.

Pages

Sunday, March 15, 2015

[ 14 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(49)
அறிந்தவர் என்றால் அறிந்தவர்த் தன்னைப்,
பிறிதொன்றும் இல்லையே பேறு - மறிக்கும்
வலையில் விழாமலே வாழ்வார் கடலும்
அலைபோல்,அதுபோல ஆகு.

(50)
ஆகிடுமே ஆகுகவென் றானின்சொல் உண்டாகத்
தாகிக்கத் தாகம் தணித்திடும் - போகிகளின்
தேவைகளும் தீர்த்திடும் தேவையற்றான் தன்னிலே
சாவையுமே வெல்லுமாம் சாது

(51)
சாதுரியம் கொண்டே சமாளித்தே வென்றிடுவார்
ஓதுவாரே உண்மை யுணர்ந்திட - சூதுகளும்
சூழாமல் ஆகிடுமே சூன்யமாய், ஓர்மையில்
ஆழாமல் ஆகா அது.

(52)
அதுவென் றிவன்கூறல் ஆகாதே, தன்னை
அதுதன் இருப்பில் அறிய - இதுவும்
அவனதுத் தத்துவம் அன்றேல் துவிதம்
இவனதுச் சொத்தாய் இருக்கும்.

நபிதாஸ்

வெண்பா (49) 
பொருள்: யார் தன்னை அறிந்தவரோ அவரே அறிந்தவர் என்பவராவார். அவ்வாறறிந்தவரே அவரடைய வேண்டியப் பேற்றினைப் பெற்றவர் ஆவார். அவர்கள் இவ்வுலகப் பிரிவினை என்ற மாய வலையில் விழாமல் கடலும் அலையும்போல் இறைவழியைப் பற்றி வாழ்வார்கள். அவர்களே தன்னை அறிந்தவர்கள் ஆவார்கள். அதுபோல அறிந்தாகிட வேண்டும்.

வெண்பா (50
பொருள்: அமைதியே ஆன இறையாற்றல் ஆகுக என்று சொன்னவுடன் ஆகிவிடும். எவ்வாறெனில் தேவைகளான ஒன்றின் மீதின் தாகம் போகிகளுக்கு உண்டானவுடன் அதுத் தானே அத்தேவைகள் தீர்ந்து/தீர்த்துத் தணித்துவிடும். எதனையும் செய்யும் தேவையற்றான் வழிகாட்டலிலே வாழும், அமைதியே வடிவானத் தேவையுடைய போகிகளின் எண்ணங்களையும், தேவையற்றான் அவன் இவ்வாறே ஆக்கிவிடுகிறான்.    

வெண்பா (51
பொருள்: எப்படியாகப்பட்டக் கடும் சம்பவங்களையும் சமாளித்துவிடுவார்கள். வேதங்களையும் அதன் பரிபூரண உண்மைகள் தெளிந்தே உணர்ந்தே ஓதுவார்கள். கடும் சூழ்ச்சிகளும் சர்வ சாதரணமாக ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். இவாறெல்லாம் நிகழ உச்ச இறையோர்மையில் இரண்டற்ற நிலையில் ஆழாமல் ஆகாது.

வெண்பா (52
பொருள்: தான் படைக்கப்பட்டதெல்லாம் அவனின் ஆற்றல்களான என்றதனிருப்பில் அறிந்த இவன் தான் அவனென்றிவன் கூறல் ஆகாது. இதுவெல்லாம் அவனதுத் தத்துவங்களே என்றறியாவிட்டால் இணையைத் தோற்றுவிக்கும் துவிதத்தில் மூழ்கி அதுவே இவனது பிரிக்கமுடியாதச் சொத்தாக இருக்கும்.

6 comments:

  1. நற்சிந்தை உரைக்கும் அந்தாதி பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றியில் நற்சிந்தை நாடிடும் நல்உள்ளம்
      நன்றாகக் கண்டேனே நானும் - இன்பம்
      பெருகிடும் வல்லோன் பெருமையில் ஈர்த்தே
      உருகிடும் உந்தன் உணர்வு.

      Delete
  2. அறிந்துணர்வருக்கு அகிலமே அவரவர் கைக்குள்
    பரிந்துரைக்க வேண்டுமன்றோ
    பகலும் இரவும் படைப்பன்றோ

    தெளிவுபெற உம்பாக்கள்
    தெவிட்டாத வெண்பாக்கள்
    தேடிடிடு தீர்க்கமாய்
    திசையறியா வாழ்வுதனில்

    ReplyDelete
    Replies
    1. அறிந்தவர் கைக்குள் அகிலமே என்ற
      நெறிகளைச் சொன்னாய் நிறைவாய் - அறிகிறேன்
      உந்தனின் நற்சொல் உயர்வினில் உண்மைகள்
      எந்தனின் உள்ளே எடுத்து.

      Delete
  3. தமிழ் கூறும் நல்லுலகில் ..
    நபிதாஸ் அவர்களின் ..
    அந்தாதியும் இடம் பெறும்..
    என்பதில் யாதொரு ஐயமுமில்லை

    ReplyDelete
    Replies
    1. மனமே !

      எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றேநாம்
      வல்லோன் அவனை வணங்குகிறோம் - இல்லார்
      கல்லார் இருந்தாலும் காப்பான் அவனருளால்
      சொல்லால் உரிமைத் துற

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers