.

Pages

Thursday, June 6, 2013

அழிவில் வாழ்வா

கலவரம்
அது இங்கே தினம் வரும்

அது வரும்போதெல்லாம்
வெறுமனே நிற்கும்
... சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும்

தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச்
சிதைந்து கிடக்கும் சகோதரா
திடீர்த் துவேசம் உன்னைத்
துண்டாடித் துண்டாடி
வெறியின் பசிக்குத் தீனியாக்கிவிட்டதா

முதலில் என் கருணைக் கரங்களை
உன் கண்ணீர் துடைக்கவே
நான் நீட்டுகின்றேன்

இது ஓரிரு நிமிடங்களில்
காய்ந்துபோகும் ஈர ஒத்தடம்தான்
இதனால் உன் உயிருக்குள்
கொதி கொதித்துக் குமுறும் நெருப்பு ஊற்றுகள்
நிச்சயமாய் நிற்கப்போவதில்லைதான்

ஆகையினாலேயே
நிரந்தர நிவாரணத்தின் விடியல் கீற்றாய்
இந்தக் கவிதை உருவாக வேண்டும்
என்ற உயிர்த் தவிப்போடு
என் வார்த்தைகளை உருக்கி உருக்கி
உன்முன் வார்க்கிறேன்

நீயோ -
இன்றைய வெறிச் சூறாவளியில்
வெற்றிகண்ட இனத்தின்
துவம்ச வதைகளால் குதறப்பட்ட
தளிர்க்கொடியாய் இருக்கலாம்

அல்லது -
தோல்விகண்ட இனம் துவைத்துக் கிழித்து
துயரக் கொடியில் தொங்கவிட்ட
நைந்த ஆடையாய் இருக்கலாம்

நீ யாராய் இருந்தாலும்
என் கரிசனம் மட்டும்
உனக்கு ஒன்றுதான் சகோதரா

இன்று நான்
உனக்குச் சொல்லும் சேதியை
உன் மூளையின் மத்தியில்
ஓர் சுடராக ஏற்றிப்பார்

இங்கே
கண்ணீரை முந்திக்கொண்டோடும்
உன் இரத்த அருவியை
நாளை அங்கே ஓடும்
மரண காட்டாறாய் மாற்றிவிட
நீ குறிவைத்து வெறிகொள்வதில்
நிச்சயம் நியாயம் இருக்கிறதுதான்

தன்மானமென்பது கடைப்பொருளல்ல
அது உன் உயிர்ப் பொருள்தான்
உன்னத உணர்வுகளின் கருப்பொருள்தான்

கருகிக் குவிந்து கிடக்கும்
கணக்கற்ற சடலங்கள்
உன் சுற்றமும் நட்புமல்லவா
நொறுங்கி நீராகிக் கிடப்பது
உன் உடலும் உள்ளமுமல்லவா

ஆயினும்
என் அன்புச் சகோதரா
உன்னிடம் எனக்கொரு கேள்வியுண்டு

உன் நிதான நிமிடங்களின்
நிழல்மடி அமர்ந்து
எனக்கொரு பதிலைச் சொல்

வெற்றி என்பது என்ன சகோதரா

முட்டாள் கரமெடுத்து
மூர்க்க அரிவாள் வீச்சில்
மூடத் தலைகளை
முடிவற்று வெட்டிச் சாய்ப்பதா

இல்லை சகோதரா
இல்லை

தலைகள் எடுப்பதால்
உன் தலையும் ஓர் நாள்
குறி வைக்கப்படுகிறது
என்பதை நீ மறக்கலாமா

இன்று தப்பலாம் உன் தலை
அது என்றும் தப்புமா சகோதரா

இன்றும் கூட
உன் தலைக்குப் பதிலாய்
இங்கே உருண்டோடிய உன்
இனத்தின் தலைகள்தாம் எத்தனை எத்தனை

வாழ்வில்
அழிவு வரும்தான்
ஆனால் -
அழிவில் வாழ்வு வருமா

சரித்திரம் பார் சகோதரா
வந்தபின் ஒத்தடம் அறிவீனமல்லவா
வருமுன் வேரறுப்பதே வெற்றியல்லவா

ஒருமுறை
அந்த இரத்தக் காட்டேறி
நம்மை நசுக்கி அரைத்து
நகைப்புக் காட்டி நகர்ந்துபோய்விட்டது
மீண்டும் அதையே வரவேற்று நீ
சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா

என்னருமைச் சகோதரா
இனி நீ செய்யச் சிந்திக்கவேண்டிய
காரியமென்ன தெரியுமா

மூட வெறியர்களின் மூர்க்க வேட்டுகள்
முற்றும் துளைக்காத கேடயமாய்
உன்னை நீ உருவாக்கு

கையரிவாள்களை
கண்தொடா குழிக்குள் கடாசிவிட்டு
உன் மனோ பலத்துடன் மீண்டு வா

எது கேடயம் என்று நீ கேட்டுத் தவிப்பது
எனக்குத் கேட்கிறது சகோதரா

கேள்

பொருளாதார மேன்மை
மனோதிடச் செல்வம்
பேரறிவுப் பெருநெருப்பு

இவையே
எந்தக் கொம்பனும் நெம்பமுடியாத
பூரண அரண்கள் உனக்கு

அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே வேண்டும்
இந்தக் கேடயங்களல்லவா உனக்கு வேண்டும்

எந்த நாய் நரியும் உன்
அழுக்கையும் தொடத் துணியாத
உயர் நிலையை உன் உள்மூச்சடக்கித்
தவமிருந்து உனதாக்கு

வெட்டிக் கொண்டு சாவதை
வீர மரணம் என்று
முட்டாள் கோஷம் போடாதே

ஒப்புகிறேன்
வீடு புகுந்து நம் பெண்களின்
முந்தானை இழுக்கும் மூர்க்கக் கரங்களை
முழுதாய்க் கொய்வது முறையான செயல்தான்
சகோதரா

அதில் மரணம்
உன் மண்ணின் பெருமைக்கும்
தன்மான உணர்வுக்கும்
மனிதகுல இனத்திற்கும்
மகத்தான தொண்டுதான்

ஆனால்
நடந்து முடிந்த களத்தில்
வீரம் கொள்வதென்பது
இனி வரும் சந்ததிப் பெண்களின்
முந்தானையையும் இழுக்கக் கொடுக்க
இன்றே கையப்பமிடும் சாசனமல்லவா

'வெட்டு' என்பது
என்றும் விட்டுப் போகும் விசயமா
வெட்டாமையே பேரறிவல்லவா

சாவதா வாழ்க்கை
வாழ்வதன்றோ வாழ்க்கை

வீசியெறிந்த விதை
விழுந்த இடம் முளைக்கும்
வெட்டிச் சரிந்த கிளை
தரை தொட்டதும் துளிர்க்கும்
உலகின் உயிர்கள் வாழ்வதற்கே
அதை உணர்த்தும் இயற்கையை
உற்றுப்பார் சகோதரா

வெறியரின் தலைகளை வெட்டிச் சாய்ப்பது
உனக்கு வெற்றியா தோல்வியா

தொடரும் அழிவுகள் என்பது
எக்காலத்தும் எவர்க்கும்
தோல்விதானே சகோதரா

அன்று
அணுகுண்டால் அழிந்தது ஜப்பான்
இன்றோ அது தன் உழைப்பின் வெற்றியோடும்
பொருள்வளப் பெருக்கோடும்
அறிவுச் சுடர் ஏற்றி உள்ளத் திண்மை பூட்டி
உலகை வென்றே உலா வருகிறதே
அந்தப் பேரெழில் கண்டாயா

அதுவன்றோ வெற்றி
அதுவன்றோ வீரம்
அதுவன்றோ வாழ்வு

மீண்டும் ஓர்
அணுகுண்டுப் போரென்று
அடிபட்ட ஜப்பானும் தாழ்ந்து போனால்
புல்லும் பூண்டும் கூட எங்கும் மிஞ்சுமோ

என் அன்புச் சகோதரா
இரத்தப் பாளமான உன் நெற்றியை
அறிவென்னும் நெருப்புக் கோடுகள்
அழுத்தமாய்ப் பதிய
சுருக்கிச் சுருக்கிச் சிந்தித்துப் பார்

இன்றின் அவலம் மற
மூட வெறிக்கு முக்கியத்துவம் தராதே

நாளையேனும்
நல்வாழ்வு என்னும் நெடிய சுகம் தேடி
உன் நெஞ்சோடு போராடு
நல்ல விடையோடு எழு

வாழ்க்கை ஒருமுறைதான்
அதை மூடருடன் முட்டிக்கொண்டு
முடித்துக்கொள்ளல் அறிவீனம்

காயங்களைச் செப்பனிட்டு
உன் கேடயங்களைத் தேடு

அந்த அறிவு வெளிச்சம்
உனக்குள் பட்டுத் தெறிக்க
சின்னதாய் ஒரு தீ மொட்டையேனும்
பூக்கவைத்தால் மட்டுமே

இது ஒரு கவிதை
சகோதரா
அன்புடன் புகாரி

6 comments:

  1. /// பொருளாதார மேன்மை...
    மனோதிடச் செல்வம்...
    பேரறிவுப் பெருநெருப்பு...

    இவையே பூரண அரண்கள் ///

    உணர வேண்டிய வரிகள் பல... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மனித பேரழிவை ..

    புகாரி எனும் கவி

    கவி பூக்களால் அரண் அமைத்த விதம் அருமை

    இந்த அரனை எந்த கொம்பனாலும்..நெம்ப முடியாது

    ReplyDelete
  3. அழிவில் வாழ்வா...!?

    அருமையான தலைப்பிட்டு உலகில் நடக்கும் வன்முறைகளுக்கு விடயம் சொல்லி உள்ளக்குமுறளை கவிதையாய் வரைந்த விதம் அருமையிலும் அருமை.

    வாழ்த்துக்கள் அன்புடன் நண்பரே.!

    ReplyDelete
  4. வெட்டு குத்து என இறங்குவோருக்கு நல்லதொரு எச்சரிக்கை !

    கவிதையில் அழகிய விழிப்புணர்வு

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அருமையான கவிவரிகள் நாட்டில் நடக்ககூடிய அவலநிலைக்கு ஒரு பதிவு வாழ்த்துக்கள் அதிரை புஹாரி அவர்களே.

    ReplyDelete
  6. காலத்துக் கேற்ற கவிதை. சீரிய சிந்தனைகள். சிறப்பான அறிவுரைகள்.

    தலைவர்கள் மரம வெட்டிகளாக இருந்தால் தொண்டர்கள் காடுவெட்டிகளாக மாறுவார்கள்.

    தலைவர்கள் சிறுத்தைகளாக இருந்தால் தொண்டர்கள் கழுத்தைத்தான் குறிவைப்பார்கள்.

    அத்து மீறும் அனைவருக்கும் பொருந்தும் கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers