/2013/11/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. ஆம். அண்ணன் அலிஜின்னா அவர்கள் என்னிடம் மின்மடலில் வேண்டிக் கொண்டார்கள்; இந்தக் கூட்டணிக்கு அவர்கள் பெரும் ஆதரவு தருவதால், இந்தக் கூட்டணியின் அனைத்துப் பதிவுகளும் அவர்கட்கு அனுப்பி வைக்க வேண்டினார்கள்.அவர்களின் அவாவினை நிறைவு செய்யும் வண்னம், யான் இரண்டு பதிவுகளை அனுப்பி விட்டேன்; மூன்றாம் பதிவு இலண்டன் வானொலியின் தரவிறக்கம் ஆனதன் பின்னரே வெளியிட உள்ளோம். அல்லது அடுத்த சனிக்கிழமை இத்தளத்தில் பதிவானதும் எல்லாத்தளங்களுக்கும், குறிப்பாக நிடூர்சன்ஸ் அண்ணன் அலிஜின்னா அவர்கட்கும் போய்ச் சேரும்.

      மேலும், என் தொடர்பில் இருப்போரில், தமியேனை துபாய்த் தமிழர் சங்கமம் நிறுவனர் அவர்கள் துபாய்த் தமிழர் சங்கமத்தின் கலை இலக்கியச் செயலாளராக நியமித்து, இப்பாடலை இசைவடிவில் சேர்த்து குறுந்தகட்டில் வெளியிடலாம் என்றார்கள். (அவர்களின் பின்னூட்டம் இந்த இணைப்பின் பின்னூட்டத்தில் உள்ளது) இஸ்லாத்தில் இசையைப் பற்றியக் கண்ணோட்டம் பற்றி கூறி அதற்கு மறுப்புக் கொடுத்து விட்டேன். ஆயினும், என்றன் வண்ண்ப்பாடல்களின் அமைப்பு பாடலாசிரியரின் பாடலுக்கும், பாடகரின் வாசிப்புக்கும் இணைந்து விட்ட ஓர் அரிய அமைப்பு என்பதால் என்னை பாடலாசிரியாரகவே பரிணமிக்க வேண்டும் என்கின்றார்கள். ஆயினும், இந்த மரபின் ஆசான்கள் கற்றுக் கொடுத்த மரபின் யாப்பிலக்கணத்தின் ஒரு பகுதியாம் “வண்ணப்பாடல்” அமைப்பு இருப்பதால் இந்த அளவுக்கு ஈர்ப்புடையது என்றால், அதுவே பாடலாசிரியரின் அரிச்சுவடி பாடமாக, சரணம், பல்லவி என்ற அமைப்புக்குள் பாட்டுக் கட்டும் வித்தைகள் அதன் வித்துவான்களிடம் இன்ஷா அல்லாஹ் அமர்ந்துக் கற்பேன்; அதன்பின்னர் தான் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஒரு பாடலாசிரியர் என்றதொரு பரிணாம வளர்ச்சியை எட்டுவேன், ஆமீன்

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers