.

Pages

Thursday, May 7, 2015

[ 20 ] அவன் அடிமை: வெண்பா அந்தாதி

(73)
நம்பிக்கை எண்ணம் நடந்திட ஏகனே
நம்மிலே நாடிடும் நாடகம் - நம்புவோர்
நம்புதலில் தம்மை நன்கே நிலைத்திட
நம்பிக்கை வெல்லுமே நம்பு

(74)
நம்பிக்கை மோசங்கள் நல்லவர்போல் வேசங்கள்
அம்பலமே ஓர்நாளில் ஆகிவிடும் - அம்புகள்
ஒவ்வொன்றாய் பாய்ந்திடுமே, ஓரமாகஒண்டியாக
ஒவ்வொருநாள் செல்லும் உணர்

(75)
உணர்த்திடும் ஒவ்வொன்றில் உள்நோக்கிச் செல்ல
இணக்கமாய் எல்லாம் இருக்க - உணர்பவர்
ஒன்றிலே தன்னை உணர விளங்குவாரே
ஒன்றிலே நிற்குமெல்லாம் ஒத்து

(76)
ஒத்துழைப்பு வேண்டுமெனில் ஒத்தமனம் ஆகிடனும்
ஒத்தமனம் அர்ப்பணிப்பில் உண்டாகும் - நித்தியனில்
ஒத்துப்போய் ஒன்றிலாகி ஒன்றிட சத்தமில்லா
ஒத்தனாய் நிற்பாய் உணர்ந்து

நபிதாஸ் (தொடரும்)

வெண்பா (73
பொருள்: நம்பிக்கைக்கொள்வோர் தன் நம்பிக்கையில் உறுதியாக நின்றிட நம்பிக்கை நடந்தே வெல்லும். ஏனென்றால் நம்பிக்கை எண்ணம் நம்மில் உண்டாக ஏகனே நாடிடும் நாடகம். எனவே நம்பிக்கையில் தளர்ந்திடாதே.

வெண்பா (74
பொருள்: நல்லவர்போல் வேசங்கள் போட்டுக்கொண்டு நம்பிக்கை மோசங்கள் செய்து வந்தால் ஏதாவது ஒருநாளில் அது அம்பலம் ஆகிவிடும். அப்பொழுது அம்மோசத்தால் பாதிப்புகுள்ளானவர்களின் துன்புறுத்தல் என்ற அம்புகள் ஒவ்வொன்றாய் அவர்மேல் பாய்ந்துக்கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் ஒருவர்கூட துணைக்கு வரமாட்டாட்கள். ஒவ்வொருநாளும் வேதனையில் தனிமையிலே நரக வாழ்வாகச் செல்லும் என்பதை உணர்ந்து அந்நிலை ஏற்படாமல் நல்லவனாக வாழ் என்பதேயாகும்.

வெண்பா (75
பொருள்: ஒவ்வொன்றிலும் அது எப்படி? ஏன் ? எதனால் ? போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அதனுள் உள்நோக்கிச் செல்ல, எல்லாமே ஒன்றுக்கொன்றுத் தொடர்புடைய ஒரு இணக்கத்தில் இருக்கின்றதென்பதை அது உணர்த்திடும். அவ்வாறு உணர்பவர் அவ்வொன்றிலே தன்னையுணர ஒன்றிலே அவ்வொன்று பலவாக ஒன்றுக்கொன்று தொடர்புடைய இனக்கத்தில் இருக்கின்றது என்பதை விளங்குவார்.

வெண்பா (76
பொருள்: எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டுமெனில் எல்லோரும் தங்கள் மனநிலையில் எதற்கு ஒத்துழைப்பு வேண்டுமோ அதில் ஒத்தமனமுடைய என்ற ஒத்த விருப்பமுடையவர்களா இருக்க வேண்டும். அத்தகைய ஒத்தமனம் விட்டுக்கொடுத்தல் என்ற அர்ப்பணிப்பில் உண்டாகும். அதுபோல் நித்தியன் என்ற நிலையான எங்கும் நிறைந்த ஏகனில், வேற்றற்ற ஒன்றே என்ற ஒத்தக்கருத்துடையத் தாம் ஒத்துப்போய் ஒன்றிலாகிட,  ஒன்றே பலவாக இருக்கின்றநிலையான ஒத்தனாக நிற்பதை உணர்ந்துக்கொள்வாய் என்பதாகும்.

4 comments:

  1. நம்பியவர் வெம்பினாள்
    வெம்பிய மனத்தினில்
    வெகுண்டெழும்
    வேதனை உச்சங்கள்

    சந்திப்பர் சாகுமுன்
    சன்னதியர் தூற்றுவர்
    எஞ்சிய வாழ்க்கையும்
    எமனாகி நிற்குமுன்
    செய்திடு நன்மையை
    செல்லுமிடம் கொண்டு செல்ல

    ReplyDelete
  2. நம்பினோர் வெம்ப நரகம் தொடர்ந்திட
    வம்புகள் தோன்றிடும் வாய்ப்பு - எம்மெய்சாச்
    சொன்னதும் உண்மையே சொற்பப் பொழுதாகின்
    நன்மையைச் செய்யவே நாடு.

    ReplyDelete
  3. பொருள்: நல்லவர்போல் வேசங்கள் போட்டுக்கொண்டு நம்பிக்கை மோசங்கள் செய்து வந்தால் ஏதாவது ஒருநாளில் அது அம்பலம் ஆகிவிடும். அப்பொழுது அம்மோசத்தால் பாதிப்புகுள்ளானவர்களின் துன்புறுத்தல் என்ற அம்புகள் ஒவ்வொன்றாய் அவர்மேல் பாய்ந்துக்கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் ஒருவர்கூட துணைக்கு வரமாட்டாட்கள். ஒவ்வொருநாளும் வேதனையில் தனிமையிலே நரக வாழ்வாகச் செல்லும் என்பதை உணர்ந்து அந்நிலை ஏற்படாமல் நல்லவனாக வாழ் என்பதேயாகும்....

    கபட நாடகம் ஆடுவோருக்கு நல்ல எச்சரிக்கை ..புத்தகமாக வர வேண்டிய படைப்பு

    ReplyDelete
  4. கபடம் மனதில் களையக் கருத்தாய்
    அபசக் குணம் அவிழ்த்தோம் - அபத்தம்
    அறிந்தும் சுபாவம் அதிலேயே வீழ்தல்
    அறியப் படைப்பும் வரும்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers