.

Pages

Monday, April 29, 2013

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் : அனுபவம் பேசுகிறது...

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள். 

எவ்வினையோருக்கும் இம்மையில் தம்மை இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் வேலை – தேவை. அந்த வேலைதான் அவர்களுக்கு சமுக அந்தஸ்தையும் அடையாளத்தையும்  கொடுக்கும். அந்த வேலைதான் அவர்களுக்கு வாழ்வுத்தேவைகளை நிறைவேற்றும்.  அதுமட்டுமல்லாமல் உலகத்தில் தான் ஒரு உபயோகமான நிலையில் இருக்கிறோம் என்ற மன திருப்தியை அவரவர்களுக்கு தருவதும் வேலைதான். நமக்கு பிடிக்காவிட்டாலும் மாப்பிள்ளைமார்களுக்கு வரதட்சனையை நிர்ணயம் பண்ணுவதும் வேலைதான். பெண் கூட வேலையை பார்த்துதான் கொடுக்கிறார்கள். ஒவ்வொருவரும்  ஏதாவது வேலையில் இருந்து பொருள் ஈட்டுவது அவரவர் சார்ந்திருக்கும் சமூகத்திறக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும். அந்த வேலைக்காகத்தான் படிக்கிறோம் – பட்டம் வாங்குகிறோம். கடல் கடக்கிறோம் –அன்னையை, தந்தையை ,மனைவி, மக்களை சுற்றம் நட்பை பிரிகிறோம்.

வேலையில்   திறமை காட்டுவதன் அடிப்படையில்தான் [ DELIVERING EXCELLENCE ]  நமக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும் . 
பலர் தங்களுக்கு ஒரு வேலை கிடைத்து அதில் அமர்ந்துவிட்டால் போதும் என்று நிறுத்திக்கொள்கிறார்கள்.. தங்களின் வேலையில் தேவையான திறமை காட்டுவதற்கோ அதிலிருந்து அடுத்த மேற்படிககு செல்வதற்காக தங்களுடைய தகுதிகளை உயர்த்திக்கொள்ளவேண்டுமென்றோ நினைத்து பலர் பாடுபடுவது இல்லை. பணிக்கால மூப்பின் அடிப்படையில் சட்டத்திற்கும் ஒழுங்குமுறைக்கும் உட்பட்டு வருடா வருடம் கிடைக்கும் ஊதிய உயர்வும் பதவி உயர்வுமே போதும் என்று திருப்தி அடைந்து விடுகிறார்கள் அரசு வேலையில் அமர்ந்துவிட்டவர்களுக்கு வேண்டுமானால் இந்த எண்ணம் சரியாக இருக்கலாம் அதுவும் சில நேரங்களில்தான். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அளக்கப்படும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

எனக்கு தெரிந்து இந்திய அஞ்சல் தந்தி துறையில் அலுவலராக பணிக்கு சேர்ந்து தனது ஐம்பத்திஐந்தாவது வயதில் தலைமை அலுவலராகி 58 வது வயதில் ஒய்வு பெற்றவரை தெரியும். அதே நேரத்தில் சாதா தபால்காரராக சேர்ந்து 5 வருடத்தில் அலுவலராகி 10 வருடத்தில் தலைமை அலுவலராகி 15 வருடத்தில் மாவட்ட பிரிவு நிர்வாகியாகி 52 வயதில் மாவட்ட நிர்வாகியாகி ஒய்வு பெற்றவரையும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சிலர் வேலை செய்வார்கள். ஆனால் அந்த வேலையை திருந்த செய்ய மாட்டார்கள். வேலையை திருந்தவும் சிறப்புறவும் செய்பவர்களே கவனிக்கப்படுகிரார்கள். பதவி உயர்வு பெறுகிறார்கள். அதையும் விட செய்தவேலையை மேலதிகாரிகளுக்கு அவர்களுடைய கவனத்தில் படும்படி செய்வது ஒரு கலை. இதை ACCURACY, PERFORMANCE & PRESENTATION என்று கூறலாம்.

தான் ஈடுபட்டு இருக்கும் வேலை சமபந்தப்பட்ட கல்வித்தகுதிகளை வேலை செய்தபடியே மேம்படுத்திக்கொள்வதும் ஒரு இன்றியமையாத தன்மையாகும். அதை CAREER DEVELOPMENT  என்று கூறலாம். 

ஒரு மரம வெட்டுபவன் ஒரு எஸ்டேட்டில் வேலைக்கு சேர்ந்தான். நல்ல உரம்பாய்ந்த உடல் தகுதி உள்ளவன். வேலைக்கு சேர்ந்த முதல் வாரம் 20 மரங்களை வெட்டி அடுக்கினான். அடுத்தவாரம் அவனால் 15 மரம்தான் வெட்ட முடிந்தது. அதற்கு அடுத்தவாரம் 10  மரங்களே வெட்ட முடிந்தது. நேராக தனது முதலாளியிடம் போனான். தனது பிரச்னையை சொன்னான். தன்னால் எவ்வளவு உழைத்தும் முன்பு போல் அதிக மரங்கள் வெட்ட முடியவில்லை என்றான். முதலாளி சிரித்துக்கொண்டே அவன் கையில் இருந்த கோடாரியை வாங்கிபார்த்தார். அது கூர் தீட்டப்படாமல் மழுங்கி இருந்தது.

மரம்வெட்டியிடம் இவ்வாறுகூறினார். கோடாரியின் முனை தீட்டப்படாத காரணத்தால் உன்னால் முன்புபோல் அதிக மரம வெட்ட முடியவில்லை . அவ்வப்போது கோடாரியை கூர் தீட்டி மரம வெட்டு என்றார். அதன்படி செய்ததால் அவனால் மீண்டும் 20   மரம வெட்ட முடிந்தது. 

மரவெட்டிக்கு சொல்லப்பட்டது பணியில் உள்ள எல்லோருக்கும் பொருந்தும் . கோடாரியை அடிக்கடி கூர் தீட்டிக்கொள்வதுபோல் தனது துறை சம்பந்தப்பட்டவைகளில் அடிக்கடி நமது அறிவை கூர் தீட்டிக் கொள்ளவேண்டும்.  அன்றாடம் படும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் இதைத்தான் பட்டறிவு என்று கூறுவார்கள். 

இளநிலை பட்டதாரியாகி வேலையில் சேர்பவர்கள் தான் சேர்ந்து இருக்கும் துறை சம்பந்தப்பட்ட முதுகலையை அஞ்சல் வழியாக கற்கலாம். அத்துடன் துறை சம்பந்தப்பட்ட போட்டி தேர்வுகளில் படித்து கலந்து கொள்ளலாம். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தங்கள் செலவிலேயே பயிற்சி GLOBAL ENGLISH TRAINING , ORACLE,  PREMVIERA, ACONEX , QUALITY CONTROL, QUALITY ASSURANCE, HEALTH & SAFETY, ENVIRONMENTS போன்ற வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.  ஆனால் பலர் அதில் பங்கெடுப்பது இல்லை .தோற்றுவிட்டால் என்ன செய்வது என்ற பய உணர்வும் காரணமாக இருக்கிறது. 

கட்டிட பொறியாளர்கள் பலருக்கு AUTOCAD  இயக்க தெரியாது . அதனால் அவர்களுக்கு உயர்வு தடைபடும். சிவில் மட்டும் தெரிந்து பணியில் சேர்பவர்கள் அதை தொடர்ந்து மெகானிகல் , எலெக்ட்ரிகல் , உள்அரங்க டிசைன், பிளம்பிங்க் போன்றவைகளையும் அதன் மென்பொருள் பயன்பாடுகளையும் கற்று தெரிந்து தன்னை மேம்படுத்திக்கொள்வது அவரவர் வாழ்வில் தங்கப்பதக்கத்தில் ஒரு முத்து பதித்தது போலாகும். 

அலுவலகத்தில் தேநீர் கொடுத்துக்கொண்டு – கழிவறை சுத்தம் செய்து கொண்டிருந்த  ஒருவர் தனது முயற்சியால் கூட இருந்தவரிடம் கேட்டு கேட்டு கணிப்பொறி கற்று , இன்று ACONEX, PREMVIERA  போன்ற மென்பொருள் பயன்பாடுகளை கற்று அறிந்து டாகுமென்ட் கண்ட்ரோளராக பணிபுரிகிறார். [ ஜாபர் சாதிக் ]

அதேபோல் பத்தாவது மட்டும் படித்த ஒருவர் – கட்டிடத்தொழிலாராக வந்தவர் -இன்று நிறுவனம் நடத்திய ORACLE TRAINING- ல் துணிவுடன் பங்கேற்று  நேரகண்காணிப்பாளராக ( TIME –KEEPER)  பிளந்து கட்டுகிறார்.  (ராமமூர்த்தி)

எடுபிடி உதவியாளராக ( HELPER ) பணியில் சேர்ந்த பலர் எனக்கு தெரிந்து ஒரு தனிப்பட்ட தொழிலை தெரிந்தவர்கூடவே இருந்து கற்றுக்கொண்டு கொத்தனார்களாக, பிளம்பர்களாக, உருவெடுத்துவிட்டதுடன் அதில் திறமையும் காட்டி வருகிறார்கள். ( எவ்வளவோ பேர்கள்)

அடிப்படை கல்வி அறிவு அவ்வளவாக பெற்றிராத ஒருவர் தனது பணியின் ஈடுபாடு , அர்ப்பணிப்பு, ஒழுங்கு, நேரம் தவறாமை, காரணமாக உதவி கட்டிட பொறியாளராக உயர்வு பெற்றுள்ள உண்மை கதையும் உண்டு.  ( கார்த்திக்)
நிறைய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை புடம்போட்டு எடுக்கவும் –வெளிநாடுகள் அனுப்பிகூட மேற்கல்வி கற்றுவரவும் அனுப்புகிறார்கள். இதற்காக வருடத்துக்கு இவ்வளவு என்று நிதி ஒதுக்குகிறார்கள். 

இந்த கணிப்பொறியுகத்தில் மாற்றங்கள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கின்றன. இன்று உள்ள ஒரு செயல்பாடு நாளை புதிய ஒரு உருவில் வருகிறது. ஆகவே மாற்றங்களை, வளர்ச்சிகளை தொடர்ந்து கவனித்து வருவோர்களே – அதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்பவர்களே தங்களின்  உயர்வான மாற்றங்களுக்கு தாங்களே வழி வகுத்துக்கொள்வார்கள். 
அப்படி தன்முயற்சி, விடா முயற்சி, செய்தொழில் திறமை, அர்ப்பணிப்பு, உடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது மனித வள மேம்பாட்டுதுறைகளின் தலையாய பணிகளில் ஒன்றாகும். [ RECOGANIZE AND REWARD ].

அடை காக்கப்படும் முட்டையிலிருந்து  கோழிக்குஞ்சுகூட தன் தோட்டை இளம் அலகால்  கொத்தி கொத்தித்தான் உடைத்துக்கொண்டு வெளிவருகிறது. இன்றைய உலகில் ஏற்றம் பெற எல்லா வசதிகளையும் பெற்றுள்ள நாம் முயன்றால் முடியாதது இல்லை - இறையருளால்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

8 comments:

 1. உயர்வுக்கு ..வழிகாட்டும் ஆக்கம் ...

  மனித வள மேம்பாட்டு துறை வல்லுனரின் ஆக்கம்

  என்பதை அப்பட்டமாக வெளிகொணர்ந்த ஆக்கம்

  ReplyDelete
 2. அருமையாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...

  எந்த ஒரு வேலையையும், யார் வந்தாலும் வராவிட்டாலும், சிறப்பாக அந்த வேலையை செய்யும் வல்லமை பெற்றவர்கள் விரைவில் தான் நினைத்ததை அடைவார்கள்... தான் சென்றால் / இருந்தால் தான் வேலை நடக்கும் / நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதே நிலையிலிருந்து முன்னேற சிரமம் தான்...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 3. அய்யா சரியாகச்சொன்னீர்

  · முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
  · முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.
  · அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்.
  · கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
  · எறும்பூரக் கல்லும் தேயும்.

  ReplyDelete
 4. வேலை என்பது நம் வாழ்வில் ஓர் அங்கம்.செய்யும் வேலையை திருந்தச்செய்வதும் செய்யத்தெரியா வேலையையும் சீரிய முயற்ச்சியில் செய்ய கற்றுக்கொள்வதும் மனிதனை மென்மேலும் உயரச்செய்யும் என்பதனை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

  அருமையான ஆக்கம். மனிதனை மென்மேலும் மேம்படுத்த உதவும் மனித வள மேம்பாட்டுத்துறை நிபுணரின் மகத்தான ஆக்கம்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை... கடின உழைப்பே உயர்வான வெற்றிக்கு வழி

  பேசுகின்ற - பேசப்பட வைக்கிற அனுபவம்...

  அழகிய எழுத்து நடையில் தந்த மூத்த எழுத்தாளரும் / மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணருமாகிய இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பதிவுக்கு நன்றி.

  நல்ல ஆக்கம். பாராட்டுக்கள்.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 7. அருமையான பதிவு அழகாக சொன்னீர்கள் உங்களின் இந்த ஆக்கம் அடிமட்ட வேலை ஆட்களில் இருந்து முதலாளி வரை பொருந்தும்.யாராக இருந்தாலும் முயற்ச்சி வேண்டும் என்பது உறுதி.(முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்)என்ற பழமொழி இதன் விளக்கம் அருமை. விழிப்புணர்வு மிக்க ஆக்கம் வாழ்த்துக்கள் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு.

  ReplyDelete
 8. அன்பான சகோதரர்களே!

  இந்த ஆக்கத்தைப் படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிகுந்த நன்றி.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers