.

Pages

Monday, November 25, 2013

நபிதாஸின் அம்மா !

உன்னையே உருக்கி அம்மா
.....உலகிலே விட்டாய் எம்மை
தன்னிலே வரைந்த என்னை
.....தரணியில் தந்தாய்த் தன்னாய்.
சின்னதா ! செய்தேன் தப்பு
.....சிறிதென நடித்தாய்த் தப்ப
என்னையே கண்டாய்க் கனவு
.....என்றுமே நான்உன் நினைவு.

வனப்புகள் செய்தே நாளும்
.....வசதிகள் தந்தாள் கேளும்
சினத்தினால் உண்ணாக் கோபம்
.....சிணுங்கிதான் நிற்பாள் பாவம்.
மனதினில் பரிவைக் கோர்பாள்
.....மதியுடன் பசியைத் தீர்பாள்  
தனக்கென வாழாத் தானம்
.....தந்ததில் வாழ்தேன் நானும்.

பிறப்புகள் எதுவும் உண்டா
.....பிறவியில் காண்ப துண்டா
பிறந்ததும் எனக்குத் தானோ !
.....பிறவியோ உனக்கு வீனோ ?
துறவறம் கொள்வார் பின்னால்
.....துறவியாய் வாழ்வாள் என்னால்
திறம்பட எதுவும் தந்தும்
.....தீர்த்திட முடியாப் பந்தம்.

என்முகம் சோகம் ஏற்காய்
.....இன்னலை அழித்தே தீர்பாய்
உன்முகம் என்னைத் தேடும்
.....உறங்கிட தாலாட்(டு) பாடும்.
அன்னையின் பாதம் நிற்கும்
.....அதன்கீழே மகனின் சொர்க்கம்
சொன்னவர் உலகின் கோமான்
.....சொல்வழி நடந்தால் சீமான்

கண்டதும் அதிகம் என்னை
.....கனவிலும் இழந்தாய் உன்னை
மண்ணிலே எதுவும் இல்லை
.....மனதிலும் நானே தொல்லை
ஆண்டவன் படைப்பில் காண்போம்
.....அதினிலே பொறுமை என்போம்
அண்ணலார் சொன்னார் நன்றே
..... அன்னையும் சிறப்பு என்றே !

நபிதாஸ்

36 comments:

 1. அன்னையின் பெருமை அருமை !

  தொடர வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. வலைதள அறிஞர்கள் மத்தியில் என் எண்ணங்களை பதிய காரணமான தங்களுக்குத்தான் வாழ்த்துக்கள்.
   உங்கள் பணி சிறக்க அகம் கனிந்து வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு ! வழர்க மன நிறைவுகளுடன்.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. அருமையான வரிகள் அனைத்தும்

  //அன்னையின் பாதம் நிற்கும்
  .....அதன்கீழே மகனின் சொர்க்கம்
  சொன்னவர் உலகின் கோமான்
  .....சொல்வழி நடந்தால் சீமான்//

  என்னைக் கவர்ந்த வரிகள்..

  உ(அ)ம்மா மீது கூடுதல் பாசம் உள்ள அனைவருக்கும் வரிகளின் வலி புரியும்..

  கவிஞர் அனுமதித்தால் இக்கவியும்..விரைவில் என் குரலில் பாடலாக வெளிவரும்..

  ReplyDelete
  Replies
  1. \\மனதினில் பரிவைக் கோர்பாள்//
   மனத்தினில் பரிவைக் கோப்பாள்

   \\வீனோ \\ வீணோ

   யான் இயற்றிய “பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு” என்னும் பாடலை எம் பாடகர் ஜஃபருல்லாஹ் பாடிய அதே மெட்டில் இப்பாடலையும் பாட முடியும்; என் கவிதையிலும், ஞான குரு நபிதாஸ் அவர்களின் கவிதையிலும் உள்ள வாய்பாட்டின் அமைப்பு (விளம், மா, தேமா) என்பதால் அந்தப் பாடலை வெகு இலகுவாகவும் உருக்கமாகவும் பாடிய நம் பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்கள் அதே வாய்பாட்டில் உள்ள இப்பாடலையும் அதை விட உருக்கமாகவே பாடுவார்கள் (அம்மாவைப் பற்றியது என்பதால் அகத்தில் தானாகவே ஓர் உருக்கம் பற்றிக் கொள்ளும் அல்லவா?) ஆம், இப்பாடலை எழுதி எனக்கு அனுப்பியிருந்த வேளையில், எனக்கும் கண்ணீரை வரவழைத்த வரிகள் இப்பாடலில் பல உள.

   அருமை; இனிமை; மரபின் வழி நின்று எம் பயிற்சிகளை விடாமுயற்சியால் வென்ற இப்பாடலாசிரியர் அவர்களுக்கு என் உளம்நிறைவான வாழ்த்துகள்; இப்பாடலைத் தான் பாட வேண்டும் அவாவுடன் வினவிய எம் பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்கட்கும் வாழ்த்துகள்.

   Delete
  2. // கவிஞர் அனுமதித்தால் இக்கவியும்..விரைவில் என் குரலில் பாடலாக வெளிவரும்..//

   அன்பின் நண்பர் ஜாஃபர்,
   நிச்சயம் கவிஞர் அனுமதிப்பார். கவிக்குறள் அவர்களின் ஆலோசனையோடு இவற்றை காணொளியாக்குங்கள். நல்ல வரவேற்பை பெறும்.

   Delete
  3. என்றைக்கும் என் ஆதரவும் ஆசிகளும் எம் பாடகர் அவர்கட்கும் எம் ஞான குரு அவர்கட்கும் என் உளம்நிறைவாகவே வழங்குகிறேன். இப்பாடலை முன்பு வெளியிட்ட எங்களின் இரண்டாம் வெளியீட்டில் உள்ள அதே இலக்கண வாய்பாட்டின் அமைப்பில் உள்ளதால் பாடகரால் மிகவும் இலகுவாகவும் இன்னும் உருக்கமாகவும் பாடுவார்; இதுபோல் அவரின் நாவசைக்கு ஏற்றச் சீர், அசைகளையே இட்டு மரபில் வடிக்கும் வண்ணம் ஞான குருவும், அடியேனும் தொடரவோம். முடிவில் இன்ஷா அல்லாஹ் குறுந்தட்டில் வெளியிடுவோம்; அதன் பொறுப்பை யான் ஏற்றுள்ளேன். அப்படி இன்ஷா அல்லாஹ் வெளிவரும் குறுந்தட்டை வெளியிடும் நாளில் இங்கு அமீரகத்தில் இருக்கும் நம் கவிவேந்தர் சபீர், மற்றும் அதிரை மெய்சா இருவரையும் கவுரவிப்பேன் அவ்விழாவில் எனப்து என் உறுதியான அவாவும்; துஆவும். இருவரும் என் அவாவினை ஏற்பார்கள் எனப்தும் திண்ணம் மிகுந்த என் எண்ணம் ஆகும்.

   Delete
  4. தங்களது தேன் குரலில் இனிமை பெற
   பலர் மனதில் இளமையாக என்றும் நிற்க
   நானும் அகம் நிறைந்து விரும்புகிறேன்.
   தங்களது விருப்பமே என் விருப்பம்.

   நன்றி, தேன் குரல் பாடகரே !

   Delete
 4. எளிதில் பற்றிக் கொள்ளும் கற்பூரத்தின் தன்மையுடைய இவர்களின் ஆர்வமும், இலக்கணம் மற்றும் ஞானம் (இரு பாடங்களும் கடினம் அல்லது கைப்பு என்று கருதாமல்)ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடும் உடையவராகவும் இருப்பதால் தான் இவ்வளவு எளிதில் அறுசீர் விருத்தத்தில் பாடலும் எழுத இவர்களால் முடிந்தது; இனி இவர்கட்கு ஆரம்பப்பாடம் என்பது அவசியமற்றதாகும்; எனவே, இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து மரபைப் பற்றிப் பாக்கள் வனைக; இலக்கணத்தின் இன்பத்தில் நனைக.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் கவிதை எழுத ஆசை. ஆனால் போதுமான நேரம் அமையவில்லை. கவிக்குறளை போல் நல்ல ஆசான் அமைந்தால் நிச்சயம் கற்றுக்கொள்ளலாம்.

   அன்பின் கவிக்குறள் அவர்களே !
   கவிதை எழுதுவது எப்படி ? என்பது குறித்து ஒரு தொடர் எழுத முயற்சிக்கலாமே.

   வாசகர்களின் நல்ல வரவேற்பை பெறுவதோடு இறுதியில் இவற்றை தொகுத்து புத்தகமாகவும் வெளியிடலாம்.

   Delete
  2. இன்ஷா அல்லாஹ் அவசியம் செய்கின்றேன். இந்த ஏற்பாட்டை எங்களின் அமீரக இலக்கிய அமைப்பான “வானலை வளர்தமிழ்த் தேர்” என்னும் அமைப்பின் தலைவர் அவர்கள் என்னிடம் வேண்டிக் கொண்டார்கள்; அவ்வமைப்பின் மூலம் மாதத்தின் முதல் வாரம் கவிதைச் சிற்றிதழ்கள் வெளியிடுவர்; அதில் எங்கள் கவிதைகள் இடம்பெறும்; அப்பொழுது 2012 மே மாதம் 11ந் திகதி அனறு அடியேனின் தலைமையில் “ப்யணங்கள்” என்னும் தலைப்பில் 33 கவிஞர்களை மரபுப்பாவில் அழைத்துக் கவிதை பாடும் நிகழ்வாக அமைத்தேன். அதனைக் கண்டும் கேட்டும் இரசித்த அவர்கள் வேண்டியதும் இவ்வாறு” நீங்கள் இந்த மாதாந்திர வெளியீட்டில் யாப்பிலக்கணம் தொடர் கட்டுரை எழுதுக” என்றார்கள். இடையில், அமீரகத்தில் ஏற்பட்டச் சிலக் கட்டுப்பாடுகள் காரணீயமாக நிகழ்வுகள் நிறுத்தப்பட்டு விட்டன. இப்பொழுது அந்த தாகம் இன்ஷா அல்லாஹ் உங்களின் ஆவலில் நிறைவேறும். யான் அந்த அமைப்பில் கல்ந்து கொண்டு எழுதிய கவிதைகள் அடங்கிய சிற்றிதழ்களை உஙக்ட்க்காகப் பத்திரப்படுத்தி வருகிறேன். இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் (2014) தாய்கம் வரும் வேளையில் உங்களிடம் அனைத்தையும் தருவேன்; அத்னை விரும்பினால் நீங்கள் பகிரலாம்; குறிப்பாக, எனக்கு 1974ல் யாப்பிலக்கணம் நடத்தி முதலில் ஒரு வெண்பாவுக்கு ஈற்றடிக் கொடுத்து அதனைச் செவ்வனே முடித்துக் கொடுத்ததால் என்னை ஊக்கப்படுத்திய என் தமிழாசான் புலவர் சண்முகனார் அவர்களிடம் ஒப்படைக்க எனக்கு உதவ வேண்டும்.

   நிற்க. இன்ஷா அல்லாஹ் ஏப்ரல்- மே மாதம் கண்புரை அறுவை சிகிச்சைக்காக தாய்கம வரும் விடுப்பில் என்னால் கவிதைகள் எழுத இயலாமற் போய்விடுமே எனற பெருங்கவலை இப்பொழுதே தொற்றி விட்டது என் மனத்தினில் ஆழமாக; உங்கள் அனைவரின் பிரர்ர்த்தனைகளை வேண்டி நிற்கின்றேன் ஆவலாக.

   Delete
  3. கவிஞர் கவிதீபம் அவர்களே !
   தங்களது வாழ்த்துக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி !

   கண்புரை அறுவை சிகிச்சை தங்களது எழுதும் பணிக்கு இடையுறாக இருக்காது. ஒரு மூன்று நாள் மட்டும் தடங்களைத்தரும்.
   தாங்கள் நலமுடன் கண்புரை அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள எல்லாம் வல்லவனிடம் எல்லோருடன் நாங்களும் துவாசெய்கிறோம்.

   தங்களது வர இருக்கும் யாப்பிலக்கண தொடருக்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள்.

   Delete
  4. பாவலராய்ப் பரிணமித்துள்ள ஞானகுருவே, அஸ்ஸலாமு அலைக்கும், ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா. இன்ஷா அல்லாஹ் விடுப்பில் வந்ததும் சிகிச்சையைத் துவங்கி விட்டால் எனக்கும் கண்ணுக்கும் துன்பம் இருக்காது; தங்கள்கள் எல்லார்ரின் துஆவும் பிரார்த்தனையும் என்னுடன் இருப்பதால், இன்ஷா அல்லாஹ்.

   யாப்பிலக்க்கணப் பாடம் எப்பொழுதுத் தொடங்கலாம் என்பது பற்றிய தங்களின் கருத்தையும் ஆலோசனையும் வரவேற்கின்றேன். ஆர்வத்தில் வந்து விட்டு இடையில் ”இலக்கணம் எல்லாம் எமக்குக் கைப்பு ; கட்டுப்பாடுகள் உடையது அல்ல கவிதை என்பது; அஃதொரு காட்டாற்று வெள்ளம்” என்றெல்லாம் சொல்லி விட்டு ஓடி விடலாம் சிலர் என்பதும் என் அனுபவம் என்பதால் சற்றுத் தயங்கினாலும், இறுதி வரை தாங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்குத் தெம்பைத் தருகின்றது.

   Delete
  5. தொடங்குங்கள் தொடர்வார் பலர்.
   பரந்த உலகில் பலர் இல்லாமல் போகா.
   மரபும் தழைக்க தாங்கள் உழைக்க
   இயற்றமிழும் என்றும் இலங்கும்.
   பொறுப்புடன் இருப்பேன் அங்கமாய்.
   புகழுடன் இருப்பீர் பொருத்தாமாய்.

   Delete
  6. இன்ஷா அல்லாஹ். எனக்கு இப்பொழுது கவிதைப் பணிகளில் ஒவ்வொரு வியாழன் இலணடனுக்கும், அதன் வரிகள் பாடகரின் குரலுக்கும் அதன் மறுபதிவு இத்தளத்திற்கும் ஏற்பாடு செய்வதுடன், குறிப்பாக,அதிரை நிருபர் தளத்தில் “ஔரங்கசீப் நான்மணி மாலை” த் தொடராக வாரந்தோறும் எழுதிக் கொண்டிருக்கின்றேன். நான்மணி மாலை என்பது மொத்தம் 40 பாக்கள் (வாரம் 4 பாக்கள் வீதம் 10 வாரங்களில்) இன்ஷா அல்லாஹ் எழுத வேண்டும். இதுவரை 16 பாக்கள் எழுதி விட்டேன் ( 4 வாரப் பகுதிகளில்) இன்ஷா அல்லாஹ் இன்னும் 24 பாக்கள்( 6 வாரப் பகுதிகளில்) எழுதி முடிக்க வேண்டும்; அப்படி அத்தொடர் முடிந்தால் தான் அது நான்மணி மாலையாகும். முன்னர் யான் எண்ணியது நான்கு கலீஃபாக்களின் வரலாற்றை நான்மணி மாலையாக்க வேண்டும் என்பதே. எம் மூத்த சகோதரர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கள் எழுதிய ஔரங்கசீப் பற்றிய ஆய்வைக் கவிதையாக்க என்னையும், கவிவேந்தர் சபீர் மற்றும் மகுடக் கவிஞர் தஸ்தகீர் அவர்களையும் வேண்டினார்கள். கவிவேந்தர் சபீர் அவர்கள் என்னை மரியாதைக் கொடுத்து மூத்தவர் என்ற மதிப்புக்கு என்னை முதன்முதலாகத் தொடங்கச் சொல்லி விட்டதால், யான் இந்த நான்மணி மாலையைத் தொடங்கி இதுவரை 3 வாரங்கள் பதிவுக்குள் வந்து விட்டன. எனவே, தற்பொழுது எனக்குரிய கால அவகாசம் இன்ஷா அல்லாஹ் அந்தத் தொடர் முடிவுற்றதும் தொடரலாம்.

   நிற்க். நான்மணி மாலைக்குக் கருவும் கிடைத்து அந்தத் தொடர்மாலையும் பதிவுக்குள் வலம் வந்து விட்டதால், இன்ஷா அல்லாஹ் அடுத்து நான்கு கலீஃபாக்களைக் கருவாக் வைத்து நான்மணிக் கோவை யாத்திட விழைகின்றேன்; தாங்கள் அந்த நான்கு கலீஃபாக்களின் வரலாற்றுப் பதிவுகளை என் மின்மடலுக்குத் தனியாகத் தலைப்பிட்டு அனுப்பித் தருக.

   இன்ஷா அல்லாஹ், நான்மணிமாலை (அதிரை நிருபரில்) முடிந்ததும், இத்தளத்தில் :யாப்பு வ்குப்பு” என்ற தலைப்பில் பாடங்கள் தொடரும்., தங்களின் ஒத்துழைப்போடு.(ஆனால், யாராவது இங்குப் புளிமாஙகாய், தேமாங்காய் எல்லாம் விற்கப்படுகின்றன என்று கேலி செய்தால் யான் பாடத்தை நிறுத்தி விடுவேன்) நான் தமிழ் இல்க்கணம், ஆங்கில இலக்கணம் இவற்றை எல்லாம் உயிரைப்போலும் குழ்ந்தையைப் போலும் நேசிப்பவன்; அதனால், இலக்கணத்தைக் கேலி செய்தால் எனக்குப் பிடிக்காது.

   Delete
 5. நபிதாஸ் அவர்களின் ஞானத்தில் உருவான ஈண்டுலகம் காணித்து ஈடில்லா அம்மாவைப்பற்றிய ஆழமான கருத்துடைய அழகிய கவிதை. அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் நன்றி யாருக்கென்றால் கவிஞர் கவிதீபம் அவர்களுக்குத்தான்.

   அவர்கள் எந்த இலக்கண வடிவில் எழுதுகிறாரோ அதே போன்று அன்றே எழுதவேண்டும் என்ற ஆசையில் தான் இக்கவிதை எழுதப்பட்ப்பட்டது.

   அம்மாவைப்பற்றி எழுதினால் யார் மனம்தான் உருகாது !

   கருத்துக்களை ஆழமாக இரசித்த அதிரை.மெய்சா தங்களுக்கு நன்றி !

   Delete
  2. அன்பின் ஞான குரு அவர்கள் மிகவும் பக்குவமாய்ப் புடம்போடப்பட்டத் தங்கம்; அவர்களிடம் இல்லைச் செருக்கென்ற பங்கம்; அவர்களின் இந்த “ந்ன்றியுணர்வை”ப்படித்ததும் என் கண்கள் ஆறாய்ப் பெருக்கெடுத்தன; உணர்ச்சியுடன் மீண்டும் நன்றி கூறுகிற்ன் அவர்கட்கு. முதலில் அவர்களின் ஆர்வம், பின்னர் என்னிடம் பயில வேண்டும் என்று தனிம்டலில் பயிற்சி, இன்று இத்தனைக் கருத்துக்களிலும் கருவாக என்னை நன்றி மறவாமல் வெளிப்படுத்திய பெருந்தன்மையும் குருவை மதிக்கும் பேருள்ளமும் அவர்கட்குக் கிடைத்த ஞான வழிகாட்ட்டுதலின் வெளிப்பாடே என்றும் யாம் அறிவோம். இற்றைப் பொழுதினில் எம் குமுகாயச் சிறார்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் மூத்தவர்கட்கும், ஆசான்கட்கும், பெற்றோர்க்கும் மதிப்பும் பணிவும் காட்டாமை தான் குமுகாயச் சீரழிவுகட்குக் காரணியங்களாகும். நமக்கெல்லாம் ஞானம் வழங்கும் குருவாக இருந்து கொண்டே, சில நாடக்ளில் தனிமட்ல வழியாகவும் பின்னூட்டக் கவிதைகள் வழியாகவும் தமியேனிடம் மரபைக் கற்றுக் கொண்டதற்காக (முதலில் அவர்கட்கு அடிப்படை மரபிலக்கணமும் தெரியும் என்பதும் என் கணிப்பு) என்பால் வைத்திருக்கும் அன்பால் இப்பொது தளத்தில் இப்படி நன்றியைப் பகிரங்கப்படுத்தி வெளியிட்ட அந்த நல்லுள்ளம் பார்த்து, என்றும் நன்றிமலர்களைத் தூவும் என் வாழ்த்து!

   Delete
 6. \\ஈண்டுலகம் காணித்து ஈடில்லா அம்மா//

  இந்த நான்கு சீர்களை அரையடியாகக் கொண்டு இன்னும் நீட்டிக் கொண்டே சென்றால் உங்களால் வஞ்சி விருத்தம் எழுத முடியும் என்பது என் கணிப்பு.

  ஏற்கனவே யானும், நபிதாஸ் அவர்களும் ஞானம் பற்றி எழுதிய ஒரு வண்ணப்பாடலுக்கு நீங்கள் பின்னூட்டமிட்டக் கவிதையை யான் அவதானித்த போதில் அடியேனுக்கு உங்களின் மீது ஓர் அரிய கணிப்பு உண்டானது மேற்கூறிய வண்ணமே. ஆம் அந்தப் பின்னூட்டப்ப்பாடலிலும் அப்படியே அழகாக மரபைத் தொட்டிருகின்றீர்கள்; அதனை இன்னும் இரு அரையடிகள் நீட்டியிருந்தால் அதுவே முழுமையான ஒரு பாடலாகியிருக்கும் என்று அன்று கணித்தேன்; இன்று இந்த நான்கு சீர்களின் அருமையாக ஒன்றாம் சீருக்கும், மூன்றாம் சீருக்கும் மோனைகள் வந்துத் தானாகவே உட்கார்ந்து கோலோச்சும் அழகில் மயங்கினேன், அன்பின் அதிரை மெய்சா!

  ReplyDelete
  Replies
  1. ஈண்டுலகம் காணித்த
   ஈடில்லா அம்மாவை
   ஏண்டு மனம் சோபித்து
   எந்நாளும் போற்றிவந்தால்
   மாண்டுறங்கும் கல்லறையும்
   மடியாகும் அம்மாவாய்

   Delete
  2. அடியெடுத்து விட்டீர்கள் மரபு நடை பயில்வதற்கு, இன்ஷா அல்லாஹ் எம் வழிகாட்டல் உங்கட்குப் பயனளிக்குமாக.

   Delete
 7. அம்மாவுக்கு அழகிய வரிகளில் அருமையாய் பதித்த பதிவு அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அறிஞர் ஹபீப் அவர்களே !

   Delete
 8. செந்தமிழே சீர்த்தியுடன் சிலிர்த்ததுவோ தேறல்
  நந்தமிழால் நாமணக்க நவின்றதுவோ தூறல்
  சந்தமதால் அன்னையவள் சரித்திரங்கள் பாடி
  கந்தகப்பா காட்டுகவே கவியொளியாய்த் தேடி!

  ReplyDelete
  Replies
  1. நற்றமிழே நளினமுடன் நாற்புறமும் நேசம்
   கற்பதனால் களிப்புடனே கருத்துக்கள் வீசும்
   சொற்பதங்கள் நும்வழியில் சொடுக்குகிறேன் மோகம்
   பற்பலபா வழிகளிலும் பயின்றிடவே தாகம் !

   Delete
  2. கற்றவுடன் பற்றுகின்ற கற்பூரம் நீயே
   பற்றுடனே குற்றமிலாப் பாவும்தந் தாயே
   மற்றவரும் நும்வழியில் மாற்றம்நீ செய்தாய்
   நற்றவமோ இம்மரபும் நாம்பேண வைத்தாய்

   Delete
  3. கற்பூரம் நிலைதனிலே காட்டுகின்றாய் நியே
   பற்றுகிறேன் பாவினத்தின் பாதையுமே நீரே
   சொற்பதமில் நடனமாடும் பாவையுமே தாமே
   கற்பதனில் கைப்பாகாக் கலைநின்னில் தானே !

   Delete
 9. // எனக்கும் கண்ணீரை வரவழைத்த வரிகள் இப்பாடலில் பல உள.//

  இது கவிஞர் கவிதீபத்தின் மனதில் மலர்ந்த சொற்கனிகள்
  கவிக் கருத்துக்கும் கவி நடைக்கும் கிடைத்த அங்கீகாரங்களோ...

  ReplyDelete
  Replies
  1. \\அங்கீகாரங்களோ\\

   அகங்காரங்கள் இல்லாப் புலவரின் பாடலுக்கு என்றன் அங்கீகாரம் தான் என்பதை அறுதியிட்டு உறுதி பகர்கின்றேன், பாவலரே!

   Delete
 10. அம்மாவின் அருமை அழகாய் கவியால் சொன்னீர்கள்
  அம்மாவின் கவி பார்த்து கண்ணீர் வடித்தேன் ஏன் அன்னை
  எம்மை விட்டு பிரிந்த சோகத்தால் ..
  அன்னையின் சிறப்பை கவியாய் வடித்த நபி தாஸ்
  நல் மகவே...!

  ReplyDelete
  Replies
  1. அன்னையின் பாசத்திற்கும் தியாகத்திற்கும் கைமாறுதான் என்ன ?நினைவுகூறும் போதெல்லாம் நல் மகனுக்கு அழுகைதான் வரும். அதைத்தான் உங்கள் கண்ணீர் எழுத்தாகி நிற்கின்றது.

   Delete
 11. பதிவுக்கு நன்றி.

  சகோ நபிதாஸின் இந்தக்க கவிதை மிகவும் அருமை, அம்மாவைப்பற்றி எவ்வளவு எழுதினாலும் அம்மாவின் மனம் சந்தோசம் அடையுமா?

  சந்தோசம் அடையும் வரை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
  Replies
  1. மகனின் கைமாறு என்றுதான் அன்னை எதிர்பார்த்தது !
   இவன் தராவிட்டாலும் அன்னை தந்து கொண்டே இருப்பாள்.

   அன்னை தன் சந்தோஷத்தைவிட மகனின் சந்தோசம் தான் தன் சந்தோசம் என்றே இருப்பவள்தானே அன்னை.

   மகன் எதைத் தந்தாலும் அன்னை சந்தோஷப்படுவாள்.
   இருந்தாலும் மகன் தன் நிலையில் தந்துகொண்டே இருக்கவேண்டும் என்றுதான் நன் மகன் நினைப்பான்.

   அதுவே தங்களின் எழுத்து நடையில் எழில் கூடி நிற்கின்றது.

   Delete
  2. மிகவும் சரியாக சொன்னீர்கள், நீங்கள் இப்படி பதில் தருவீர்கள் என்று நம்பி இருந்தேன், ஏன் தெரியுமா? உங்கள் ஒவ்வொரு நடையும் அப்படி நம்பும்படி இருக்கின்றது.

   Delete
 12. விதை தந்தை என்றால்
  நிலம் தாயல்லவோ
  விதை உருமாறி
  செடியாய்,மாரமாய்
  மாறிடலாம்
  நிலமோ மாறாத
  ஒன்றாகிறது
  ஆதலால்
  தாய்நாடு,ஆகிறது மானுடர்க்கு

  ReplyDelete
  Replies
  1. நல் செடியாய்
   நல் மரமாய்
   இவன் விதையை
   அவள் மாற்றுகிறாள்
   அன்னை வடிவில்
   பொறுமை உருவாய்
   அருமை காட்டுகிறாள்
   அதனை அங்கீகரித்தே
   நம் நாட்டை
   எம் தாய் நாடேன்றோமோ !

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers