.

Pages

Friday, June 13, 2014

பாலைவனத்திலிருந்து ஒரு பரிதாபக் குரல் !

திரியாய்த் தானே வாழ்வினில்
 *****தினமும் எரியும் ஆசைகள்
புரியா மடமை இலாமலே
 *******புரிந்தே நாங்கள்  உணர்வதும்
தெரியா தொன்றும் அல்லவே
 ********தெரியும் வெளிச்சம் காணவே
சரியா பிழையா விடைகளை
 *******சரியாய்த் தெரியா வாழ்விதே!

இளமை விதையை விதைப்பதால்
*******இழப்பின் ஈட்டைப் பெற்றிலோம்
வளமை ஒன்றே   பயிரென
*********வானம் பார்க்கும் உழவராம்
குள்மாயக் கண்ணீர் வேரினுள்
*********குடமென ஊற்றி உழைத்திடும்
களமெனக் காணும் பாலையில்
**********காசு வளர்க்கும் மரமிதே

பாலைச் சூடும் உணர்ந்திடா
*******பாழும் மனமும் உன்வசம்
நீலக் கடலைத் தாண்டியே
*******நீயும் இருப்பாய் என்னுயிர்
காலம் பிரித்த காதலைக்
******காதில் சொல்லும் செல்லிடை
கோலம் போடும் வலைதளம்
*********கொடுஞ் சிறையின் மீன்களாய்!

 முகநூல் வாயால் கதைத்திட
********முகமும் காண  விழித்திரை*
சுகமும் ஊடல் பேச்சினில்
*******சுவனம் காண்போம் கணினியில்
அகமும் புறமும் இல்லறம்
********அடையும் இன்பம் இதுவென
பகரும் உலகில் வாழ்வதால்
*******பாழாய்ப் போகும் நாட்களே!

விடுப்பில் கிடைக்கும் விடுதலை
*********விம்மிக் கரையும் நாட்களும்
அடுத்தி ருக்கும் நட்பினால்
**********அகலும் துயர எண்ணமே
படுத்து றங்கும் பாயிலும்
********பசியைப் போக்கும் உணவிலும்
தொடுத்த குறிப்போ வேறிடம்
*********தொடரும் இதயம் இந்தியா!

தினமும் ஈரம் சேர்த்திட
*******திர்ஹம் செலவு செய்திட
மனமும் ஒப்பி வருவதும்
********மாதம் ஒன்று ஆண்டினில்
கனமாய்ப் பாரம் சேர்ந்ததை
******காய்ந்துக் கருகிப் போனதை
வனமாய்ப் போன மனத்தினை
******வடிநீர் ஊற்றிக் காக்கவே!

பெட்டி நிறையப் பெற்றதும்
*******பிரிவுச் சொரிய இழந்ததும்
கட்டிக் கொண்ட கடனுடன்
********கட்டு டல்கள் சிதைந்ததும்
சுட்டும் விழியை விற்றபின்
*******சொக்கும் கனவுச் சித்திரம்
விட்டில் பூச்சி கவர்ச்சியில்
*******விடையை அறியா விசித்திரம்

கரு : கவிமகன் காதர் ( Kaayalpattinam, India )
உரு: கவியன்பன் கலாம் காதர் ( Adirampattinam, India )

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 12-06-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

11 comments:

 1. நீண்ட இடைவேளிக்குபிறகு கவிகுறளின் கவிதையை வாசித்ததில் மகிழ்ச்சி !

  நெகிழ்ச்சியை வரவழைக்கும் ஆக்கம் !

  சொந்தமாக குரல் கொடுத்தது புதிய முயற்சி - தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. உடன் பதிவுக்குள் கொணர்ந்த உங்களின் பேராதரவுக்கு மிக்க நன்றி; ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

  கருவைத் தந்த காயல்பட்டினம் கவிமகன் காதர் அவர்களின் நிழற்படத்தையும் பிரசுரிக்கவும். இன்ஷா அல்லாஹ் அவரையும் உங்களின் இத்தளத்தில் கவிதைகளைப் பதிய அழைக்கின்றேன்.

  சொந்தக் குரலில் பதிந்தே அனுப்ப வேண்டும்; வரி வடிவம் ஏற்கப்பட மாட்டாது என்று இலண்டன் வானொலியாரின் கட்டுப்பாடான நிபந்தனை என்பதாற்றான் இந்த் முயற்சி; இன்ஷா அல்லாஹ் தொடரும்..

  ReplyDelete
 3. மரபுக் கவிதையை புதுக் கவிதையாக உரு மாற்றம் செய்வது
  எளிதான ஒன்று.....உதாரணமாக,கம்ப இராமாயாணத்தை
  கவிஞர் வாலி அவர்கள் "அவதாரப் புருஷன்" என்ற பெயரில்
  புதுக் கவிதை வடிவில் தந்தது.....
  ஆனால்,புதுக் கவிதையை மரபுக் கவிதையாக மாற்றுதற்கு,
  ஆழ்ந்த தமிழ் அறிவும்,ஞானமும் வேண்டும்....அவை
  இரண்டையும் குறைவறப் பெற்றக் காரணத்தால்,அண்ணன்
  கலாம் அவர்களுக்கு இது எளிதில் சாத்தியமாயிற்று.....
  அண்ணன் கலாம் அவர்களின் இந்த முயற்சியால்,முக நூலில்
  கிறுக்கிக் கொண்டிருந்த எனது புதுக் கவிதைகளுக்கு,புதியதோர்
  பரிமானமும்,பொலிவும்,எழிலும் கிடைத்துள்ளதை எண்ணி
  பேரின்பம் கொள்கின்றேன்.....
  பெருந்தன்மையுடன் எனது பெயரையும்,படத்தையும் பதிவு
  செய்ய வேண்டுகோள் விடுத்த கவிஞர் அவர்களுக்கும்,
  அதிரை நியுஸ் வலைதள நிர்வாகிகளுக்கும்,
  நேயர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்....
  எல்லாப் புகழும் இறைவனுக்கே!

  ReplyDelete
  Replies
  1. அன்பின் கவிமகனார் காதர் (காயல்பட்டினம்) அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும், தொடர்ந்து உங்களின் கவிதைகளை இத்தளத்தில் (”சமூக விழிப்புணர்வு பக்கத்தில்” இடம்பெறச் செய்ய விழைகின்றேன்; அன்புடன் அழைக்கின்றேன். இத்தளத்தின் நிர்வாகி ஜனாப் ஷேக்கனா நிஜாம் அவர்களுக்குக் கீழ்க்காணும் மின்மடல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் உடன் பதிவுக்குள் கொண்டு வந்து திக்கெட்டும் உங்களின் புகழ் பரப்பச் செய்வார்கள்.

   shakkananijam@gmail.com

   Delete
 4. கவித்தீபத்தின் கணீர்க் குரலில்
  ஒலித்ததிந்த பாலைவனத்துப் பரிதாபக்குரல்
  கரு கொடுத்தது கவிமகன் காதர் - ஆயினும்
  உரு கொடுத்து உலகறியச் செய்த பெருமை
  உமதன்றோ

  உம் கவிகாண காத்திருந்த எமக்கு
  கறி சோற்றை உண்ணவைத்து
  பரிதாபக்குரலை இனிதாக்கி
  கேட்க வைத்துள்ளீர்கள்.

  அருமை நன்றி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பின் நண்பர் அதிரை மெய்சா என்னும் அற்புதக் கவிஞரின் பாராட்டுக்கு மிக்க நன்றி. இன்ஷா அல்லாஹ் என் மனத்தினில் உண்டாகியிருந்த கவலைகள் தீர்ந்து மனம் ஒன்றி இனி தொடர்ந்து கவிதைகள் வனைவேன்; தங்களின் பாராட்டு மழையில் நனைவேன்!

   Delete
 5. காலம் கனிந்தே கவிவரிகள்
  ......கலாமின் இதயம் பிழிந்தவைகள்
  கோலம் பெற்றப் பாடலாமே
  .....கொடுத்தார் காயல் காதராமே
  சாலச் சிறந்த கருத்துக்கள்
  .....சளைக்கா பலரின் வேதனைகள்
  சீலம் பலதும் மின்னிடவே
  .....சிலதும் கனக்கும் பின்னிடவே.

  ReplyDelete
  Replies
  1. நீயும் வனைவாய்ப் பாடல்களை
   ......நிறைவாய் உண்டு நம்பிக்கை
   தாயின் பாசம் போலத்தான்
   ....தமிழின் மீது கொண்டுள்ளாய்
   நேயம் மிக்கப் பண்புகளாய்
   ....நீயும் வளர்த்தப் பேரறிவால்
   பாயும் கவிதைப் பெருவெள்ளம்
   ....படைத்துத் தருவாய் எஞ்ஞான்றும்!


   Delete
 6. வளமை ஒன்றே பயிரென
  *********வானம் பார்க்கும் உழவராம்
  குள்மாயக் கண்ணீர் வேரினுள்
  *********குடமென ஊற்றி உழைத்திடும்
  உழைப்பின் தாத்பர்யத்தை வெளி கொணரும்
  வரிகள் ...வாழ்த்துக்கள் கவியண்பரே...
  தங்களின் வருகை ..தளத்தை உயிரூட்டி உள்ளதாக
  உணர்கிறேன்

  ReplyDelete
 7. அதிரையின் தமிழூற்றே, அமெரிக்கத் தமிழர!, இந்தக் க்வைமகனார் காயல் காதர் அவர்களின் விதைக்குத் தண்ணீராய், தங்களின்”வளைகுடா வாழ்வு” என்னும் கட்டுரைத் தண்ணீர் பாய்ச்சினேன்; நான் ஒரு கவிதை விவசாயி; காயலாரின் கவிக்கருவுக்கு, அதிரையாரின் கட்டுரைத் தண்ணீர் பாய்ச்சி மரபுச் செடியை வளர்த்து சமூக விழிப்புணர்வு வயலில் நட்டு வைத்தேன்; பலன்கள் பின்னூட்டங்களில் அறுவடையாகின்ற மகிழ்ச்சியை யானும், கவிமகனாரும் அடைந்து கொண்டோம்; ஜஸாக்கல்லாஹ் கைரன். இன்ஷா அல்லாஹ் இந்தக் கவிம்கனார் காயல் காதர் அவர்களும் கத்தர் நாட்டிலிருந்து கவிமழையைப் பொழிவார்கள்! இன்னும் இத்தளம் இலக்கியத் தரம் மிகும்; அதிகம் பேர் வாசிக்கவும் நேசிக்கவும் தகும்.

  ReplyDelete
 8. மன உளைச்சலி வாடும் எவருக்கும் மூன்று விஷயங்கள் தேவைக்கேற்ப கிடைத்திடல் வேண்டும் அது கிட்டியோர் முகாரி ராகம் பாடத்தேவை இல்லை

  1.உணவு
  2.உறக்கம்
  3.உடலுறவு

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers