.

Pages

Friday, November 29, 2013

எதிர் நீச்சல்


அதிரை ஜாஃபரின் இனிய குரலில் கவியன்பன் கலாம் அவர்களின் அழகிய வரிகள்...
கோடிக் கணக்கில் அணுக்களையும்
........கோத்துப் போட்டி வளர்த்ததனால்
ஓடி நீச்சல் அடித்ததனால்
.....ஊறும் கருவாய் உதித்ததுவே!

பாரை நோக்கி வந்ததுமே
...பாலைக் குடிக்கச் சத்தமுடன்
ஊரைக் கூட்டி மகிழ்வதெலாம்
....ஊறும் போட்டி மனத்தினாலே!

நாளும் பொழுதும் வளர்வதற்கு
.....நாடும் துணிவால் புரள்வதற்கு
நீளும் கைகள் பிடிப்பதற்கு
....நீச்சல் துவங்கும் துடிப்புடனே!

ஊன்றி எழுந்து நடந்திடவே
...ஓடித் தவழ்ந்துக் கடந்திடவே
தோன்றும் உணர்வால் முயன்றிடவே
....தோல்வி அறியா எழுச்சியாமே!

பாடம் படிக்கும் போதினிலும்
....பாரில் வெல்லும் போட்டிகளும்
ஓடம் போல தேடுதலும்
....ஓயா உழைப்பின் நீச்சலாமே!

ஏணிப் படியாய் முயற்சிகளும்
...ஏற்கும் மனத்தின் பயிற்சிகளும்
நாணிக் குறுகாத் துணிவுகளும்
...நாடும் வெற்றிக் களிப்புகளாய்!

நீயும் காணும் சுவனங்கள்
...நீயே கொண்ட கவனங்கள்
வாயில் தட்டும் தருணங்கள்
...வாய்ப்பே ஆகும் அறியுங்கள்!

ஆடை, உணவு தேடித்தான்
....ஆளாய்ப் பறப்போம் ஓடித்தான்
கோடை, குளிரும் பாராமல்
....கொள்வோம் எதிராய் நீந்தித்தான்!

சூழும் பகைகள் எதிர்த்தவரை
...சோகம் எல்லாம் மிதித்தவரை
வாழும் வாழ்க்கை துணிந்தவரை
.....வாழ்த்தும் நீச்சல் அறிந்தவரை!

ஆர்த்துக் கரையைத் தொடத்தொடத்தான்
........ஆழி அலைகள் தவழ்ந்திடுதே
சேர்க்கும் உடலின் குருதியெலாம்
...சேர்ந்த ஓட்டம் உயிரதுவாம்!

ஓங்கி அடிக்கும் உளியாலே
...ஓடிப் போகும் மலைதானே
வீங்கி வளரும் செடியாலே
....வீழ்ந்து போகும் தடிபாறை!

எட்டா திருக்கும் இமயமும்தான்
.....ஏறிப் பழக இறங்கிவிடும்
கிட்டா திருக்கும் உயர்வுகளும்
...கீழே பணியும் முயற்சியினால்!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 28-11-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

13 comments:

 1. தன்னம்பிக்கை தரும் சிறந்த வரிகள்....

  வழக்கம் போல் சிறந்த குரல்வளம்

  கூட்டணி தொடர வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. பதிவுக்குள் கொண்டு வந்து எங்கள் கூட்டணிக்கு அமோக ஆதர்வை வழங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் இதயம்ப்டர்ந்த இனிய நன்றியை உரித்தாக்கிக் கொள்கின்றோம். மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

   Delete
 2. உறங்கிக்கிடந்த கவித்தீபத்தின் உயரிய வரிகளுக்கு சகோ.ஜாஃபரின் குரல் உயிரோட்டமாய் அமைந்துள்ளது. உங்களது கூட்டணி உலகளவில் சிறப்புற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையிலும் உண்மைதான் அதிரை மெய்சா அவர்களே! உங்களின் உளம்போந்து வழங்கிய வாழ்த்துரைக்கு எங்களின் உளங்கள் நிறைவான நன்றிகள். இப்பாடலை இலண்டன் ஒலிபரப்பின் பதிவில் இன்னும் யான் காண இயல்வில்லை; உங்கட்குக் கிட்டினால் என் மின்மடலுக்கு அவ்விணைப்பை அனுப்பித் தர வேண்டுமாய் மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றேன்., அன்பரே!

   Delete
 3. தன்னம்பிக்கை வரிகள்...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் ஏற்படுத்தும் கவிதைகளையே இத்தளத்தின் நிர்வாகி நிஜாம் அவர்கள் நித்தமும் விரும்புவார்கள் என்பதாற்றான், இத்தளத்தில் பதிய் வைத்தோம். மிக்க நன்றி ஐயா. இந்த வெளியீட்டுடன் எஙகள் கூட்டணியின் பாடல் வெளியீடு 4வது ஆகும். இறைய்ருளால் இன்றும் நாளையும் இரு வெளியீடுகள் ஆயத்தமாகிவிடும். அதில் 5-ஆம் வெளியீடும் முழுவதும் தன்னம்பிக்கை, முயற்சி, வெற்றி பற்றிய வரிகளையே கருவாக உள்ள்டக்கி உருவாக்கியிருக்கின்றேன்.

   Delete
 4. எட்டா திருக்கும் இமயமும்தான்
  .....ஏறிப் பழக இறங்கிவிடும்
  கிட்டா திருக்கும் உயர்வுகளும்
  ...கீழே பணியும் முயற்சியினா////////

  என்ன ஒரு அருமையான வரிகள் முயற்ச்சி உடையோர்க்கு எல்லாம் கிட்டும் என்பதுபோல் அருமை அருமை

  ReplyDelete
  Replies
  1. இன்ஷா அல்லாஹ். ஜஸாக்கல்லாஹ் கைரன்.

   தன்னம்பிக்கை+இறைநம்பிக்கை= வெற்றி


   அன்பின் தொழிலதிபர் அவர்கள் முன்பு எம் பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்கட்கு வழங்கிய அரிய ஆலோசனையால் முன்னேற்றம் காணலாம்

   1) இப்பாடலில் ஒலியமைப்பு ஓங்கி ஒலித்தது
   2) நீங்கள் விரும்பிய வண்ணம் இப்பாடலும் (தமியேன் யாப்பிலக்கண வாய்பாட்டின் அமைப்பில் அமைத்திருப்பதால்) இசைமுரசு இ.எம்; ஹனீஃபா அவர்கட்கு மரபுப்பாக்களாய் எழுதிய இறையருட்கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கஃபூர் அவர்களின் ஒரு பாடலைப் போன்ற இராகம்\ மெட்டு இப்பாடலில் உள்ளது. அஃது என்ன கூறுங்கள் பார்ககலாம். உங்களின் ஆய்வை எதிர்பார்க்கின்றேன்.

   உண்மையில் யான் எழுதியதும் அவர்கள் எழுதியதும் மர்பின் ஒத்த அளவுடைய சீர்களைக் கொண்ட அறுசீர்க் கண்ணியமைப்புதான். ஆயினும், இயல்பாகவே இப்பாடலும் அந்தப் பாடலின் மெட்டுக்குப் பொருந்தும்.அப்பாடல் யாது? விடை தருக.

   Delete
  2. A R ரஹ்மான் மெட்டில் வந்த பூங்காற்றிலே உன் சுவாசத்தை என்ற பாடல்போல் சற்று வித்தியாசப்பட்டு உள்ளது

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. மாவும் புளியும் கலந்துநீரும்
  .....மாலைப் பொழுதில் காய்கொண்டு
  கூவும் குயிலின் குரல்கொண்டும்
  .....கூட்டு பலமில் தருகின்றீர்

  காட்டும் துணிவு அபாரமாம்
  .....காலும் துடிக்க செய்கின்றாய்
  மீட்டும் உனது துடிப்புகளும்
  .....மீண்டும் படிக்க தூண்டிடுதே..

  ReplyDelete
 7. பாடலை கேட்ட அனைவருக்கும் நன்றி... தொடர்ந்து புதிய ராகங்களிலும் தெளிவான ஒலிப்பதிவிலும் சிறப்பான வரிகளுக்கு என் பாடல் ஒலிக்கும்

  ReplyDelete
 8. பாடம் படிக்கும் போதினிலும்
  ....பாரில் வெல்லும் போட்டிகளும்
  ஓடம் போல தேடுதலும்
  ....ஓயா உழைப்பின் நீச்சலாமே!
  நல்ல பல கவி வரிகளில் இவ்வரிகளும் பிடித்துள்ளது

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers